in ,

கொலைகாரன் கொலைகாரன் தான்; இராணுவம் புரிந்த கொலைகள் பற்றி பொன்சேகா

– நாடாளுமன்றில் ஒரு போடு போட்டார்!

மரண தண்டனை கைதியாக தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் எம்பி துமிந்த சில்வாவை விடுதலை செய்யவும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது என்று சரத் பொன்சேகா எம்பி இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்ட ஆளும் கட்சி எம்பி ஒருவர், நீண்ட காலமாக தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு தண்டனை குறைப்பு வழங்குவது போன்றே இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மேலும் பேசிய சரத் பொன்சேகா,

‘ஒரு மரண தண்டனை கைதியை விடுவிக்க சில பொறிமுறைகள் உள்ளன. இங்கு அவை பின்பற்றப்படவில்லை. ஜனாதிபதி பின் கதவால் தீர்மானங்களை எடுக்கின்றார்.

மரண தண்டனை கைதியை விடுவிக்க சிறைச்சாலைகள் ஆணையாளர் பரிந்துரை முன்வைக்க வேண்டும். பின்னர் ஓய்வுபெற்ற சட்டமா அதிபர் அடங்கிய குழுவை நியமிக்க வேண்டும்.

பாரிய குற்றம் செய்தவர் தொடர்பில் ஜனாதிபதிக்கு சமூக பொறுப்பு இருக்க வேண்டும். நன்னடத்தை தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும். ஆனால் இவை அனைத்தும் இங்கு பின்பற்றப்படவில்லை.

இந்த அரசாங்கம் மரண தண்டனை கைதி சுனில் ரத்நாயக்கவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்தது. சுனில் உள்ளிட்ட இராணுவ சிப்பாய்கள் மிருசுவிலில் 8 பேரை கொலை செய்து, கழுத்தை அறுத்து புதைத்தனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட அவரை விடுதலை செய்துள்ளீர்கள். நீங்கள் அத்தகைய செயல்களை அங்கீகரிப்பீர்கள். கொலைகாரன் கொலைகாரன் தான். பிரேமாவதி மனம்பேரியை கொன்றதும் இராணுவ சிப்பாயே. அவர் தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டார் (பிரேமாவதி மனம்பேரியை கொலை செய்த வழக்கில் 16 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ சிப்பாய் கொலை செய்யப்பட்டதை குறிப்பிடுகிறார்). இராணுவ வீரரர்களை விடுவிக்கின்றோம் என நீங்கள் கொடி தூக்க முடியாது’ என தெரிவித்தார்.

கரைதுறைப்பற்று சபையின் ஆட்சியை தக்கவைத்தது கூட்டமைப்பு!

கல்வியின் மூலமே நாட்டை முன்னேற்றலாம்!