இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

‘ என் இனிய தமிழ்மக்களே ‘ பாரதிராஜாவுக்கு இன்றுடன் அகவை எழுபத்தேழு!

தேவதூதர்கள் போல், சினிமா தூதர்களும் உண்டு. தங்களின் நூதனமான படைப்புகளால், கலையையும் கலாரசிகர்களையும் ஒருகோட்டில் இணைத்து, ஒருபுள்ளியில் இணைத்தவர்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். இயக்குநர்கள் ஸ்ரீதரும், பாலசந்தரும் சினிமா எனும் தொழில்நுட்பத்தையும் வாழ்வியலையும் மன உணர்வுகளையும் வெள்ளித்திரையில் உலவ விட்டார்கள். இதையடுத்து, பேருந்து, ரயில் பயணங்களில் கடக்கும் போது பார்த்த கிராமத்தையும், வெள்ளந்தி மனிதர்களையும் வெள்ளித்திரையிலும், நகரத்து மனிதர்களுக்குள்ளேயும் கதாபாத்திரங்களாக உலவ விட்டவர் இயக்குநர் சிகரம் பாரதிராஜாதான் என்பதில் எந்த ஆச்சர்யமுமில்லை.

தமிழ் சினிமாவின் ஐந்தெழுத்து ஆச்சர்யம். மொத்தத் திரையுலகையும், மொத்த தமிழ் உலகையும் தன் பக்கம் திருப்பி, எல்லா உதடுகளையும் ‘16 வயதினிலே’ என்றும் ‘சப்பாணி’ என்றும் ‘மயில்’ என்றும் ’பரட்டை’ என்றும் ‘குருவம்மா’ என்றும் ‘பாரதிராஜா’ என்றும் உச்சரிக்கவைத்த அதிசயம். கமல்ஹாசனை இதுவரை இப்படிப் பார்த்ததே இல்லையே என்பது ஒருபக்கம் இருந்தாலும் ‘இப்படியொரு படத்தை இதுவரை பார்த்ததே இல்லையே’ என்று கொண்டாடினார்கள் தமிழ் திரையுலகத்தினர்.

எழுபதுகளின் இறுதியில், கொஞ்சம் கொஞ்சமாக பாரதிராஜாவிடம் தங்களின் மனதை ஒப்படைத்தார்கள் ரசிகர்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது ஒரு தெருவில் கனவுகளுடன் திரிகிற ‘பரஞ்சோதிகள்’ இருப்பார்கள். அவனை நேசித்து உருகுகிற ‘பாஞ்சாலி’கள் இருப்பார்கள். ஏற்றத்தாழ்வு, சாதிப்பாகுபாடு, ஆணவ அவமானங்கள், ஊர்க்கட்டுப்பாடு, மூடநம்பிக்கை வழிபாடு என்பதையெல்லாம் ‘கிழக்கே போகும் ரயிலில்’ ஏற்றிக் கொண்டு தமிழ் சினிமாவுக்குள் இறக்கிவிட்டார். இப்படியான எக்கச்சக்க ரசணைப் படங்களின் சொந்தக்காரர். நம் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ள இயக்குநர் இமயத்துக்கு இன்றுடன் அகவை எழுபத்தேழு.

Related posts

கல்கிஸ்ஸை கடற்கரை மணல் மற்றும் நீரின் மாதிரிகள் தொடர்பில் மேலதிக ஆய்வு

Tharani

இரண்டு காற்றாலைகளில் ஒன்றை மட்டும் அகற்ற முடியும்

கதிர்

“வீட்டில் இருந்து வேலை” பொது – தனியார் துறைக்கு ஏழு நாட்கள் விடுமுறை!

Bavan