செய்திகள் பிரதான செய்தி

கடற்றொழில் தொடர்பான 9 ஒழுங்கு விதிகள்…!

இலங்கையின் நீர்ப்பரப்புக்குள் கைத்தொழில் அல்லது வீட்டுக் கழிவுகளை அகற்றுவதைத் தடை செய்வது உள்ளிட்ட கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழ் 9 ஒழுங்கு விதிகள் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்று பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை விவாதம் இடம்பெறவுள்ளது.

இலங்கை நீர்ப்பரப்பில் உள்ள மீன் இனங்கள் மற்றும் கடல்வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நேரடியாக அல்லது மறைமுகமாக கைத்தொழில், வீட்டுக் கழிவுகளை அகற்றுவது தடை செய்யப்படுவதுடன், நீர்பரப்புக்களினுள் மீன் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்களிற்கு அழிவை ஏற்படுத்துகின்ற முறை ஒன்றில் ஏதேனும் கழிவை, வெளிக் கழிவுப் பொருளை கொட்டுதல் ஆகாது. அவற்றுடன் கடற்பரப்பை நிரப்புதலோ அல்லது மீட்டெடுத்தலோ இதன்மூலம் தடை செய்யப்படுகிறது.

மேலும், மீன்பிடியின் போது ஈட்டிகளைப் பயன்படுத்தல், ஈட்டி பொருத்தப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தல் அல்லது உடைமையில் வைத்திருத்தல் அல்லது மீன்பிடி வள்ளத்தில் வைத்திருத்தலைத் தடுக்கும் ஒழுங்கு விதியும் அன்றையதினம் முன்வைக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கைக்குள் அல்லது இலங்கை நீர்ப்பரப்புகளுள் (செபலோபொலிஸ் சொன்னெராடி) தம்புவ மீன் இனங்களைப் பிடித்தல், உடைமையில் வைத்திருத்தல், இடம்பெயர்த்தல், கொள்வனவு செய்தல், விற்பனைக்காக காட்சிக்கு வைத்தல், விற்றல் அல்லது ஏற்றுமதி செய்தல் என்பவற்றைத் தடுப்பது தொடர்பான ஒழுங்குவிதியும் 21 ஆம் திகதி விவாதிக்கப்படும் ஒழுங்கு விதிகளில் உள்ளடங்குகிறது.

மீன் உற்பத்தி ஏற்றுமதிகள், இறக்குமதிகள் மற்றும் மீள்ஏற்றுமதிகளைப் பதிவுசெய்தல், அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் உரிய வழிகாட்டல்களை பின்பற்றுகின்றனவா என்பதை பரிசோதனை செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்கும் வகையிலும் ஒழுங்குவிதிகள் முன்வைக்கப்படுகின்றன.

1996 ஆம் ஆண்டின் இரண்டாம் இலக்க கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தின் கீழான இந்த ஒழுங்கு விதிகளை கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டவர்களை உறுதிப்படுத்த கோருவது கண்துடைப்பு!

Tharani

கல்வியியல் கல்லூரி மாணவர்களினால் இராசவீதியில் சிரமதானம்

G. Pragas

ஆசிரியர்களின் தேவை வலியுறுத்தி பாடசாலையை மூடிப் போராட்டம்

G. Pragas

Leave a Comment