கட்டுரைகள் நடுப்பக்க கட்டுரை

காட்டுமிராண்டித் தனத்தின் கூடம் அல்ல பல்கலைக்கழகம்!

இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி என்பது பலரின் கனவாகவும் வரப்பிரசாதமாகவும் இருந்து வருகின்றது. அவ்வாறான வாய்ப்பு திறமையான மாணவர்களுக்குக் கூட சிலசமயம் கைகூடாமல் போய் விடுகின்றது.

வருடாந்தம் சுமார் 3இலட்சம் மாணவர்கள் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இவர்களில் ஒரு இலட்சம் பேருக்கு மேற்பட்டோர் பல்கலைக்கழகம் செல்வதற்கான அடிப்படைத் தகுதியைப் பெறுகின்றனர். எனினும் அவர்களில் சுமார் 25சதவீத மாணவர்களாலேயே பல்கலைக்கழகத்துக்குச் செல்ல முடிகிறது. அந்த எண்ணிக்கைக்குரிய வெற்றிடம் மட்டுமே பல்கலைக்கழகங்களில் நிரப்பப்பட முடியும். 

 அவ்வாறு அனுமதி கிடைக்காத மாணவர்களில் பலர் கிடைத்த தொழிலைப் பெற்றுக் கொண்டு கல்விப் புலத்தை விட்டே சென்று விடுகின்றனர். பண வசதி படைத்த மாணவர்கள் அதிக பணம் கொடுத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து பட்டங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கற்பதற்கு க.பொ.த உயர் தரத்தில் சாதாரண சித்தி பெற்றிருந்தால் போதுமானது. பலர் இங்கிருந்து கொண்டே பட்டங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். 

கிராமப்புற மாணவர்களைப் பொறுத்த வரை பல்கலைக்கழகப் பட்டத்தை பணத்தினால் வாங்க முடியாது. அவர்களுக்கு உள்ள ஒரேயொரு வாய்ப்பு எமது நாட்டு தேசிய பல்கலைக்கழகங்கள் மாத்திரமேயாகும். இதனால் பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பெரும் சிரமத்துடன் கற்று அனுமதி பெறுகின்றனர். 

இத்தனை சிரமங்களுடன் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களுக்கு முதலாவது பிரச்சினையாக அமைவது அங்கு இடம்பெறும் பகிடிவதையாகும். இந்த பகிடிவதையை ‘அறிமுகப் படலம்’ என்று கூறலாம். ஆனால் இந்த அறிமுகப் படலம் பெரும்பாலும் உடல் மற்றும் உள ரீதியில் புதிய மாணவர்களை இம்சிக்கும் சித்திரவதையாக அமைந்துள்ளதுதான் வேதனைக்குரியது.  

பகிடிவதை இம்சை இதுவரை 15பல்கலைக்கழக புதுமுக மாணவர்களின் உயிரை நேரடியாக பறித்திருப்பது அதிர்ச்சி தரும் தகவல் ஆகும். அதேநேரம் பகிடிவதை மறைமுக ரீதியில் மேலும் சில உயிர்களை பறித்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.  

பகிடிவதை தடை மற்றும் அது தொடர்பான சட்டம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகின்ற அதேவேளை, பல பல்கலைக்கழங்களில் பகிடிவதை குறைந்துள்ளதோடு ஒருசில பல்கலைக்கழகங்களில் அதுவே முக்கிய அங்கமாக இன்னும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

பல்கலைக்கழகங்களில் புதிய கல்வியாண்டுக்காக மாணவர்கள் நுழையப் போகின்றார்கள். பகிடிவதை தொடர்பான அச்சம் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. ராகிங் சேஷ்டையை முற்றாகத் தடுக்க பல்கலைக்கழக நிர்வாகங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் புதிய மாணவர்களினதும் பெற்றோரினதும் கோரிக்கையாக இருக்கின்றது. 

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை ‘அறிமுகப் படலம்’ என்று இப்போது கூறுவதற்கில்லை. அது சில வேளைகளில் பாலியல் ரீதியிலான வன்முறையாகவும் இருக்கின்றது. புதிய மாணவர்கள் பலருக்கு உளவியல் ரீதியான இம்சையாகவும் அது இருக்கின்றது. இதன் மூலம் அது எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு காலத்தில் ராகிங் என்பது பகிடிவதையை செய்பவருக்கும், பகிடிவதை செய்யப்படுபவருக்கும் எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்தாத ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வாக இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது அவ்வாறானதல்ல. இப்போதைய பகிடிவதை இம்சையுடன் கூடிய ஒரு சித்திரவதையாகும். இதன் போது இடம்பெறும் உடல் ரீதியான இம்சை மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதன் காரணமாக மாணவர்கள் சிலர் தங்களுக்கு பல்கலைக்கழகப் படிப்பே வேண்டாம் என்று பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிச் செல்வதும் உண்டு. ஒருசிலர் பல்கலைக்கழகத்திற்கு உள்நுழையாமலே நின்று விடுகின்றனர். மற்றும் சிலர் தமது உயர் கற்கைக்காக வெளிநாடுகளுக்குச் சென்று விடுகின்றனர். 

பகிடிவதை இவ்வாறான பெயரில் இருக்கும் நிலையில், இதனை ஒரு பாரதூரமான விடயமாக பலர் கருதுவதில்லை. பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மோசமான பகிடிவதை மற்றும் சித்திரவதை பற்றி பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்தும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் ஒவ்வொரு வருடமும் தனக்குக் கிடைத்து வருவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 

அண்மையில் ஒரு தாயிடம் இருந்து கிடைத்த தகவல் இதுவாகும். 

“எனது மகன் பல்கலைக்கழகத்தில் தனக்கு நேர்ந்த மோசமான பகிடிவதை காரணமாக மீண்டும் அங்கு செல்ல மறுக்கிறார். ‘நீ விடுமுறைக்கு வீடு சென்று வந்தவுடன் உன்னை கவனித்துக் கொள்கின்றோம்’ என அதிகார தோரணையுடன் பழைய மாணவர்கள் கூறுகின்றனர். அதுவே எனது மகனுக்கு உயிர் ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என நான் அஞ்சுகின்றேன்” 

இவ்வாறு அந்தத் தாயார் கூறுகின்றார். இது தனக்கு வலியும் வேதனையும் தருவதாக அந்தத் தாயார் கூறுகிறார். “இதனால் எனது மகள் மோசமான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக நான் அஞ்சுகிறேன்” எனவும் அவர் கூறினார். 

ஒரு சில பல்கலைக்கழகங்களில் பல்கலைக்கழகத்திற்கு நுழைவதற்கு முன்னர் தொலைபேசி வாயிலாக புதிய மாணவர்கள் மிரட்டப்படுகின்றனர். முறையற்ற வார்த்தைப் பிரயோகம், பயமுறுத்தல் காரணமாக புதிய மாணவர்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகின்றது. 

பல மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல கனவுகளுடன் பல்கலைக்கழகத்திற்கு செல்கின்ற போதிலும் பின்னர் துன்பத்துக்கும் விரக்திக்கும் இலக்காகின்றனர். தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதனை உணர்ந்து பல்கலைக்கழகத்திற்குச் செல்வதை நிறுத்தி விடுகின்றனர். இதுவும் ஒரு வகையான மறைமுகமான பகிடிவதை செயற்பாடாக இருப்பதோடு இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகம், சட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்கும் என்பது சிந்திக்க வேண்டிய விடயமாகும். 

அத்துடன் சான்றுகளோ, சாட்சியமோ இல்லாமல் பொலிஸாரால் எதுவும் செய்ய முடியாதுள்ளது. 500இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பகிடிவதைக்கு எதிராக உயர் மட்டத்துக்குக் கிடைத்துள்ளன. இதனால் 1998இல் கொண்டுவரப்பட்ட பகிடிவதை தடைச் சட்டம் வெறும் எழுத்தில் மட்டுமே உள்ளது. மேலும் இது தொடர்பான சட்டங்கள் இறுக்கமாக்கப்பட்டு மாணவர்களின் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்படுவது முக்கியம். அத்துடன் பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும். பகிடிவதையில் இனிமேலும் ஈடுபட நினைப்போருக்கு அத்தண்டனை ஒரு பாடமாக இருக்க வேண்டும். 

பல்கலைக்கழகங்கள் புத்திஜீவிகளை உருவாக்கும் களமாக இருக்க வேண்டும். பகிடிவதை போன்ற காட்டுமிராண்டித்தனத்துக்குரிய இடமாக இருக்கக் கூடாது.

Related posts

நவீன சமையல் பாத்திரங்களால் மனித சுகாதாரத்துக்கு பெரும் கேடு

Tharani

குழந்தைகள் நல்லவராவதும் தீயவராவதும் பெற்றோர் கைகளில்

Tharani

முயற்சியே வெற்றிக்கு முன்னோடி!

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.