செய்திகள் பிரதான செய்தி

சிகை ஒப்பனை நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்க கோரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக சிகை ஒப்பனை நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குக என யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் சிகை ஒப்பனை நிலைய சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்குறித்த விடயம் தொடர்பில் யாழ் மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கத்திற்கு இன்று 20.03.2020 அனுப்பி வைத்துள்ள கடிதத்திலே மேற்குறித்த விடயம் தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

உலகில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கம் குறித்து அனைவரும் அறிந்திருக்கின்றோம். இந்நிலையில் இவ் வைரஸ் தாக்கமானது வடக்குமாகாணத்தில் இதுவரை ஏற்படவில்லை என்று, எவ்வித முன்னெச்சரிக்கையும், முன்னேற்பாடுகளுமின்றி அசமந்த போக்கில் இருக்கின்றோம். எனவே இது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த 17.03.2020 அன்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு தொடர்பாக நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது. விசேடமாக கொரோனா வைரஸ் நோய் தொடர்பில் முன்னெச்சரிக்கையுடன் கூடிய கட்டுப்பாட்டை மேற்கொள்ளும் விதமாக எதிர்வரும் இரு வாரங்களுக்கு பொது மக்களின் தேவையற்ற நடமாட்டங்களை யாழ் நகர்ப்பகுதியில் மட்டுப்படுத்தும் விதமாக மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்யும் பலசரக்கு வியாபார நிலையங்கள், உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்ந்த ஏனைய அத்தியாவசியமற்ற வியாபார நிலையங்களை மூட உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கி மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

இந் நிலையில் சிகை ஒப்பனை நிலையங்களினூடாக குறித்த வைரஸ் தொற்று அதிகளவில் பரவுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றமையை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே 21.03.2020 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் எதிர்வரும் இரு வாரங்களுக்கு தங்கள் நிர்வாகத்திக் கீழ் செயற்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து சிகை ஒப்பனை நிலையங்களையும் மூடி பொது மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்துவதற்கும், இக் கொடிய நோய்த் தாக்கத்திலிருந்து தங்களையும், மக்களையும் பாதுகாப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தங்களை அன்புரிமையோடு கேட்டுக் கொள்கின்றேன். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனநாயகத்தை சுட்டு விழுத்தியவர் சம்பந்தன்! கூறுகிறார் சங்கரி

G. Pragas

101 மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

reka sivalingam

தேவிபுரத்தில் கிணற்றில் விழுந்த சிறுவன் பலி!

G. Pragas