in ,

உடலை சீரழிக்காது தகனம் செய்ய உதவுமாறு கொவிட்டால் உயிரிழந்தவர்களின் உறவுகள் கோரிக்கை!

கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களை இறுதி நேரத்தில் பார்க்க முடியவில்லை. தகனத்தையாவது உடனடியாக செய்து ஆத்ம சாந்திக் கிரியைகளை செய்வதற்கு உதவுமாறு மரணித்தவர்களின் உறவினர்கள் உருக்கமாக கோரியுள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வவுனியாவில் கொரோனாத் தொற்று காரணமாக மரணித்த 20 வரையிலான உடலங்கள் இதுவரை தகனம் செய்யப்படாத நிலையில் வவுனியா மருத்துவமனையில் உள்ளன. சில உடலங்கள் கடந்த 8 நாள்களாக தகனம் செய்யப்படாத நிலையில் உள்ளன.

இந்நிலையில், கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்த தமது குடும்ப உறவுகளை குடும்பத்தினர், உறவினர்கள் முழுமையாக பார்வையிட்டு அஞ்சலி செலுத்த முடியாத நிலை உள்ளது. தகனம் செய்து, அஸ்தியைப் பெற்று ஆத்ம சாந்தி கிரியைகள் மூலமே உயிரிழந்த உறவுகளின் சோகத்தை ஆற்ற முடிகின்றது. அதனைக் கூட செய்ய முடியாது பல நாள்களாக உயிரிழந்தவரின் உடல்களை தகனம் செய்யாது, இறந்த பின் கூட உடலை நீண்ட நாள் வைத்து உருக்குலைக்காதீர்கள். இது அவர்கள் உயிரிழந்த பின் கூட நிம்மதியாக தகனம் செய்ய முடியவில்லையே என்ற வேதனையைத் தருகின்றது. உயிரிழந்த துயரைக் காட்டிலும் உடலத்தை வைத்து இழுத்தடிப்பதால் வரும் துயரத்தை தாக்க முடியவில்லை.

எனவே, உரிய அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக தகனம் செய்வதற்கு உதவ வேண்டும் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை, வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மின் மாயானம் கடந்த சில நாள்களாக பழுதடைந்து காணப்பட்டமையால் உடலங்கள் தேக்கமடைந்திருந்ததாகவும், தற்போது மீண்டும் இயங்குகின்ற போதும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 6 உடலங்களையே குறித்த மின் மாயானத்தில் தகனம் செய்ய முடிவதால் தாமதநிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் உடலங்களை எரிப்பதற்கான பெயர் விபரங்கள் கட்டணம் செலுத்தப்பட்ட அடிப்படையில் நகரசபையினால் தரப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பூம்புகார் கொலை கூட்டுக்கொலை என சந்தேகம்! ஒருவர் கைது!

மதுபானசாலைகள் திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் கைது