கிழக்கு மாகாணம் சிறப்புக் கட்டுரை செய்திகள்

மட்டக்களப்பில் அதிகரித்து காணப்படும் போதை வியாபாரம் – காரணம்? (கட்டுரை)

நாட்டில் ஊரடங்குச்சட்டம் அமுலாக்கப்பட்டு கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்களைப்பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், போதை வியாபாரிகளின் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் நோயினைவிட போதைப்பாவனை அதிகரித்து வருகின்றது.

இச்சந்தர்ப்பத்தில் போதை வியாபாரிகளின் வியாபார கெடுபிடிகளும், போதை பாவிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. இதன் காரணமாக அரசாங்கத்தினால் கொரோனா வைரஸ் நோயிலிருந்து மக்களைப்பாதுகாக்க அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச்சட்டம் கேள்விக்குறியாக உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாப் பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் காணப்படுவதுடன், இதன் காரணமாக போதைப்பாவனையாளர்கள் அதிகரித்து வரும் நிலையையும் அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில், ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின், போதை மாத்திரை, கஞ்சா உட்பட்ட போதைப் பாவனைப்பொருட்கள் அதிகமாக கல்குடா பிரதேசத்தில் விற்பனை செய்யப்படுவதுடன், இவற்றில் சில பொருட்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட வண்ணமே காணப்படுகின்றனர்.

மக்கள் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காகவும் தமது அன்றாடக்கடமைகளை மேற்கொள்வதற்காகவும் ஊரடங்குச்சட்டத்தை அரசாங்கம் நீக்குகின்றது. ஆனால், இச்சந்தர்ப்பத்தை இப்போதை வியாபாரிகள் பயன்படுத்தி வெளியிடங்களுக்குச்சென்று தமது போதைப் பொருட்களைக் கொள்வனவு செய்து உள் வீதிகளுக்கூடாகக் கொண்டு வருகின்றனர்.

அத்துடன், இவர்கள் ஊரடங்கு அமுல்படுத்தும் போது உள் வீதிகளைப்பயன்படுத்தி கிராமப் புறங்களுக்கு போதைப்பொருட்களைக் கடத்துவதாகவும், தமது சைக்கிள், மோட்டர் சைக்கிள்களைக் மறைத்து வைத்து விட்டு சில வீடுகளில் ஒன்று கூடுவதாகவும், அங்கு போதைப்பொருட்களைப் பயன்படுத்தி விட்டு கலைந்து செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கல்குடாப் பிரதேசத்தில் ஓட்டமாவடி, மாஞ்சோலை, பிறைந்துறைச்சேனை, செம்மண்ணோடை மற்று நாவலடி போன்ற பிரதேசங்களுக்கு போதை வியாபாரிகள் வருவதாகவும், இப்போதை வியாபாரிகளின் மற்றும் போதைப்பாவனையாளர்களின் நடமாட்டம் ஊரடங்கு அமுலிலுள்ள போது கூடுதலாக இருப்பதாகவும் அப்பிரதேசவாசிகள் மிகவும் கவலையடைகின்றனர்.

கல்குடாப்பிரதேசத்தில் பெரும்பாலும் போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்படுவதில்லை. குறிப்பாக, போதைப்பொருட்களை வாங்கி பாவிப்பவர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளே கைது செய்யப்படுகின்றனர். பொருள் வியாபாரிகள் கைது செய்யப்படாது, தப்பித்து விடுகின்றதாக சில புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் கொரோனா அச்சம் காரணமாக நாட்டின் ஊடரங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட வேளையில், இராணுவப்புலனாய்வுப் பிரிவினரின் தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் மாபியாக்கள் பிடிக்கப்படுகின்றனர். அதிலும் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கல்குடாப்பிரதேசத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீறாவோடை, மாஞ்சோலை, பிறைந்துறைச்சேனை, செம்மண்ணோடை, நாவலடி போன்ற பிரதேசங்களிலிருந்து போதை மாத்திரைகள் பாடசாலை மாணவர்களுக்கு அதிகம் விற்பனை செய்யப்படுகின்றது. இதனால் மாணவர்களின் வாழ்வு சிறுவயதில் இழக்கப்படும் நிலைமை உருவாகின்றது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பிரதேசங்களில் போதைப்பொருளுடன் பல்வேறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், இவர்கள் போதைப்பொருள் மொத்த வியாபாரிகளைக் காட்டிக் கொடுப்பதில்லை என வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களைக் கைது செய்வதற்கு பிரதேச மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கும் பட்சத்தில் மாத்திரம் போதைப்பொருள் வியாபாரிகளைக் கைது செய்ய முடியும்.

பொது மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கினால், கல்குடாப் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மாணவர்கள் மத்தியில் இடம்பெறும் போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்க முடியும். இல்லையேல், அதிகரித்த வண்ணமே காணப்படும். போதைப்பொருள் பாவனையை ஒழிப்பது மக்களின் கரங்களிலே உள்ளது.

ஓட்டமாவடி, வாழைச்சேனை, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மக்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி கூடிய அக்கறை செலுத்த வேண்டும். அந்த வகையில், போதைப்பொருள் மாஃபியாக்களை அடியோடு அழிக்க பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

ஊரடங்கு வேளையில், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோதச் செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனைத்தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளைக் கைது செய்யும் வகையிலும் பொலிஸார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

எனவே, ஓட்டமாவடி, மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாணவர்கள் மற்றும் பிள்ளைகளின் நலனின் அக்கறை கொண்டு பெற்றோர்கள், பொது மக்கள் கூடிய கவனஞ்செலுத்த வேண்டும். போதைப்பொருள் வியாபாரிகளுக்கு பயந்து தங்களது பிள்ளைகளின் வாழ்க்கையைச் சீரிழிக்க இடமளிக்கக்கூடாது.

தமிழ்ப்பிரதேசங்களில் வாழும் இளைஞர்கள் மத்தியில் மதுப்பாவனை உள்ள போது, முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருள், ஹெரோயின், போதை மாத்திரை, கஞ்சா உட்பட்ட பொருட்கள் பாவனையிலுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எவரும் கரிசனை கொள்வது குறைவாகவே காணப்படுகின்றது.

பெரும்பாலும் இவ்வாறான பழக்கம் 15 வயது தொடக்கம் 30 வயதுடைய இளைஞர்களிடத்தில் காணப்படுகின்றது. ஏனெனில், மாணவர்களின் வயது உணர்வுக்கு முக்கியத்தும் வழங்கின்றனது. இவர்களைத் தூண்டும் வகையில் மனதினை மாற்றும் போது மாணவர்களும் போதைப்பாவனையில் ஈடுபடுகின்றனர்.

மாணவர்களின் வயதானது இலகுவில் ஏமாற்ற முடியும். தங்களது வயதில் போதைப்பாவனையை மேற்கொள்ளச் செய்தால், போதைப்பாவனையைத் தொடர்வீர்கள் என்ற எண்ணத்தில் இவ்வாறான செயல்களை மாணவர்களின் மத்தியில் செய்கின்றனர்.

இளைஞர்கள் போதைப்பொருட்களைப் பாவித்து வாகனங்களைச் செலுத்துவதால் இலங்கையில் அதிக விபத்துக்கள் இடம்பெறக்காரணமாக அமைகின்றது. போதைப்பொருட்களை பாவித்த பின்னர் போதை உண்டாகும் பட்சத்தில், வாகனத்தைச் செலுத்தும் போது, முன்னால் வரும் வாகனத்தின் தூரத்தினை சரியாகக் கணிக்க முடியாமல் விபத்துக்கள் இடம்பெறுகின்றது.

எனவே, எதிர்காலச் சந்ததியினரின் வாழ்வின் ஒளியேற்றும் வகையில் பொது மக்கள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவப்புலனாய்வுப்பிரிவினர், பிரதேச மட்ட அமைப்புக்கள், பள்ளிவாயல் நிருவாகத்தினர் இதில் கூடிய அக்கறை செலுத்தி கல்குடாப்பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தினை அடியோடு ஒழிக்க முன்வர வேண்டும்.

மாணவர்களின் எதிர்காலமும், கல்குடாப்பிரதேசத்தின் எதிர்காலமும் இவர்கள் கையில் தங்கியுள்ளதை மறுக்காமல் துரிர நடவடிக்கையெடுக்கவும், இல்லையெல், இதனூடாக பல்வேறு திருட்டுச் சம்பவங்களும், பல கொலைகளும் அதிகரிக்க வாய்ப்புக்கள் ஏற்படலாம்.

ந.குகதர்சன் (150)

Related posts

வாக்களிப்பது எப்படி? தேர்தல்கள் ஆணையாளர் விளக்கம்

G. Pragas

டெங்கு நோயாளர்களுக்காக தனியான வைத்தியர் நியமனம்!

Tharani

இன்றைய நாள் இராசி பலன்கள்

Tharani