சிறப்புக் கட்டுரை செய்திகள்

உளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்

உலக சுகாதார அமைப்பு (WHO), உலக உளநல மருத்துவ அமைப்பு (WFMH) ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில் உளநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் அக்டோபர் 10ஆம் திகதி உலக உளநல தினமாக அனுசரிக்கப்பட்டுவருகின்றது. “உளநல ஊக்குவிப்பும் தற்கொலைத்தடுப்பும்” எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டிற்கான உளநல தினமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உடலில் எவ்வித நோயும் இல்லாமல் இருப்பது மட்டும் ஆரோக்கியமாகி விடாது. ஒருவர் மனநலம், உடல் நலம் மற்றும் சமூக நலம் ஆகியவற்றை ஒரு சேரப் பெற்றிருந்தால் மட்டுமே, அவரை ஆரோக்கியமானவராக கருதலாம் என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது.

‘மனது’ என்பது மூளை சம்பந்தப்பட்டது. மூளையின் செயல்பாடுதான் மனதாக உணரப்படுகிறது. நீண்ட கால சோகம், வேலையின்மை, ஏமாற்றம், ஏக்கம், தொடர் தோல்வி, அதிகமான மதுப் பழக்கம், ஆகியவை மன வடு உருவாவதற்கான சில பங்களிப்பு காரணங்களாகக் கருதப்படுகின்றன.

உள நலம் பாதிக்கப்படுதல் என்பது ஒரு சமூக பிரச்சினை. குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் தாக்கும். உள நல பிரச்சினைகளையும் அதன் அறிகுறிகளையும் தெரிந்துகொள்வதே, அதிலிருந்து மீள்வதற்கான முதல் படி. சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒருவரின் சிந்தனையில், செயல்பாடுகளில், நடத்தை மற்றும் உணர்வுகளில், அவர் இருந்த நிலையிருந்து வித்தியாசமோ, தீவிரமோ தெரிந்தால், அது உள நல பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம்.

அப்படி வரும் அறிகுறிகள் ஒருவரிடம் தொடர்ந்து காணப்பட்டால், உடனடியாக, உள நல மருத்துவர் அல்லது உளவள உத்தியோகத்தர்கரிடம் அழைத்துச் செல்ல வேண்டியது மிகவும் அவசியம். ஒருவர் சரியான மனநிலையில் இருந்தால் மட்டுமே, அவரால் சரியான ஆரோக்கியமான முடிவுகள் எடுக்க முடியும். தனது வேலையை திறம்படச் செய்யவும் முடியும். சமூக விஷயங்களில் பங்கெடுத்து, நல்ல குடிமகனாகத் திகழ முடியும்.

போர், குடும்ப வன்முறை, பணியிடங்களில் ஏற்படும் பாலியல் வன்முறை, இணைய வன்முறை மற்றும் பொருளாதார சீரழிவுகளினால் உள நல பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களின் நிலையென்பது இன்று பாரிய அளவில் உயர்ந்துள்ளது.

குடும்ப வன்முறை:

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுபவர்களை பாதுகாப்பதற்கென 2005 ஆண்டு முதல் குடும்ப வன்முறை தடைச்சட்டம் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குடும்ப வன்முறை எனப்படுவது ஒரு குடும்ப உறுப்பினர் இன்னுமொரு குடும்ப உறுப்பினர் மீது செலுத்தும் வன்முறை ஆகும். குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியான வன்முறை, உள ரீதியான, உணர்ச்சி ரீதியான வன்முறை, பாலியல் வன்முறை மற்றும் பொருளாதார வன்முறை என்று குடும்ப வன்முறையின் பிரதான ஐந்து வடிவங்களில் வெளிப்படலாம்.

குடும்ப வன்முறை என்பது இலங்கையில் வெளிப்படையாகப் பேசப்படாத ஒரு விடயமாகும். ஆண் ஆதிக்க மரபுடைய குடும்ப கட்டமைப்பில் பெரும்பாலும் ஆண்களே பெண்களை குடும்ப வன்முறைக்கு உட்படுத்துகின்றனர். தந்தைவழி ஆணாதிக்கச் சொல்லாடல்களின் அதிகாரபலமும் பொருளாதாரபலமும் பெண்களின் மீதான குடும்ப வன்முறையை கண்ணுக்குத் தெரியாத அல்லது தெரிந்தாலும் அது இயல்பானதொன்றாக ஆக்கியிருக்கிறது. குடும்ப வன்முறை என்பது நேரடியாக பெண்களை மாத்திரம் குறிப்பிடுவதில்லை என்பதனையூம் நினைவில் கொள்ளல் வேண்டும். துஷ்பிரயோகம் செய்பவர் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். துஷ்பிரயோகத்திற்கு இலக்காகு பவர் வாழ்க்கைத் துணையாக, சிறுவராக அல்லது பெற்றோராக இருக்கலாம்.

குடும்ப அமைப்பில் ஒரு ஆண் பெண்ணைத் தாக்குவது என்பது சாதாரணமான ஒன்றாகக் கருதப்படுவதுடன் சம்மந்தப்பட்ட பெண்ணே அதை ஒரு அசாதாரண நிகழ்வாக / வன்முறையாகக் கருதுவதில்லை. இது அவர்களது தலைவிதி அல்லது வினைப்பயன் என்றும் இது நாளாந்த வாழ்வின் ஒரு பாகம் என்றும் நம்புமாறு மக்கள் வழிகாட்டப்படுகின்றார்கள். இது இனம், மதம், வர்க்கம், சாதி போன்ற எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து நிலைப் பெண்களின் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

இவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள், எந்த வடிவிலும் குடும்ப வன்முறை நடைபெறாமல் தடுக்கும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவதைத் தடுக்கும் இருப்பிட கட்டளை, குழந்தைகளைப் பாதுகாத்துக்கொள்ளும் கட்டளை, நஷ்டஈட்டு, மாதாந்த பண உதவி போன்ற நிவாரணங்களை இச்சட்டத்தின் பெற்றுக்கொள்ள முடியும்.

காலங்காலமான கூறப்பட்டுவரும் பெண்களின் கடமைகளும் கட்டுப்பாடுகளும் பால்நிலை சமத்துவத்தைப் பேணுவதில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன. வேலைக்குச் சென்றாலும் பெண்களே வீட்டில் வேலைகளை செய்ய வேண்டும் எனும் நிலை, பிள்ளைகளையும் உறவினர்களையும் பராமரித்தலும் உபசரித்தலும் போன்றவை சம்பிரதாயப்பூர்வமாக பெண்களே முன்னின்று செய்யவேண்டிய கடமைகளாக உள்ளன.

இன்றைய நவீனயுகத்தில் “ஆணுக்குப் பெண் சமம்” என அனைத்துத் துறைகளிலும் செயற்பட்டு வந்தாலும் அவர்களின் உடை, வீட்டிற்கு வர ஏற்படும் காலதாமதம், சக மனிதரோடு சகஜமாக பழகுதல் போன்றவை விமர்சிக்கப்படுவதுடன் ஆணுக்கும் பெண்ணுக்குமான சம்பள ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன.

துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண்கள் தாம் செய்யும் செயல்களில் நம்பிக்கை இழந்தவர்களாகவும், பதக்களிப்பு அடைந்தவர்களாகவும்தாம் எதற்கும் உபயோகமற்றிருத்தல் என நினைத்தல், தன்னையும் குழந்தைகளையும் பற்றிப் பயப்படுதல், உணர்வு மரத்துப்போதல், எதிலும் திருப்தியற்றிருத்தல், குற்ற உணர்வு கொண்டு அடிக்கடி அழுதல், தாங்கள் எதைச் செய்தாலும் ஒரு போதும் சரிவரச் செய்யவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டிருத்தல், தோல்வி மனப்பான்மை போன்ற கலவையான உணர்வுகளுக்கு மத்தியில் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

நாட்டைத் தாய்நாடென்றும் மண்னை தாய் மண் என்றும் ஆற்றை கங்கைத் தாய் என்றும் புகையிரதங்களை யாழ்தேவி பெண்களின் பெயரைக் கொண்டே அழைக்கும் மதிப்பளித்து ஏற்றுக்கொள்ளும் உயரிய பண்பினைக் கொண்டவர்களாகிய நாம் நம் சக உதிரமாகிய தாய் தமக்கை மனைவி மற்றும் மகளின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை ஓரங்கட்டிவிடுகிறோமோ என்று எண்ணவைக்கின்றன அன்றாடச்செய்திகள்.

நமது இளைய சமூகத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் பெண்களை சக மனுசியாக ஏற்றுக் கொள்வதற்கு உரிய பயிற்சிகளை வீடு தோறும் வழங்க வேண்டும். அதுபெற்றோராகிய நம் ஒவ்வொருவரது கடமையாகும். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதையும் அவர்களின் வாழ்க்கையை வாழ அவர்களுக்கு உரிமையுண்டு என்பதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம் ஒவ்வொருவரிடமும் வளரும் போது மட்டுமே குடும்ப வன்முறைமுற்றாக ஒழிப்படும். பெண்கள் உள நலத் தோடும் உடல் நலத்தோடும் வாழும் சமூகம் ஒரு முன்னுதாரணமான சமூகமாக இருக்கும்.

இக்கட்டுரையானது குடும்ப புனர்வாழ்வு நிலையம் (FRC) மற்றும் இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) இணைந்து உளநலம், குடும்ப வன்முறை மற்றும் பால்நிலை சார் வன்முறைகள் தொடர்பாக உலக உள நல தினமான ஒக்டோபர் 10 ஆம் திகதியை முன்னிட்டு மேற்கொள்ளும் உள நல விழிப்புணர்வு செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக எழுதப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் சமூக ஊடக பாவனையாளர்களின் விழிப்புணர்வை அதிகரிக்க #SDJF #FRC #OneMonth2MIND போன்ற hashtags ஊடக ஒருமாதகால சமூக ஊடக பிரசாரத்தினை சமூக ஊடகங்களுடாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் அமுதன்

Related posts

தேர்தல் விஞ்ஞாபனம் மஹாநாயக்கரிடம் கையளிப்பு

G. Pragas

ஊடகவியலாளர் மீது தாக்குதல்; ஐவர் கைது!

G. Pragas

வாகனத்தை பறித்து மக்கள் மீது மோதித் தாக்குதல்

G. Pragas