கட்டுரைகள் சிறப்புக் கட்டுரை யாழ்ப்பாணம்

தங்கம்மா அப்பாக்குட்டியின் பிறந்த தினம் இன்று

ஈழமணித் திருநாட்டின் முடிபோல் விளங்குகின்ற யாழ்ப்பாணத்துக்கு வடக்கே அற்புத வடிவில் அமைந்திருக்கும் தெல்லிப்பழையிலே தம்மை வழிபடும் அடியார்களின் துன்பங்களைத் துடைத்தெறிய அமர்ந்திருக்கும் ஆதிபராசக்தி அம்சமான ஸ்ரீ துர்க்காதேவி அம்பிகையின் அருட்பிரவாகத் திறன் சொல்லுந்தரமன்று.

அருள் கொழிக்கும் இந்த ஆலயத்தைப் பரிபாலிக்கும் திவ்ய திருப்பணிக்கென்றே தம்மை அர்ப்பணித்தவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்.

வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவி ஸ்ரீ துர்க்காதேவியின் பரிபூரண அருளைப் பெற்றவர் இவர். அன்பே உருவான அம்மையார் அறிவின் இருப்பிடமாவார். அவரது வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வாக்கும் அருள்மயமானது.

அன்பின் திருவுருவாய் ஆற்றலின் உறைவிடமாய் பண்பின் கருவூலமாய்த் திகழ்ந்த அன்னையின் அளப்பரிய சேவை இங்கு மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பரவி அபிவிருத்தி அடைந்திருப்பது சொல்லி முடியாத ஒன்று.

அவரது சமயப்பணி பல்வேறு மட்டத்திலும் உயர்வடைந்து காணப்படுவதையிட்டு எமது உள்ளம் பூரிப்படைகின்றது. தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தை நோக்குமிடத்து அவரது ஆக்கபூர்வமான பணிகள் இப்பொழுதும் கட்டியங்கூறி நிற்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆலயத் திருப்பணி வேலைகள், வழிபடுவோர் வசதி கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ஆலயத்தை நிர்வகிக்கும் பாங்கு, ஆலயத்தில் வேலை செய்வோரிடம் பழகும் பண்பு, தேவை கருதி வரும் பொதுமக்களுக்குச் செய்யும் உதவி, கோயில் குருக்களுக்கு வேண்டிய உதவி, நாதஸ்வர, தவில் கலைஞர்கள் அணுகுமுறை, பூசைக்கான நேர ஒழுங்கு என்று இன்னோரன்ன பல வழிகளிலும் தங்கம்மா செய்த சேவைகள் வானளாவ உயர்ந்தே நிற்கின்றன.

அதாவது நல்ல திறமைக்கும் தரத்துக்கும் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் நல்லதொரு கட்டமைப்பான கூட்டு முயற்சி கலந்த அன்பு நிர்வாகம் என்பது தெளிவாகப் புலனாகின்றது.

பொதுவாக தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் தோற்றத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஒரு தெய்வீகம் கலந்திருப்பதை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.

எந்நேரமும் சிரித்த முகம், மற்றவர்களைக் கவர்ந்திழுக்கக்கூடிய காந்த சக்தியுடைய கண்கள், அந்தக் கண்களைப் பார்க்கும் போது அதில் ஒரு சாந்தமும் ஈர்ப்பும் இருப்பதைக் காணலாம். அவருடன் உரையாடும்போது இன்னும் கொஞ்ச நேரம் கதைத்திருக்கலாம். விரைவில் முடித்துக் கொண்டோமே என்று ஓர் ஆதங்கம் மிஞ்சியிருக்கும். அவரின் தோற்றத்திலே ஒரு தெய்வீகக் கலை எந்த நேரமும் தாண்டவமாடும். அது அவருக்கு அம்பிகை கொடுத்த வரம்.

அவருடைய ஆலயமான தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி அம்பிகை ஆலயம் சரித்திரத்தில் பிரசித்தி பெற்ற ஒரு திவ்ய அருள் நிறைந்த ஷேத்திரமாகும். அங்கு காலடி எடுத்து வைப்பதற்கு நாம் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். அத்தனை புதுமையும் மகத்துவமும் மங்களமும் நிறைந்த ஓர் அருள் ஆலயமாக அது மிளிர்கின்றது.

உள்ளே நுழைவாயில் ஆலயப் பெயர் தாங்கிய வளைவு நம்மை வருக வருக என்று வரவேற்குமாப் போல் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே நுழையும் போதே எமது உடம்பிலுள்ள பாரமெல்லாம் குறையுமாப் போல் ஓர் உணர்வு. நாங்கள் செய்த பாவமெல்லாம் விலகிவிட்டது போல ஓர் உணர்வு நெஞ்சில் இனிக்கும். அருள்மயமான இந்த ஆலயமானது அமைந்திருக்கும் அழகே தனி.

சிவ சின்னங்களை அணிந்து கொண்டு ஆலயத்தின் உள்ளே போனவுடன் எமது உள்ளமெல்லாம் ஆனந்த மேலீட்டினால் துள்ளும். மிகுந்த பயபக்தியுடன் விநாயகரைக் குட்டிக் கும்பிட்டுக் கொண்டு மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஆதிபராசக்தியான ஸ்ரீ துர்க்கையம்பாள் தரிசனத்துக்குப் போகலாம். பார்த்தவுடனே பக்தியை உண்டுபண்ணும் அம்பிகையின் திருக்கோலம் கண்ணுக்கு நல்ல விருந்தளிக்கும்.

உடனே இந்த உலக பந்தபாசமெல்லாம் மறந்த ஒரு தெய்வீகக் களை வந்துவிடும். அருள் வழங்கும் அழகு முகத்தோடும் அருளோடும் வீற்றிருக்கும் அம்பிகையைத் தரிசித்துவிட்டு ஆலயத்தை வலம் வந்தால் உள்ளே மேற்கு வீதியில் ஸ்ரீ கஜலக்ஷ்மி அம்பாள் அழகே உருவெடுத்தாற் போல் அருள் தோற்றத்துடன் வீற்றிருக்கின்றாள்.

ஸ்ரீ கஜலக்ஷ்மியை வழிபட்டுக் கொண்டு திரும்பினால் பாலமுருகன் பக்தியோடு பரவசமூட்டும் கோலத்தில் பாங்காக வீற்றிருப்பதைக் காணலாம். இந்த விதமான கட்டுக்கோப்பான ஆலய அமைப்பை அழகுற அமைப்பித்த பெருமை செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களையே சாரும்.

இது எல்லாவற்றுக்கும் மேலாக அவர் செய்த ஓர் அறப்பணி அநாதைப் பிள்ளைகளுக்கு வாழ்வளித்தமையேயாகும். மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் என்பதற்கு ஓர் இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர் அம்மையார் என்றால் மிகையல்ல. வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவியான ஸ்ரீ துர்க்காதேவியைத் தினசரி ஏற்றிப் போற்றித் துதித்து வந்த தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள் தமக்குத் தாய் தந்தையர்கள் இல்லை என்ற குறையே தெரியாமல் அநாதைப் பிள்ளைகளை யெல்லாம் அன்போடு ஆதரித்து இன்ப வாழ்வளித்தமை போற்றுதற்குரிய செயல்.

இரக்க சுபாவமுடையவள் பெண் என்பதற்கு இலக்கணம் வகுத்த தங்கம்மா அம்மையார் குணத்திலும் தங்கமானவரே. கோபமே வராத சாந்த குணம் படைத்த இவர் யாரோடு யார் எப்படிப் பழகவேண்டும், பேச வேண்டும் என்பதன் அணுகுமுறையை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றார்.

சினந்தறியாத சீரிய குணம் படைத்த இவர் எல்லோருடனும் சுமுகமாகப் பழகும் தன்மை வாய்ந்தவர். இவரோடு பழகியவர்களுக்குத் தெரியும் இவர் எப்படிப்பட்டவர் என்று.

அமைதியே உருவான அம்மையார் அன்னதானப் பணியும் செய்து மக்களின் பசிப்பிணி போக்கியவர். ஆலய சுற்றாடலில் அன்னதான மடங்களை அழகுற அமைத்து அறப்பணிதான் தவப்பணி என்று வாழ்ந்த இவர், அருகில் ஒரு கல்யாண மண்டபத்தையும் கட்டுவித்துக் கல்யாணஞ் செய்ய வருபவர்க்கு சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் வசதிகளைச் செய்து நல்லதொரு நிர்வாகியாகவும் திகழ்ந்தார்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் நற்சிந்தனைகளை வழங்கி மக்களை நன்னெறிப்படுத்தும் நோக்கில் செயற்பட்ட அம்மையார் வாழ்வியலுக்கு மக்களின் ஆதாரமாகத் திகழ்ந்தார். அவரது ஒவ்வொரு செயற்பாடும் ஏதோ ஒரு விதத்தில் பொதுமக்களுக்குப் பயன்தரும் ஒன்றாகவே இருந்ததை நாம் காணக்கூடியதாக இருந்தது.

சைவமும் தமிழும் தழைத்தோங்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் முற்றுமுழுதாக சேவைக்காகவே தம்மை அர்ப்பணித்துச் செயற்பட்ட அம்மையார், தெல்லிப்பழை துர்க்கை அம்மன் தேவஸ்தானத்தின் வெளியீடாக ‘அருள் ஒளி’ என்ற சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தார் என்பது மிகவும் மகிழ்ச்சி தரும் செயற்பாடாகும்.

சைவ சமயத்தின் சின்னமாகிய விபூதியை முறையாக அணிய வேண்டும் என்று விரும்பிய செல்வி தங்கம்மா தமது ஆலயத்தில் சமய தீட்சை பெற்றுக்கொள்ள வசதியாக சில ஏற்பாடுகளைச் செய்து அடியார்களுக்கு சைவத்தின் மேன்மையை இடித்துரைத்தார்.

இவரது விடாமுயற்சியால் சைவசமய தீட்சை பெற்ற மாணவர்கள் நித்திய கருமங்களைச் செய்ய ஒழுங்குகளையும் மேற்கொண்டார். செல்வியின் ஏற்பாட்டில் தீட்சை பெற்ற பலர் சைவ சமய உண்மைகளை அறிந்து தம்மையே முற்று முழுதாக மாற்றி சைவ வாழ்க்கை வாழ்கின்றார்கள்என்றால் அந்தப் பெருமை இவருக்கேயுரியது.

அது மாத்திரமன்றி மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் மகளிர் அமைப்புகளை உருவாக்கிப் பெண்களின் வாழ்க்கை வளம்பெற பல முன் முயற்சிகளை மேற்கொண்டார்.

சமய நிறுவனங்கள் மூலமாக நிதியுதவி பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான வழிவகைகளை நெறிப்படுத்தினார். இன்னும் சொல்லப் போனால் சைவசமயத்தைப் பின்பற்றி வாழ்பவர்கள் உண்மைச் சைவர்களாக வாழ வேண்டும் என்று கூறி மச்சம் மாமிசம் புலாலுண்ணக் கூடாது என நல்வழிப்படுத்தினார்.

தமிழர் பண்பாடும் கலையும் வளர வேண்டும் என எண்ணிய அம்மையார் நல்லூர் கோவில் வீதியில் “ஸ்ரீ துர்க்கா மணிமண்டபம்” என ஒரு பெரிய மண்டபத்தைக் கட்டுவித்து யாழ்ப்பாணக் கலைஞர்கள் தங்களது கலைத்திறனை வெளிக்காட்டும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மகோற்சவ காலங்களில் இந்தத் துர்க்கா மணிமண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து உதவினார். தமிழர் பண்பாடு வளர வேண்டும், தமிழ்க் கலை முன்னேற வேண்டும் என்ற நல்ல சிந்தனையுடன் சில கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தி மாணவர்களை ஊக்குவித்தார். அவ்வப்போது அவர்களுக்கான தேவைகளை உணர்ந்து பண உதவியும் செய்து வந்தார்.

இந்தத் துர்க்கா மணிமண்டபத்தில் பண்ணிசைக் கச்சேரி, சங்கீதக் கச்சேரிகள், பல்லியம், தாளவாத்தியக் கச்சேரிகள், வில்லிசை, நடனம், நாடகம் போன்ற இன்னோரன்ன பலவும் நடைபெறுவது வழக்கம். ஆலயத் திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து வெகுநேரமாக இசையில் மூழ்கிக் கிடப்பார்கள்.

மதிய வேளையில் அடியார்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். எத்தனையோ விதங்களில் “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்று தொண்டு செய்யும் துர்க்கா மணிமண்டபமும் செல்வி தங்கம்மா வினுடைய நிர்வாகத்திலேயே செயற்பட்டு வந்ததால் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

மொத்தத்தில் தங்கம்மாவின் வாழ்க்கை மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொண்டுமயமாகவே அமைந்திருந்தது. உலக மக்கள் சேமமாக வாழ்தல் வேண்டும் என்று பரந்த பெருநோக்குடன் வாழ்ந்த அன்னையார் இன்று இல்லையே என்பதை எண்ணும் போது துக்கம் தொண்டையை அடைக்கின்றது.

“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்ற நியதிப்படி வாழ்ந்து உலகில் வாழும் மக்கள் எல்லோரும் ஓரினம் என்ற கொள்கையை வலியுறுத்தி சாதி மத இன வேறுபாடுகளை வெறுத்து ஒதுக்கியவர் தங்கம்மா அவர்களே. இவருடைய எண்ணமெல்லாம் மனிதப் பிறவி எடுத்த புனிதமான மக்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்து டனும் எவ்வித இடையூறுகளுமின்றி வாழ வேண்டும் என்பதே.

மேன்மைகொள் சைவநீதி உலகெலாம் விளங்க வேண்டும் என்று பாடுபட்டவர் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள். 07.01.1925 இல் அவதரித்து அம்மையார் இறக்கும் வரை பணி செய்தவர். சிறுவயது முதல் உண்மை, நேர்மை, தியாகம், சமயப்பற்று, அமைதி, சாந்தம், சமூகப்பற்றுடன் மிளிரிந்த இவர் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆசிரியராகி அறப்பணி ஆரம்பித்தார்.

சிறியோர் முதல் பெரியோர் வரை இறையுணர்வை யூட்டக்கூடிய நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதியக்கூடிய சொல்வளம், பொருள்வளம், அருள்வளம் நிறைந்து காணப்பட்ட இவரது சொற்பொழிவுகள் சிறப்பானவை.

இவரது அயராத முயற்சியால் உருவகிக்கப்பெற்ற ‘மகளிர் இல்லம்’ மிகவும் தரமானது. சைவக் கிரியைகளும் விரதங்களும் பற்றிய நூல் இவரது வெளியீடு. திருமுறைச் செல்வி, துர்க்கா துரந்தரி, சிவஞான வித்தகி, சிவத்தமிழ்ச் செல்வி, தெல்லி நகர் தந்த செல்வியின் புகழ் சொல்லுந்தரமன்று.

இவரது நூலான “கந்தபுராணப் பொருள்” சாகித்திய இலக்கிய விருது பெற்றது. இலங்கையில் யுத்த அனர்த்தங்கள் நேர்ந்த காலத்திலும் சிறிதும் தளராத மனத்திடம் கொண்டவராய் தமது சேவை இல்லங்களை இடத்துக்கிடம் மாற்றி மாற்றிக் கொண்டு சென்று அயராது உழைத்தார். இவரது தியாக சிந்தை, நேர்மைப் பண்பு, தூய அன்பு, அறநெறிப் பண்பு யாருக்குமே வராத அரிய சொத்து. உலகத்தின் சேவைக்கு ஒரு சகோதரியாகத் திரேசா அம்மையாரைக் குறிப்பிடுவது போல் இவரையும் சொல்வதில் தவறேதுமில்லை.

சிவத்தமிழ்ச் செல்வியாக அறவாழ்க்கை வாழ்ந்து தமது அயராத தளராத உழைப்பினால் அளப்பரிய சேவையாற்றிய அம்மையார் அன்பின் இருப்பிடம், பண்பின் உறைவிடம். இவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சிவத்தமிழ்ச் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி பெண்களின் தனியரசி தமிழ் மக்களின் இணையற்ற ஈடில்லாச் சொத்து துர்க்கா துரந்தரி.

இவரது அருஞ்சேவையைப் பாராட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்குக் “கலாநிதி” பட்டம் வழங்கிச் சிறப்புச் செய்தது. எல்லா நலன்களும் பெற்று வாழ்ந்திருந்த அன்னை இறுதிக்காலத்தில் நோய்வாய்ப்பட் டிருந்தார். நோயின் பிடிக்குள் சிக்கிய இவர் ஈற்றில் மரணத்தின் பிடியிலும் சிக்கிவிட்டார்.

சைவ உலகமே கவலையில் ஆழ்ந்தது. ஈடு இணையில்லாத இனிய அன்னை இவ்வுலக வாழ்வை நீத்து மேலுலக வாழ்வை மேற்கொண்டார். இவர் உடம்புதான் மறைந்து விட்டதே தவிர உருவம் மறையவில்லை.

தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் அம்மையார் புகழ் ஓங்கி வளர்ந்திருக்கிறது. ஆழ்ந்த அடக்கமான ஆற்றொழுக்குப் போன்ற பேச்சு இவருக்குக் கைவத்த கலை. ஒரு விடயத்தைப் பற்றிப் பேசும்போது அவர் கையாளும் மேற்கோள் களும் சான்றுகளும் எடுத்துக்கூறும் பாங் கும் வியப்புக்குரியது.

பேச்சு வன்மையும் சொற்பொழிவுத் திறனும் கொண்டிருந்த அம்மையார் எதற்கும் அஞ்சாத சொல்லாண்மையும் அதனூடாக முகிழ்த்த ஆளுமையும் உடையவர்.

இவரது சொற்பொழிவாற்றல் யாருக்குமே வராது. ஏன் என்று கேட்டால் ஒரு பொருளை விளக்கும் போது சொற்தெளிவும் அமைதியும் கருத்தாழமும் மிகுந்திருக்கும்.

ஈழத்தின் சைவ வளர்சிக்கும் தமிழ் வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றிய அம்மையார் ஈற்றில் அம்பிகையின் திருப்பாதங்களில் அமைதியும் ஆறுதலும் சாந்தியும் பெற்றுவிட்டார்.

Related posts

கண்ணீரில் மிதந்தது உடுத்துறை சுனாமி நினைவாலயம்

கதிர்

ஹெரோயின் வைத்திருந்த இருவர் யாழில் கைது!

G. Pragas

தை மாதத்துக்குள் 1000 ரூபாய்!; யாழில் தொண்டமான்

G. Pragas

Leave a Comment