கிழக்கு மாகாணம்செய்திகள்

குறிஞ்சாக்கேணிக்கு 9 மாதங்களில் பாலம்!

‘சுபீட்சத்தின் நோக்கு’ திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட அனைத்து வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களும் உரிய காலத்துக்குள் பூர்த்தி செய்யப்படும் என்று, தெரிவித்த நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், கிண்ணியா – குறிஞ்சாக்கேணிக்கு 9 மாதங்களுக்குள் பாலம் அமைக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிலுள்ள அனைத்துக் கிளை வீதிகள் மற்றும் உள்நுழைவு வீதிகளையும் அபிவிருத்தி செய்து, அவற்றை பிரதான வீதிக் கட்டமைப்புடன் தொடர்புபடுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டுக்குள், மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். கொழும்பு நகரின் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாகவுள்ள அனைத்துச் சந்திகளையும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சமிக்ஞை விளக்குக் கட்டமைப்பைப் பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இடைஞ்சல்கள் உள்ள இடங்களில் மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற மாற்று வழிகளைக் கையாண்டு, போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதான வீதிகளுக்கு அருகாமையில் மாற்று வீதிகளை நிர்மாணிக்கவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன.

கொழும்பு – புத்தளம் வீதியை அபிவிருத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. சிலாபம் நகரம் மற்றும் அந்த வீதியின் ஒரு பகுதி மழை நீரால் பாதிக்கப்பட்டுள்ளதால், அதனைத் தடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன – என்று தெரிவித்தார்.

 

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,196