கோடைகாலத்தில் ஏற்படும் அதிகரித்த வெப்பம் காரணமாக கோழிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. கோழிகளுக்கு உகந்த உச்ச பட்ச சூழல் வெப்பநிலையாக 3௦-32 செல்சியஸ் அளவிலேயே காணப்பட வேண்டிய போதும் இலங்கை போன்ற நாடுகளில் வருடம் முழுவதும் அதனை விட அதிகரித்த வெப்பநிலை காணப்படுவது அண்மைக் காலத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. உலக வெப்பமுறுதலின் தாக்கமாக இதனைக் கருத முடியும். எனவே கோடை காலம் மட்டுமின்றி வருடம் முழுவதும் கோழிகளை வெப்ப அயர்ச்சியில் இருந்து பாதுகாக்க வேண்டிய தேவை கோழிப் பண்ணை யாளர்களுக்கு ஏற்படுகிறது. சராசரியை விட சூழல் வெப்பநிலை அதிகரிக்கும் போது கோழிகள் அசெளகரியத்தை சந்திக்கின்றதோடு அதிகளவில் இறக்கவும் செய்கின்றன.
அதிகரித்த வெப்பநிலை காரணமாக கோழிகளில் உடல் எடை குறைதல், இறைச்சியின் தரம் குறைதல், முட்டையின் தரம் குறைதல், முட்டை உற்பத்தி குறைதல், இனப்பெருக்க ஆற்றல் குறைதல் போன்ற பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.
கோழிகளுக்கு எமக்கு இருப்பது போல் வியர்வைச் சுரப்பி கிடையாது. எனவே தமது அலகைத் [ வாயை ] திறந்துதான் அதிகளவில் உடல் வெப்பத்தை அவை வெளியேற்றுகின்றன. பொதுவாக ஆரோக்கியமான கோழிப்பண்ணைகளுக்கு அண்மையில் நாம் போகும் பொது அவை தமது அலகை திறந்து சுவா சிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இது அந்தப் பண்ணையின் ஆரோக்கியத்தின் அறிகுறி. நோய்ப்பட்ட கோழிகளில் மேற்படி சத்தம் கேட்காது அல்லது சளி கலந்து இழுவையாக கேட்கும். அத்துடன் நோய் கண்ட கோழிகள் தீவனம் உட்கொள்ளது சோர்ந்து பக்கமாக ஒதுங்கி இருக்கும்.
இலங்கையின் வடக்கு ,கிழக்கு போன்ற உலர் வலயப் பகுதிகளை பொறுத்த வரை, கோடை காலமாக மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜுலை, ஓகஸ்ட் போன்ற மாதங்களை குறிப்பிட முடியும். தென் மாகாணம், வட மேல் மாகாணங்களில் ஜூன், ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் தென் மேல் பருவக்காற்று மழை கிடைப்பதால் அந்த மாதங்கள் ஓரளவு பசுமையானவை. வடக்கு,கிழக்கு பகுதிகளில் ஒக்ரோபர், நவம்பர், டிசெம்பர் மாதங்கள் மழை காலமாகவும் ஜனவரி, பெப்ரவரி மாதங்கள் குளிர் காலமாகவும் காணப்படும். இந்தக்காலத்தில் வெப்ப அயர்ச்சி குறைவாகவே கோழிகளுக்கு காணப்படும்.எனினும் குளிர் காலப் பிரச்சினைகள் அந்தக் காலத்தில் காணப்படும். கோழிப் பண்ணை வளர்ப்பில் மேற்படி மாதங்களின் சூழல் வெப்ப நிலையைக் கருத்திற்கொண்டு சரியான மேலாண்மை முறையை அந்தந்தப் பகுதிகளில் கடைப்பிடிக்க வேண்டும்.நான் தொடக்கத்தில் இலங்கையில் அண்மைய வருடங்களில் பெரும்பாலும் வருடத்தின் சகல மாதங்களிலும் அதிகரித்த வெப்ப நிலை காணப்படுவதைக் கருத்திற் கொள்ள வேண்டும்.
கோழிகளில் வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள்
அதிகமாகவும் வேகமாகவும் மூச்சு விடும்
அதிகமாக தண்ணீர் குடிக்கும்.
இறக்கைகளை தளர்வாக நிலத்தில் படர்த்தியபடி இருக்கும்.
தலை மற்றும் கொண்டையைத் தண்ணீரில் அமிழ்த்தியபடி இருக்கும்.
குறைவாகவே தீவனம் எடுக்கும்.
எடை குறையும்,வளர்ச்சி வீதமும் குறையும்.
முட்டை உற்பத்தி குறையும்.
சிறிய, தரக்குறைவான, ஓடுகள் நலிவடைந்த தோல் முட்டைகளை இடும்.
கோழிகளில் வெப்ப அயர்ச்சியைக்
குறைக்கும் மேலாண்மை முறைகள்
தீவன மேலாண்மை
• குளிர் காலத்தை விட கோழிகள் 5–10 வீதம் கோடை காலத்தில் தீவனத்தை குறைவாகவே உட்கொள்ளும். இதனால் தேவையான எரிசக்தி , புரதம், அமினோ அமிலங்கள், கனியுப்புகள் ,விற்றமின்கள் போன்ற ஊட்ட சத்துகள் குறைவாகவே கிடைக்கும். இதனால் கோழிகளின் எடை குறைவதோடு முட்டை உற்பத்தியும் பாதிக்கப்படும். எனவே ஊட்டச் சத்துக்களை அதிக அதிகம் உணவில் சேர்க்க வேண்டும் . [ 5–10%]
• அனுசேபம் / வளர்சிதை மாற்றத்தின் போது புரத உணவுகள் அதிகளவு வெப்பத்தினை வெளி விடுவதால் இந்தக் காலத்தில் தீவனத்தில் புரதத்தின் அளவை கணிசமாகக் குறைக்க வேண்டும் .[ 1-1.5%]
• சக்திக்காக தீவனத்தில் சேர்க்கப்படும் சோளம்,அரிசி குருணல்,தவிடு போன்ற காபோஹைதரேட்/ மாப்பொருள் உணவுகள் அனுசேபத்தின் போது அதிக வெப்பத்தை வெளிவிடுவதால் அதிக வெப்ப அயர்ச்சியை தரக் கூடியன. இதனால் அதிக வெப்பம் தராத தாவர எண்ணெய் போன்றவற்றை சேர்த்து [ அதிகளவு 5%] அந்த சக்தியை ஈடு செய்யலாம்.
• வெப்ப அயர்ச்சியால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதால் விற்றமின் மற்றும் செலினியம் சத்துகளை வழங்கலாம். இவை இனப்பெருக்க பிரச்சினைகளை தீர்க்க வல்லன.
• முட்டை உற்பத்திக்கு பைகாபனைட் [ HCO3] உப பொருள் தேவை. வெப்ப நாள்களில் கோழிகள் அதிகமாக வாய் மூலம் காபனீர் ஒட்சைட் [ Co2] வாயுக்களை வெளி விடுவதால் தேவையான் பை காபனேட் கிடைக்காமல், முட்டை உற்பத்தி குறைவடைவதோடு., தரம் குறைந்த தோல் முட்டைகளை கோழிகள் இடத் தொடங்கும். மேலும் அதிக காபனீர் ஒட்சைட் வெளியேறுவதால் உடலின் அமில கார சமநிலை பாதிக்கப்பட்டு காரத்தன்மை அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கடுமையாகக் குறைவடையும். இதனை தடுக்க உணவில் NaHco3 சேர்க்கலாம்.[ 1000kg உணவுக்கு 1.5=2kg NaHco3 ]
• விற்றமின் போன்றவை வெப்ப அழுத்தத்தை குறைப்பதால் அவற்றை உணவில் வழங்கலாம். விற்றமின் D ஐ வழங்குவதன் மூலம் முட்டை ஓடு சார்ந்த பிரச்சினைகளை குறைக்கலாம். கரும்புச் சாறு போன்றவற்றை பிசைந்து கொடுத்து வழங்கினால் கோழிகளின் உணவு உட்கொள்ளுகை அதிகரிக்கும்.
தண்ணீர் மேலாண்மை
• அதிகதிகமாக தண்ணீர்த் தொட்டிகளை வைக்க வேண்டும்.
• சிறிய பண்ணைகளாயின் மண் சட்டிகளில் தண்ணீர் வைக்கலாம். மதிய வேளையில் அதனுள் ஐஸ் கட்டிகளை போட்டு வைக்கலாம்.
• தண்ணீர்த் தொட்டிகளின் வெளி மற்றும் உட்புறத்தை சுண்ணாம்பைப் பூசுவதன் மூலம் அவை குளிர்ச்சியாக காணப்படும். அத்துடன் வெள்ளை நிறம் வெப்பத்தைப் பிரதிபலிக்க கூடியது.
• மதிய நேரத்தில் தொட்டிகளில் உள்ள தண்ணீர் விரைவாக வெப்பமாவதால் அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். மேலும் தண்ணீரில் குளுக்கோஸ் , விற்றமின், கனியுப்புகளை கலந்து வழங்கினால் இழக்கப்படும் மேற்படி சத்துகளை ஈடு செய்யலாம்.
• பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கிகள் வெப்பமான நேரங்களில் விரைவாக வெப்பமாவதால் முடிந்தவரை கிணற்றில் இருந்து நேரடியாக தண்ணீரை வழங்குவது சிறப்பானது.
கொட்டகை மேலாண்மை
•கொட்டகையை காணியின் உயரமான மற்றும் காற்றோட்டம் மிக்க இடத்தில் அமைக்க வேண்டும். கொட்டகை நீளப் போக்கில் கிழக்கு மேற்காக அமைக்கும் போது நேரடியான சூரிய ஒளியின் தாக்கத்தை குறைக்க முடியும்.
•கொட்டகைகளை நிழல் மரங்களை கொண்ட இடத்தில் அமைக்கலாம். அல்லாது போனால் நிழல் மரங்களை கொட்டகையை சூழ நடலாம். அத்துடன் பசுமையான புற்களையும் நட வேண்டும்.
•கொட்டகைகளின் கூரையை வைக்கோல் மற்றும் தென்னோலை கொண்டு அமைத்துக் கொள்ளலாம். அஸ்பெஸ்டாஸ் சீற் மற்றும் தகரம் கொண்டு மேயப்படும் கூரைகளை வெள்ளை சுண்ணாம்பு கொண்டு அடிப்பதோடு உட்புற மற்றும் வெளிப்புற சுவர்களையும் சுண்ணாம்பு மூலம் அடிக்கலாம். கூரையின் மேல் கொடித் தாவரங்களை கொண்டு படர விடுவதன் மூலம் வெப்பத்தைக் கணிசமாக குறைக்கலாம். மேலும் நீர் தெளிப்பான்களை கூரை மேல் அமைத்து வெயில் நேரங்களில் அதன் மூலம் குளிர்ந்த நீரை கூரைத் தெளிக்கலாம். உட்புறக் காற்றோடத்தையும் வெப்பத்தையும் சரி செய்ய தகுந்த மின்விசிறிகளைப் பாவிக்க வேண்டும்.
ஈரமான சாக்குகளை மதிய நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் வெப்பக் காற்றினைத் தவிர்க்க முடியும். அண்மைக்காலத்தில் மிகப் பெரிய வர்த்தக கோழிப்பண்ணைகள் வெப்பத்தை வழங்காத செயற்கையான சுவர்களை கோழிப் பண்ணைகளில் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது.
•கோழிப் பண்ணைகளின் சுவரின் அகலம் 25= 30 அடிக்கு அதிகம் இருக்க கூடாது. அதனை விட அதிகரிக்கும் போது உட்புற காற்றோட்டம் கணிசமாகப் பாதிக்கப்படும். கொட்டகைகளின் நீளத்தை வசதிக்கு ஏற்ப மாற்றலாம். உயரமும் 12=15 அடி அளவில் இருக்கலாம். மேலும் அதிகரிப்பதால் பெரியளவு பயன்கள் கிடைக்காது.
நோய் மேலாண்மை
கோடை காலத்தில் கோழிகள் தமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக இழப்பதால் பல நோய்கள் ஏற்படுகின்றன.எனவே கோழிகளுக்கு பொதுவாக ஏற்படும் நோய்களுக்குரிய தடுப்பு மருந்துகளை சரியான வயது ,பருவத்தில் வழங்குவது சிறப்பானது.
ரனிக்கட்[New castle disease] ,கம்போரா [ Gamboro – infectious bursal disease] மற்றும் அம்மை [ Fowl pox] நோய்க்குரிய மருந்துகளை மருத்துவ ஆலோசனையின்படி சரியான வழிகளில் வழங்க வேண்டும். மேலும் பூச்சி மருந்துகள் மற்றும் இரத்தக் கழிச்சல் [Coccidiosis] நோய்க்குரிய மருந்துகளையும் சரியான விகித்தில் வழங்க வேண்டும். ஏனைய விலங்குகளை போல் அல்லாது கோழிகள் விரைவாக நோய் தொற்றுக்கு உள்ளாகினால் நூற்றுக் கணக்கில் இறக்கநேரிடும் [High mortality and morbidity].
எனவே சிறியளவு நோய் அறிகுறிகள் தென்பட்ட உடன் வைத்தியரை நாடுதல் அவசியம்.இறந்த கோழிகளை பிரேத பரிசோதனை செய்யவும் வேண்டும். இதன் மூலம் சரியான நோய்களை கண்டறிந்து விரைவாக சிகிச்சையை செய்ய முடியும்.பொதுவாக கோழிகளில் பல நோய்களின் அறிகுறிகள் ஒரே மாதிரி தெரியும் என்பதால் அனுபவம் மிக்க கால்நடை வைத்தியரை அணுகி ஆலோசனையைப் பெற வேண்டும்.
எனவே கோடை காலத்தில் கோழிகளில் ஏற்படும் வெப்ப அயர்ச்சியை மேற்கூறிய சகல மேலாண்மை முறைகள் மூலம் சரிசெய்து அவற்றின் ஆரோக்கியத்தை பேணுவதன் மூலம் அதிக உற்பத்தியை பெறமுடியும்.
Dr.எஸ்.கிருபானந்தகுமாரன்
கால்நடை மருத்துவர்
செட்டிகுளம், வவுனியா