ஈழத்து இலக்கிய இதழியல் சாதனையாளரும் மூத்த இலக்கியவாதியுமான டொமினிக் ஜீவா இன்று (28) மாலை தனது 94 வது வயதில் காலமானார்.
டொமினிக் ஜீவா “மல்லிகை” எனும் மாதத் சஞ்சிகை ஆரம்பித்து 2012 நவம்பர் – டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து பதிப்பித்தவர். நாற்பத்தி எட்டு வருடங்கள் 401 இதழ்களை வெளியிட்டு பெருமை சேர்த்தவர்.
இவர் இலங்கையில் சாகித்திய மண்டலத்தின் சிறுகதைகளுக்கான சாகித்திய மண்டலப் விருதை முதன் முதலாகப் பெற்ற புகழுக்குரியவர். அடுத்தடுத்து இரு தடவைகள் அவ்விருதினைப் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த ஜோசெப்-மரியம்மா தம்பதிகளின் இரண்டா வது புதல்வராக 1927ம் ஆண்டு ஜுன் மாதம் 27ம் திகதி இவர் அவதரித்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் டொமினிக் என்பதாகும். பெற்றோர்கள் சிகை அலங்கார தொழிலாளர் பரம்பரையை சேர்ந்தவர்களாவர். அதன் காரணமாக இவர் பல சமூக குறைபாடுகளை எதிர் கொண்டிருந்தமை குறிப்பிடத் தக்கதாகும்.
இளமைப் பருவத்தில் இவர் யாழ். சென். மேரிஸ் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் இவரைப் பார்த்து சாதியின் பெயரைக் குறிப்பிட்டு பேசியதால் மனம் நொந்து ஐந்தாம் வகுப்புடன் தனது கல்வியை நிறுத்திக் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய சாலியானார்.
அவ்வாறு வெளியேறியவர் தான் இன்று உலக அரங்கில் அனைவராலும் அங்கீகரிக்கப்படும் ஒரு இலக்கிய கர்த்தாவாக மாறியிருந்தார்