in ,

ஐதேகவை ஆதரிப்பது அரசை ஆதரிப்பது போன்றது – அநுர

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதானது, அரசாங்கத்திற்கு அளிக்கும் வாக்காகவே கருதப்படும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று ஐக்கியமும் இல்லை, தேசியமும் இல்லை. கட்சியும் இல்லை. 15 வருடங்களாக இந்தக் கட்சிக்குள் பிரச்சினைகள்தான் இருந்து கொண்டிருக்கின்றன. கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஒன்றைக் கூறுகிறார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்னொன்றைக் கூறுகிறார். இவ்வாறு நீடித்தால் கட்சியொன்று எப்படி நிலைக்கும்?

நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான பொறுப்பை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு அரசியலில் நீடிக்க முடியாது. அத்தோடு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறுவதைப் போல, பொதுத் தேர்தலில் அரசாங்கத் தரப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைக் கிடைக்காது.

2010ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 20 பேரளவில் மஹிந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்த காரணத்தினால்தான், அப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. இப்போதும், சிலர் கட்சித்தாவ தயார் நிலையிலேயே இருக்கிறார்கள். ஆனால், இவர்களை ஏற்றுக்கொள்ள மஹிந்த தரப்பினர் தயாராக இல்லை. ஏனெனில், வேட்பு மனுப் பிரச்சினை அங்கும் நிலவிக்கொண்டிருக்கிறது.

எனவே, தேர்தலில் போட்டியிட்டு, உறுப்பினர் அந்தஸ்துடன் வருமாறுதான் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதானது, மஹிந்த அரசாங்கத்திற்கு வாக்களிப்பதற்கு சமமான ஒரு செயற்பாடாகவே கருதப்படுகிறது.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு நிகரான ஒன்றாகவே இலங்கை நாடாளுமன்றம் இருக்கிறது. சொல்லப்போனால், வெலிக்கடை சிறைச்சாலைக்கு மார்க்கம் அளிக்கும் இடமாகவே நாடாளுமன்றம்தான் காணப்படுகிறது. இதனை சுத்தம் செய்ய வேண்டியது எமது கடமையாகும் – என்றார்.

இரு பிள்ளைகளின் தாய் கத்திக் குத்தில் படுகாயம்!

இன்று இடியுடன் கூடிய மழை