சிறப்புக் கட்டுரை செய்திகள் விளையாட்டு

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்

உருத்திரபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த கண்ணன் சூரியகலா தம்பதிகளின் புதல்வனான தேனுசன், 19வயதிற்குட்பட்ட இலங்கை உதைபந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளார்.

இந்த மாதம் நேபாளம் நாட்டில் நடைபெற இருக்கும் தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான SAFF (South Asian Football Federation) கிண்ண போட்டியில் பங்கு பெறும் இலங்கை அணியில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டுக்கழக முன்னணி வீரர் தேனுசன் இடம்பிடித்திருக்கிறார்.

சிறு வயதிலிருந்தே உதைபந்தாட்டத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த தேனுசன் பாடசாலை மட்ட போட்டிகளில் மாத்திரமல்ல கழக மட்ட போட்டிகளிலும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த பல போட்களின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார்.
தரம் 1 இலிருந்து உயர்தரம் வரை உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் கல்விகற்றுக் கொண்டிருக்கும் (அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்ற இருக்கிறார்) தேனுசன் உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்தின் முன்னணி வீரனுமாவான்.

15 வயதிற்குட்பட்ட பிரிவு போட்டிகளிலிருந்து 20 வயதிற்குட்பட்ட பிரிவு போட்டிகள் வரையில் அத்தனை போட்டிகளிலும் கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியால அணியினை மாகாண மட்ட போட்டிகளுக்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியவன். தவிர “சமபோசா” 15 வயதிற்குட்பட்ட உதைபந்தாட்ட தொடரில் கிளிநொச்சி உருத்திரபுரம் மகாவித்தியாலயம் தேசிய மட்டத்தில் காலிறுதி வரை முன்னேற முக்கிய பங்காற்றியவன். உருத்திரபுரம் மகா வித்தியாலய பழைய மாணவர்களால் “கிளிநொச்சி மாவட்ட” பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்படும் “அமரர் கமலாவதி கிண்ணம்” சுற்றில் இதுவரை இரண்டு தடவை உருத்திரபுரம் மகா வித்தியாலயம் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரிக்க காரணமாக இருந்தவன்.

16 வயதில் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக “ஏ” அணியில் உள்வாங்கப்பட்ட தேனுசன் இன்றுவரை முன்கள வீரனாக விளையாடிக் கொண்டிருக்கிறான்.

2018 ம் ஆண்டு FA கிண்ண தொடரில் 7 கோல்களை உருத்திரபுரம் விளையாட்டுக்கழகத்திற்காக பெற்ற தேனுசன், உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் முதல் 16 அணிகளுக்குள் முன்னேறுவதற்கான முக்கிய பங்காற்றியிருக்கிறான். கிளிநொச்சி மாவட்ட உதைபந்தாட்ட வரலாற்றில் FA கிண்ண தொடரில் முதல் 16 இடத்திற்குள் முதன் முதலில் முன்னேறிய அணி உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தவிர 2018 ம் ஆண்டு பருவகால NEPL தொடரில் “கிளியூர் கிங்ஸ்” அணியின் முன்கள வீரனாக களமிறக்கப்பட்ட தேனுசன் இந்த தொடரில் இரண்டு தடவை “ஆட்ட நாயகன்” விருது பெற்றிருக்கிறான். 2018ம் ஆண்டு பருவகால NEPL தொடரில் “கிளியூர் கிங்ஸ்” அணி இறுதிப் போட்வரை முன்னேறியிருந்தது. தவிர 16 வயதில் களமிறங்கிய தேனுசன் 2018 ம் ஆண்டு பருவகால NEPL தொடரில் வயது குறைந்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் பங்கெடுக்கும் அத்தனை போட்டிகளிலும் முன்கள வீரனாக களமிறங்கும் தேனுசன் பெற்றுக் கொண்ட கோல்கள், ஆட்ட நாயகன் விருதுகள் ஏரானமானவை.

தேனுசனின் உதைபந்தாட்ட பாதையில் ஆரம்பம் முதலே பயிற்சிகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வந்தவர் உருத்திரபுரம் விளையாட்டுக்கழக முன்னணி வீரர் பிரதீஸ். தவிர இலங்கை தேசிய அணி வீரர் ஞானரூபன், தேசிய அணி பயிற்றிவிப்பாளர் தேவசகாயம் (2018 NEPL பயிற்றிவிப்பாளர்), ரட்ணம் அணியின் பயிற்றிவிப்பாளர் ரகுமான் (2018 NEPL பயிற்றிவிப்பாளர்) போன்றோரிடமும் பயிற்சிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேனுசனை இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் காண்பதையிட்டு உருத்திரபுரம் கிராமம், உருத்திரபுரம் மகா வித்தியாலயம், உருத்திரபுரம் விளையாட்டுக்கழகம் மாத்திரமின்றி கிளிநொச்சி மாவட்டமும் பெருமை கொள்கிறது. சரியான பயிற்சியும், வழிகாட்டல்களும் கிடைத்தால் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்பது தேனுசன் முன்னுதாரணமாக கிளிநொச்சி மாவட்ட இளையோருக்கு திகழ்வார்.

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் முதன் முதலாக கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து இடம் பிடித்திருக்கும் தேனுசன் தொடரந்து வெற்றிப் பாதையில் பயணிக்க எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related posts

மனைவியை துஷ்பிரயோகம் செய்யக் கட்டாயப்படுத்தியவர் உட்பட ஐவர் கைது

G. Pragas

கோத்தாவுக்கு மீண்டும் தலையிடி ஆரம்பம்

G. Pragas

இரண்டாவது நாளாகத் தொடரும் பணிப்பகிஷ்கரிப்பு

thadzkan

Leave a Comment