ஏனையவை செய்திகள்

சித்த மருத்துவ தினம் இன்று: ஜனவரி 13

இன்றைய தினத்தில் சித்தர்களின் பெருமையை நாம் போற்றுவதுடன், சித்த மருத்துவத்தை பின்பற்றி நோயில்லா நெறி முறையை கற்றுக் கொண்டு வாழ்வதற்கு முயற்சி செய்வது சிறந்தது.

அகம் என்றால் ஒளி. தமிழ்மொழிக்கு ஒளியாக வெளிச்சத்தை ஏற்படுத்தித் தந்தவர் அவர். அகத்தில் தீயை கொண்டு அதன் மூலம் இந்த பிரபஞ்சத்துக்கு நல்வாழ்வு நெறிகளை போதித்ததால் ‘அகத்தியர்’ என்று அவர் அழைக்கப்படுகிறார்.

இவர் சித்த மருத்துவத்தின் முதல் சித்தர் என்றும், சிவனின் ஆணையின்படி பல்வேறு தமிழ் நூல்களை இயற்றினார் என்றும் இந்துமத நூல்களில் கூறப்பட்டுள்ளது. சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் வல்லவராக அகத்தியர் திகழ்ந்ததால் அகத்தியர் பெயரில் ஆயுர்வேதம் மற்றும் தமிழ் மருத்துவ நூல்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. இவர் தமிழ் மருத்துவத்தை முதன்மைப்படுத்தி பல சிகிச்சை முறைகளையும் ஏற்படுத்தியுள்ளார். இம்முனிவரின் பேரில் ஏராளமான மருத்துவ நூல்களும் உள்ளன.

சித்த மருத்துவத்திற்கும், ஆயுர்வேத மருத்துவத்திற்கும் பொதுவாக வணங்கப்படுகிற அகத்தியர், சித்த மருத்துவத்தின் தந்தை என்று வணங்கப்படுகிறார். ஆயுளை வளர்க்கும் மருத்துவம் ஆயுள்வேதியர்களால் பின்பற்றப்பட்டு வந்த காலத்தில் வேதத்தில் உள்ள கருத்துகளை சித்தத்தின் மூலம் தெளிவுபெற்று தனக்கென தனிப்பாதையை ஏற்படுத்தியவர்கள் சித்தர்கள். அந்த சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியராவார்.

இவர் தமிழ் சைவ மரபில் முதன்மையான சித்தராகவும், தமிழ்மொழியின் தந்தை எனவும், தமிழ் இலக்கியத்தில் சித்தர் என்றும் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் என்ற பெருமையுடன் வணங்கப்பட்டு வருகின்றார்.

திருவனந்தபுரத்தில் அனந்தசயனம் என்ற ஊரில் இவர் சமாதி அடைந்ததாகக் கூறப்பட்டாலும் கும்பகோணத்திலுள்ள கும்பேசுவரர் கோயிலில் இவரின் சமாதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமன்றி இலங்கையில் திருகோணமலை மாவட்டம், மூதூர் பகுதியில் அகஸ்தியர் வழிபட்ட சிவன் கோவில் காணப்படுவதாக ஆன்றோர் கூறியுள்ளனர்.

அகத்தியர் பல விடயங்களை கற்றுக் கொடுத்துள்ளார். நோய் ஆரம்பமுற்ற காலத்தில் நோயாளியின் மணிக்கடை சுற்றளவை கணக்கிட்டு அவர் விரலளவுக்கும், மணிக்கடை சுற்றளவுக்கும் உள்ள விகிதாசாரத்தின் அடிப்படையில், இட நோயின் தீவிரத்தையும், என்ன நோய் இருக்கும் என்பது பற்றியும் அறியும் ‘மணிக்கடை நூல்’ என்ற சூட்சுமத்தை கற்றுக் கொடுத்தவர் அகத்தியர். நாம் அன்றாடம் செல்லும் பாதையில் எந்தவித காரணமுமின்றி பாதையோரங்களில் இருக்கின்ற மூலிகைகளை கிள்ளி எறிவோம். அங்கு திரியும் பூச்சிகளை, ஜந்துகளை அடித்தோ, மிதித்தோ கொல்வோம்.

இதுபோன்று செய்வதால் பல வியாதிகள் உண்டாகுமென்று அகத்தியர் கர்மநோய் மருத்துவத்தில் குறிப்பிடுகிறார்.

இந்த உலகமானது அனைவருக்கும் பொதுவானது. பறவைகள், விலங்குகள், மனிதர்கள் என அனைவரும் வாழ வேண்டும்.

அவற்றின் வாழ்விடத்தை விட்டுக் கொடுக்காமல் விரட்டுவதால் நோய் உண்டாகும் என அகத்தியர் குறிப்பிட்டது எமது சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நல்ல எண்ணத்திலேயே ஆகும்.

ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும், ஒரு நோயாளி எப்படி நடந்து கொள்ள வேண்டும், நோயாளியுடன் வருபவர்கள் எப்படி மருத்துவரிடமும் நோயாளியிடமும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும், மருத்துவர் கூறும் வழிமுறைகளை எப்படி நோயாளி பின்பற்ற வேண்டும், நோயாளிக்கு தரும் உணவுகளின் மேல் எப்படி வீட்டில் இருப்பவர்கள் செம்மையாக நடந்து கொள்ள வேண்டும், எந்தெந்த நோய்க்கு எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும், எந்த நோய் தீரும், தீராது, நோயின் தீராத நிலையில் எப்படி இறப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை கற்றுக் கொள்ள வேண்டும், இறைவழிபாடு, மருத்துவம், மந்திரம், வாழ்வியல் முறைகள், கர்மவினை, கன்மம், பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட வாழ்வின் அர்த்தம் என்னவென்றெல்லாம் இவர் தமிழ் மருத்துவத்தை முதன்மைப்படுத்தி பல சிகிச்சை முறைகளை ஏற்படுத்தியுள்ளார். இவ்வாறு பல விடயங்களை அவர் கற்றுக் கொடுத்துள்ளார்.

சித்த மருத்துவம் தமிழர்களின் வாழ்வியல் மருத்துவமாகும். இது இயற்கையாக நமக்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு அன்றாட வாழ்க்கைக்கு எப்படி நாம் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்,

நோயின்றி வாழவேண்டும் என்பது பற்றியதாகும். அகத்தியர் பல்வேறு சித்தர்கள் வாயிலாக இதனைக் கற்றுக் கொடுத்துள்ளார்.

காலையில் எழுந்து கரி, உப்பு, வேப்பங்குச்சியில் பல் துலக்குவதில் இருந்து, சிறு தானியங்களால் செய்யப்பட்ட கஞ்சி, நீராகாரம், நீர், மோர், தேற்றாங்கொட்டை சுத்தப்படுத்தப்பட்ட நீர், கீரை, அறுசுவை உணவு, இரவில் விரைவிலேயே உறங்கச் செல்லுதல், அதிகாலையில் விரைவிலேயே எழுந்திருத்தல், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சந்தோஷமான வாழ்க்கை முறை ஆகியவைதான் சித்த மருத்துவம் நமக்கு சொல்லிக் கொடுத்த பாடங்களாகும்.

நவீன வாழ்க்கை முறையின் உணவுகளுக்கு நாம் அடிமையானதால், நாம் இழந்து விட்ட ஆரோக்கியத்தை மீட்டெடுக்க சித்தர்கள் கூறிய நெறிகளைப் பின்பற்றி வாழ்வது நலம் என்று எமது மூத்தோர் கூறியுள்ளனர்.

எண்ணெய் முழக்கு, அறுசுவை உணவு, சித்தர்களின் யோக வாழ்க்கை முறை, விரதமிருத்தல் போன்ற செயற்பாடுகளில் தினமும் ஈடுபட்டால் நோய்கள் அணுகாமல் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.

Related posts

மேன் முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவராக நவாஸ்

G. Pragas

பதுளையில் காட்டுத் தீ

reka sivalingam

கொரோனா குறித்து தொழில் திணைக்களம் விடுக்கும் அறிவிப்பு…!

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.