எரிபொருள் வரிசை முரண்பாடு; துப்பாக்கியைக் காட்டி பொலிஸ் மிரட்டல்!

கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில்  நேற்றுமுன்தினம் இடம்பெற்ற முரண்பாட்டில் முன்னாள் நகர சபை உறுப்பினரை கைத்துப்பாக்கியைக் காட்டி பொலிஸார் ஒருவர் அச்சுறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கைதடி ப.நோ.கூ.சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது. இதன்போது  அங்கு கடமையில் நின்ற பிரதேச  செயலக உத்தியோகத்தர் ஒருவர் வரிசையில் நின்ற தமக்குத் தெரிந்தவர்களுக்கு பெற்றோல் நிரப்ப அனுமதித்துள்ளார்.
இதனை அவதானித்த குறித்த முன்னாள் நகரசபை உறுப்பினர் மக்கள் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் பெறுகின்றனர். ஆனால் நீங்கள் இடையிடையே உங்களுக்கு வேண்டியவர்களை அனுமதிக்கிறீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் முன்னாள் நகரசபை உறுப்பினரோடு   பிரதேச செயலக உத்தியோகத்தர் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோர் முரண்பட்டதோடு திடீரென பொலிஸ் அதிகாரி தனது கைத்துப்பாக்கியை  எடுத்து நகர சபை உறுப்பினரின் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியுள்ளார் என அங்கு நின்றவர்களால் தெரிவிக்கப்படுகிறது.
இதனால்  அங்கு நின்றவர்கள் அச்சமடைந்ததோடு பலர் எருபொருள் நிரப்பாமல் திரும்பி சென்றதையும் காணமுடிந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.
Exit mobile version