கொரோனா வைரஸுக்கு எதிராக முன்னணியில் நின்று பணியாற்றும் சுகாதார சேவை ஊழியர்களுக்காக மில்லியன் கணக்கான பவுண்டுகளை திரட்டிய இரண்டாம் உலக போரில் பங்கேற்ற இங்கிலாந்தின் முன்னாள் இராணுவ வீரரான கப்டன் சேர் தோமஸ் மூரே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (2) உயிரிழந்தார்.
தேசிய சுகாதார சேவைத் துறைக்கு உதவுவதற்காக நடை பயணம் ஊடாக 38.9 மில்லியன் பவுண்டுகளை (53 மில்லியன் டொலர்) கப்டன் மூரே திரட்டினார். இதன் மூலம் இங்கிலாந்து மக்கள் மத்தியில் நாயகனாக அவர் போற்றப்பட்டார்.
கொரோனா வைரஸ் குறித்த அச்சமளிக்கும் செய்திகளுக்கு மத்தியில் அவரது முயற்சியும் புத்திசாலித்தனமும் மக்களிடையே மகிழ்ச்சியைப் பரப்பின.
மத்திய இங்கிலாந்தின் பெட்போர்ட் மருத்துவமனையில் மூரே காலமானார். ஜனவரி (22) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவா், நிமோனியாவுடன் போராடிவந்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக புற்று நோய்க்கும் அவா் சிகிச்சை பெற்று வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அவர் எடுத்துக்கொண்ட மருந்துகள் மற்றும் வயது காரணமாக அவருக்கு தடுப்பூசி போடப்படவில்லை.
லண்டனுக்கு வடக்கே 80 கி.மீ (50 மைல்) தொலைவில் உள்ள மார்ஸ்டன் மோர்டைன் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து தனது நிதியுதவி கோரும் நடைப்பயணத்தைத் தொற்று நோயின் முதல் அலையின்போது மூரே தொடங்கினார். அப்போது 1,000 பவுண்டுகள் திரட்ட முடியும் என அவா் நம்பினார். ஆனால் 38.9 மில்லியன் பவுண்டுகளை அவா் சோ்த்தார்.