‘‘கேகே’’ : காந்தக் குரலை கொண்டாட மறந்ததேனோ?

‘கே கே’ என்ற பெயரை இன்றுதான் நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் அவரின் பாடல்களின் பட்டியல்களைக் தேடினால் நாம் ரசித்த பல பாடல்களுக்குச் சொந்தக் குரலோன்.

ரஹ்மான், தேவா, யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், ஸ்ரீகாந்த் தேவா, ஜிவி பிரகாஷ் என அனைவர் இசையமைப்பிலும் 90 களின் பிற்பகுதி தொடங்கி சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் சினிமாவில் கோலோச்சியுள்ளார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு ராதிகாவின் ‘அண்ணாமலை’ மெகா சீரியல் வந்தபோது அதன் தொடக்கப்பாடலாக ஒலித்த ‘உயிர்கள் பிறப்பது பாசத்துக்காக’ என்ற பாடலைக் கேட்டு மயங்கி தேடியபோது அது கேகே பாடிய பாடல்.

விரவிக் கிடக்கும் சோக வெம்மையை அங்குலம் அங்குலமாக நீவி துடைத்டெடுக்கும் ஈரக்குரல் கேகேவுடையது. தேக்கி வைத்திருக்கும் அத்தனை சோகங்களையும் நிறுத்த இயலாமல் உடைத்து அழ செய்த ஒரு குரல்.

இன்று அந்த காதல் காந்தக் குரல் காற்றோடு கலந்துவிட்டது.

‘உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே… முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே’ என ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’ பாடலை அவர் பாடி முடிப்பதற்குள் விவரிக்க முடியாத மென்சோகம் நம்மை ஆட்கொண்டிருக்கும்.

அந்நேரம் கணத்த மெளனம் எம்மைச் சூழ்ந்திருக்கும்.
பல பாடல்களை அதைப் பாடிய குரலோடும் நாம் கடந்து வந்து விடுவோம். அதைப் பாடியவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்களைப் பற்றி நாம் அறிந்து கொள்ள விரும்புவதில்லை.

அப்படி நாம் அதிகம் அடையாளம் காணாமல், கொண்டாடாமல் விட்ட கலைஞர்களில் ஒருவர்தான். தற்போது காற்றோடு கலந்துவிட்ட பாடகர் கேகேவும்.

முறைப்படி இசையைக் கற்றுக் கொள்ளாமலேயே இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை ஏற்படுத்திக் கொண்டவர் கேகே என்பது ஆச்சர்யமான உண்மை.
பல அற்புதமான பாடல்களை கடந்த தலைமுறைக்கும், இந்தத் தலைமுறைக்கும் மட்டுமல்ல, எதிர்வரும் தலைமுறைகளுக்கும் சேர்த்தே கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார் கேகே.

ரசிகர்களால் ’கேகே’ என அழைக்கப்படும் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கேரளாவை சொந்தஇடமாகக் கொண்டவர். மலையாளக் குடும்பத்தில் இருந்து வந்தபோதும், டெல்லியில்தான் பிறந்து வளர்ந்தார் கேகே.

“1994 ஆண்டுதான் முதன்முறையாக இசைப் பயணத்தை தொடர மும்பை வந்தேன். அதற்கு முன்னதாக ஹோட்டல் துறையில் வேலை செய்துக்கொண்டிருந்தேன். என் கனவுகள் மெய்ப்பட துணையாக இருந்தவர் என் மனைவி ஜோதிதான்,” என செவ்வியொன்றில் ஒன்றில் கேகே கூறியுள்ளார்.

ஒரு யுகத்துக்கான பாடல்களை மொத்தமாக பாடிவிட்டு சென்றிருக்கிறார் கேகே. எம் தனிமையும், காதல் தோல்வியும், குதூகலமும், கேகே இல்லாமல் நிறைவு பெறாது.
கேகேவின் குரல் தண்ணீர்போல எதில் ஊற்றினாலும், அந்த சம்பந்தப்பட்ட உணர்வுகளுக்கு ஏற்றார்போல வடிவமைத்துக்கொள்ளும் வகைமையைச் சேர்ந்தவை.

உள்ளிட்ட பல்வேறு காதல் பாடல்களுக்கு இவரின் குரலே உயிர் கொடுத்தது.

மெல்லிசைக் காதல் பாடல் மட்டுமின்றி

ரெட் – ‘ஒல்லிகுச்சி உடம்புகாரி’
எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி – ‘வச்சிக்க வச்சிக்க வா இடுப்புல
அந்நியன் – ‘அண்டங்காக்கா கொண்டக்காரி’
கில்லி – ‘அப்படிப்போடு போடு’

என இப்படி தோண்டத் தோண்ட கிடைக்கும் புதையலாக ஊறிக்கொண்டேயிருக்கிறது கேகேவின் பாடல்கள்.

ஒரு தலைமுறையின் ரிங்க்டோன் பாடல்கள் இவை.
அந்தப் பாடல்களில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.

“ சுவாசமின்றி தவிக்கிறேனே
உனது மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால் நிரப்பிட வா பெண்ணே”

“உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே”

“அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா’’

இந்த பாடல் வரிகளை படிக்கும்போதே ,கேகே வின் குரல் காதுகளில் ஒலிக்கலாம். இந்தப் பாடல்களை எப்போது எங்கு கேட்டாலும் , கண்களை மூடி அந்தக் காந்தக் குரலை உள்வாங்க தவறியதே இல்லை. அப்படி ஒரு தனித்துவமான சளிக்காத ஆத்மார்த்தமான குரல்.

தமிழ் இசை உலகம் கேகே வை இன்னும் கூட சிறப்பாக பயன்படுத்தி இருக்கலாம்.

Exit mobile version