in ,

சஜித்தணி கூட்டத்தில் ‘இருபதால்’ பெரும் கலகம்; முஷாராப் வெளியேற்றம் – மனோ, திகா பாய்ச்சல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (23) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற போது அங்கு பெரும் அமளி துமளி ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (22) 20ம் திருத்தச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பில் எதிர்கட்சி எம்பிகள் 8 பேர் ஆதரித்த சர்ச்சையை அடுத்து இடம்பெற்ற இந்த கூட்டத்தில் அரசுக்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை. இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான அரசியலமைப்பு திருத்த உட்பிரிவு மீதான வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவை வழங்கிய முஷாரப் எம்பி மட்டும் கூட்டத்தில் கலந்து கொண்டபோதிலும் அவர் பிற உறுப்பினர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து வெளியேற்றப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

ஹரின் பெர்னாண்டோ, ராஜித சேனாரத்ன உட்பட பல எம்பிகள் இந்த கூட்டத்தில் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் எம்பிகள் ஆதரவு வழங்கியமை அவர்களின் கட்சித் தலைவர்களுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. இதுவரை குறித்த எம்பிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது அதனையே உணர்த்துவதாகவும் பல எம்பிகள் சத்தமிட்டனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் அரவிந்த்குமார் எம்பியை கட்சியிலிருந்து நீக்கியமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு எம்பிகள் சிலர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோர் மீது சில எம்பிகள் அநாவசிய வார்த்தைப் பிரயோகங்களை செய்தபோது மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் அவற்றை நிராகரித்து குரல் கொடுத்தனரென தெரிவிக்கப்படும் நிலையில்,

“அரசுக்கு ஆதரவளித்தது தவறு. ஆனால் அதனையொரு கொலைக்குற்றம் போல சித்திரித்து நீங்கள் கடிவாளம் போட முடியாது. நீங்கள் ஆட்சியில் இருந்தாலும் இதனையே செய்திருப்பீர்கள். ஹக்கீம், ரிஷாட் ஆகியோருக்கு கட்சிக்குள் இருக்கும் அழுத்தங்கள் அவர்களுக்கே தெரியும். நாங்கள் உங்களுக்கு தேவையில்லையென்றால் சொல்லுங்கள். தமிழ், முஸ்லிம் தலைவர்களை இளக்காரமாக கருதாதீர்கள்” என்று தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் அரசுக்கு ஆதரவளித்த முஸ்லிம் எம்பிகள் மீது நடவடிக்கை எடுக்காது விட்டால் அவர்களோடு ஹக்கீமையும், ரிஷாட்டையும் சேர்த்து வெளியேற்ற வேண்டுமென குறித்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

முதல்முறையாக உச்சம் தொட்ட கொரோனா – இன்று மட்டும் 865 தொற்று!

ஆட்களை தள்ளிவிட்டு கொள்ளையிடும் கும்பல் கைது!