in , ,

எமக்கு ஆளுநர் அதிகாரம் வேண்டாம் – கமலதாஸ்

“தற்போதுள்ள அரைசியலமைப்பின்படி முதலமைச்சர் என்பவர் தீர்மானங்களை முன்மொழிபவராகவும், அதனை நிறைவேற்றுகின்ற அதிகாரம் கொண்டவர் ஆளுநராகவும் இருக்கின்றனர். இந்த முறைமை மாற்றப்பட வேண்டும். முதலமைச்சரே நிறைவேற்றும் அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும். மத்திய அரசினால் நியமிக்கப்படுகின்ற, மத்திய அரசிற்கு ஆமாம் போடுகின்ற ஆளுநர் அதிகாரத்தை நாங்கள் விரும்பவில்லை”

இவ்வாறு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.

இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

“புதிய அரசிலமைப்பு என்பது நாங்கள் இழந்துவிடக் கூடாத ஒரு சந்தர்ப்பமாகும். ஏனெனில் குடியரசு அதிகரமுள்ள நாடு என்ற ரீதியில் ஒவ்வொரு வாக்காளர்களும் தங்கள் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்புள்ளவர்கள். அதற்கான கதவு திறந்து விடப்பட்டிருக்கிறது. பிரிட்டிஸ் காலணித்துவத்தின் சிபாரிசுகளோ, இதுவரை காலமும் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களோ இனிமேல் செல்லுபடியாகாது.

புதிய அரசியலமைப்பு எழுதப்படும் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சிங்கள பௌத்த அபிலாசைகளை முன்நிறுத்தியதாக பொதுஜன பெரமுன தங்கள் அரசியலமைப்புக்கான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

அதேநேரம் இந்தியாவினுடைய ஏற்பாட்டில் இலங்கை அரசு சம்மதித்த இலங்கையின் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் அளிக்கின்ற, அரசியற் பகிர்வளிக்கின்ற 13வது திருத்தச்சட்டத்திற்கு வலுச்சேர்ப்பதாக வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும், எந்த அரசும் இதுவரை அந்த வாய்ப்புகளை வழங்கவில்லை.

அந்தவகையில் அவற்றை நிராகரிக்காத வண்ணம் அவற்றையும் உள்வாங்கியவாறு ஒரு பல்லினத்துவம் மிக்கதும், அதே நேரம் தத்தமது தாயகப் பரப்புகளில் சிறுபான்மை மக்கள் தங்கள் அதிகாரத்தை, தனித்துவத்தைப் பேணக் கூடியவாறானதுமான பரிந்துரைகளை முன்வைத்து வருகின்றோம்.

மாகாணசபைத் தேர்தல் ஒரு அராஜகமான போக்கில் இன்றுவரை நடத்தப்படாமல் பிற்போடப்பட்டு வருகின்றது. கடந்த காலங்களில் பல நல்லிணக்கமான போக்கில் எமது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் நடந்து வந்திருக்கின்றார்கள். எங்களைப் பொருத்தவரையில் வடக்கு மாகாணமாக இருந்தாலும் சரி, கிழக்கு மாகாணமாக இருந்தாலும் சரி எவருக்கும் தங்கள் உரிமை மறுக்கப்படாதவாறு தங்கள் அரசாட்சியை அமைப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

அத்துடன் சொந்த நிதியைத் திரட்டக்கூடியதும், அதனைக் கையாளக் கூடியதும், காணி உட்பட தங்கள் சொந்த வளங்களை மக்களுக்காகப் பங்கிடக்கூடியதுமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். இந்த வகையில் நாங்கள் அனைத்துத் தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற சக்திகளுடன் இணைந்து கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு தனி மாகாண ஆட்சியை நிறுவுவதற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளோம்.

இதில் சிங்களவர்களையும் உள்வாங்க வேண்டும். அவர்களையும் உள்வாங்கியவாறு ஒரு மாகாணசபை ஆட்சியை தமிழர்கள் மந்திரி சபையைக் கொண்டு அமைக்க வேண்டும். ஆனால், ஆளுநர் நிறைவேற்று அதிகாரியாக இருக்கக் கூடிய மாகாணசபையை நாங்கள் விரும்பவில்லை.” என்றார். (150)

இறக்குமதியை நிறுத்தாது விட்டிருந்தால் இதுவே நடந்திருக்கும்!

யாழில் தொழிற்சாலைகளை மீள திறந்து பொருளாதார திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை!