செய்திகள் பிரதான செய்தி மன்னார்

சரணடைந்தவர்கள் குறித்து 10 வருடங்களாக பதில் இல்லை

இறுதி யுத்தத்தின் போது அரச படைகளாலும், துணை இராணுவக் குழுக்களாலும் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதி நாட்களில் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்கள், சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களை யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாகியும் வெளிப்படுத்தப்படவில்லை என வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் இன்று (23) காலை ஒன்று கூடிய வடமாகாண காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்று கூடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிசேலா பஸ்லெற் யெறியா அவர்களுக்கு இன்றைய தினம் மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கடந்த 10 ஆண்டுகளாக போராடியும் வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமான அரசிடமிருந்து எமக்கு நீதி கிடைக்காது என்பதனை நன்கு உணர்ந்துள்ள நிலையில் நாம் சர்வதேச சமூகத்திடம்,ஐநா மனித உரிமைகள் பேரவை, ஐ.நா பாதுகாப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமிருந்தே நீதியை எதிர்பார்த்து நிற்கின்றோம்.

கடந்த 16-12-2019 திகதி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி ‘காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்களை வழங்குவதுடன், குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்துச் சிந்திக்க முடியும்’ என்றும் அவர்களை திரும்பக் கொண்டுவர முடியாது என்றும் கூறியுள்ளார். ஜனாதிபதியின் மேற்படி கருத்தினை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

ஜனாதிபதி கூறுவது போன்று எமது உறவுகள் காணாமல் போகவில்லை. மாறாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினராலும், அவர்களுடன் இணைந்து இயங்கிய துணை இராணுவக் குழுவினராலும் கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் யுத்தத்தின் இறுதியில் இராணுவத்தினரிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டும், உறவினர்கள் முன்னிலையில் சரணடைந்தவர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உயிருடன்இல்லை என்றால் இராணுவமும் அரசும் பொறுப்புக் கூற வேண்டும். குறிப்பாக இறுதி யுத்த காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர் என்ற அடைப்படையில் தற்போதய ஜனாதிபதியும் பொறுப்புக் கூற வேண்டியவரே.

கடந்த ‘நல்லாட்சிக்’ காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் விருப்பங்கள் கேட்டறியப்படாமல் உள்ளக விசாரணைக்கு சந்தர்பம் வழங்கப்பட்டமை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களது சம்மதம் இல்லாமல்’காணாமல் போனவர்களுக்கான’ அலுவலகம் திறக்கப்பட்டமை போன்ற செயற்பாடுகளானது மேற்படி காணாமல் ஆக்கப்பட்டமைக்குப் பொறுப்புக் கூறும் கடப்பாட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை தற்போதய ஆட்சியாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

அவ்வாறு உள்ளக விசாரணைக்குச் சந்தர்ப்பம் வழங்குமாறு கோரியவர்களும் காணாமல் போனோர் அலுவலகம் திறக்கப்படுவதனை நியாயப்படுத்தியவர்களும் எப்போதும் மறைமுகமாகத் தனக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டு.

எனவே இலங்கை அரசு தாம் செய்த குற்றங்களுக்கு தம்மைத் தாமே தண்டிக்கப்போவதில்லை. எனவே சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றின் மூலமாகவே எமக்கு நீதி கிடைக்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அந்த வகையில் தங்களிடம் கீழ்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

(1) பொறுப்புக்கூறல் தொடர்பில் இலங்கை அரசுக்கு வழங்கிய கால அவகாசத்தினை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்கோருகின்றோம்.

(2) இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்பு, யுத்தக்குற்றங்கள், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் முழுமையான சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை ஒன்றை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது ஐ.நா செயலாளர் நாயகம் அவர்களுக்குப்பரிந்துரை செய்ய தாங்கள் வலியுறுத்த வேண்டும்.

(3) வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான ஐ.நா குழு இலங்கையை முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேணடுமென ஐ.நா செயலாளர் நாயகத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும்.

(4) இலங்கைக்கான விசேட ஜ.நா அறிக்கையாளரை நியமிக்க வேண்டும் என்ற பரிந்துரையையும்,வடக்கு – கிழக்கில் நிலவரத்தைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும்,உறு துணையாகவும் இருக்க ஜ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் ஒன்றை வடக்கு – கிழக்கில் நிறுவவேண்டும் எனவும் மீளவும் வலியுறுத்துகின்றோம்” என, குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

காலனித்துவ சக்திகள் மீண்டும் காலூன்றுவதை எதிர்க்க வேண்டும்…!

Tharani

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை

Tharani

ஷவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்பு

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.