சிறு வயதில் மலரும் பிஞ்சுகளை விழுதுகள் கொண்ட மரமாக்குவோம்

சிறு மலராக மலர்ந்து எதிர்காலம் பற்றிய கனவுகளுடன் வளரும் பிஞ்சுக்குழந்தைகளை பாதுகாத்து பூங்காவாக பூத்துக்குலுங்க விடுவதை விட்டு அவர்களை நசுக்கி எதிர்காலத்தை வெறும் சருகுகளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

தாயின் கருவிலிருந்து சிதையாமல் வெளியே வரும் போதே நாம் வெற்றி பெற்று விடுகிறோம் என்று உரைத்த பாடல்கள் எல்லாம் தற்போது கைகட்டி வாய் பொத்தி நடக்கும் விடயங்களை வேடிக்கைப்பார்த்து நிற்கின்றன.

குழந்தை பிறந்ததும் இப்போதைய தாய்மாரின் கவலை எவ்வாறு பாதுகாப்பது – இந்த நரக உலகத்தில் சிறந்த எதிர்காலத்தை எப்படி காண்பிப்பது என்பதுதான். தாய், தந்தை, சகோதரன், சகோதரி சித்தப்பா, சித்தி பெரியப்பா பெரியம்மா தாத்தா பாட்டி ஏன் ஆசிரியர் என அனைத்து உறவுகளையும் சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது. இன்றைய நாளேடுகளிலும் சமூகவலைதளங்களிலும் அண்ணன் தங்கையை துஷ்பிரயோகம், அப்பா மகளை துஷ்பிரயோகம், ஆசிரியர் மாணவனை துஷ்பிரயோகம் என செய்திகள் வருவதை நாம் தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

எமது முந்தைய தலைமுறை பேணி வந்த ஒழுக்க விழுமியங்கள் தற்போது எட்டாக்கனியாகி கொண்டிருப்பது ஒரு கசப்பான உண்மையாகும். ஒருகாலத்தில் பெண்கள் வெறும் ஜடப் பொருட்களாகவும் அடிமையாகப் பார்க்கப்பட்ட காலத்தில் தோன்றிய விடுதலை கவிஞர்களான பாரதி ,பாரதி தாஸன், புதுமைப்பித்தன் போன்றோர் இன்றைய நிலையை கண்டால் என்ன சொல்வார்கள்?

புதுமைப் பெண்கள் பற்றி கனவு கண்ட பாரதியின் கனவு இன்று நனவானாலும் கூட பெண்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் , பாதையிலும், பஸ்களிலும் கடைகளிலும் எதிர்நோக்கும் மோசமான அனுபவங்களை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். குறிப்பாக பெண் பிள்ளைகளை நம்பி விட்டுச் செல்ல முடியாத ஒரு கலிகாலத்தில் தான் நாமிருக்கிறோம் என்றால் மிகையாகாது.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் என்கின்றனர் சான்றோர். ஆம் எதிர்காலத் தலைவர்களுக்கும் தலைவிகளுக்கும் இந்த சமூகத்தில் என்ன வகையான பாதுகாப்பு காணப்படுகிறது? நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய செய்திகளும் விழிப்புணர்வு விளம்பரங்களும் ஊடக அறிவித்தல்களும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. தொழில்நுட்பரீதியாக உலகம் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்ற போதிலும் எம் மத்தியில் இருந்த கண்ணியம் – கருணை போன்ற விடயங்களை இழந்து வருகிறோமோ என நினைக்கத் தோன்றுகிறது. இத்தவறை நாம் தெரிந்து செய்கிறோமா – தெரியாமல் செய்கிறோமா என்று இன்னமும் புரியவில்லை.

பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் குடும்பங்கள் தாய் தந்தை இருவரும் பணத்தின் பின்னால் ஓடுமிடத்து பிள்ளைகள் அரவணைப்பின்றி வாழும் அவல நிலை காணப்படுகிறது. இந்நிலையில் குழந்தைகள் அயல் வீட்டார், தாத்தா பாட்டி பராமரிப்பிலே அல்லது மதிய நேர குழந்தை பராமரிப்பு இல்லங்களிலோ விட்டுச் செல்லப்படுகின்றனர். அங்கு அவர்களின் பாதுகாப்பு எந்தளவுக்குள்ளது என்பது கேள்விக்குறியே. இதற்கெல்லாம் அடிப்படையில் காரணங்கள் இல்லாமல் இல்லை. மனிதன் இயந்திர வாழ்வியலுக்குட்பட்டு – மனிதத்தை இழந்து- ஆன்மீக பண்புகளை மறந்து மானிட விழுமியங்களின்றி இயந்திரம் போன்று வாழும் உடல் உள ஆரோக்கியமற்ற சூழலும் ஒரு காரணம். ஆனால் அது மட்டுந்தானா காரணம்? என்றால் இல்லை.

யார் சிறுவர்கள்?

ஐந்து வயது தொடக்கம் 18 வயது வரையானவர்கள் அனைவரும் சிறுவர் என்ற வகைக்குள்ளே அடங்குவர். ஐந்து வயது தொடக்கம் சுமார் 9 வயது வரையில் பெற்றோரை – குறிப்பாக தாயை சார்ந்து இயங்கும் சிறுவர்கள் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தனித்து இயங்க ஆரம்பிக்கின்றனர். இதுவே பதின்ம வயதையடையும் போது தனியாக இயங்க ஆரம்பிக்கும் அதேவேளை – உடல் உள மாற்றங்களை எதிர்நோக்குகின்றனர். சிந்தனைகளில் மாற்றங்கள் வருகின்றன.

சில நேரங்களில் பெற்றோரின் கட்டுப்பாட்டையும் கடந்து செல்ல முயல்வர். எது எப்படியிருப்பின் பிள்ளைகளில் நிலைமையைக் கவனித்து- வழிகாட்டி- பாதுகாத்து- சமூகத்துக்கு ஒரு நல்ல பிரஜையை வழங்குவது ஒவ்வொரு பெற்றோரினதும் தலையாய கடமை என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

பிள்ளைகளை பாதிக்கும் துஷ்பிரயோகங்கள்

துஷ்பிரயோகங்கள் என்பது பாலியல் ரீதியானவை மட்டுமல்ல. சிறுவர் துஷ்பிரயோகம் என்ற வார்த்தைக்குள் சிறுவர்களை கவனக்குறைவாக நடத்துதல், தேவையில்லாமல் கடிந்துகொள்தல், சித்திரவதை செய்தல், கொடூரமாக நடத்துதல் , பாலியல் துஷ்பிரயோகம் செய்தல், ஆயுதங்களாலோ அல்லது உடற்பாகங்களினாலோ தாக்குதல், அவர்கள் சொல்வதை செவிமடுக்காமை, அத்தியாவசியமில்லாத உடற்தொடுகை, கல்விக்கு ஆதரவு வழங்காமை – பிச்சை எடுக்கும் படி பணித்தல், ஆபாச படங்களை காட்டுதல், பார்க்க தூண்டுதல் , அடிமையாக நடத்தல், கடத்திச் செல்லுதல், சிறுவர் தொழிலாளியாக்குதல், அவர்கள் உணர்வுகளை மதியாமை என அனைத்தும் உள்ளடங்குகின்றன.

சமூகத்தில் ஒரு நல்ல பிரஜை உருவாக்க வேண்டுமாக இருந்தால் சிறுவர்களை அரவணைத்து – அன்புகாட்டி – அவர்களின் உணர்வுகளை மதித்து – நன்னடைதையுள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் கடமை பெற்றோருக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்கும் உள்ளது.

இவற்றில் ஏதேனும் ஒருவகையில் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு அவர்கள் தமது எதிர்காலங்களை சிதைத்துக்கொள்ள முன்னர் அவர்களை பாதுகாப்பது அவசியம். இது சமூகத்தின் கடப்பாடும் கூட. இதற்கென அனைத்து நாடுகளிலும் அரச – அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கையை பொறுத்த வரையில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் விவகார அமைச்சு முன்னைய காலங்களில் ஒன்றாக பேணப்பட்டு வந்த போதும் தற்போது இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுக்கும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இலங்கையில் மேற்கொள்ளப்படும் சிறுவர் பாதுகாப்பு நடவடிக்கைகள்

பெண்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பு நலன்புரி தொடர்பில் இலங்கை அதிகம் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்று பார்க்குமிடத்து கடந்த காலங்களில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார அமைச்சினூடாக பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. எனினும் தற்போது அவ்வமைச்சு சிறுவர் அபிவிருத்தி அமைச்சு – பெண்கள் விவகார அமைச்சு என தனித்தனியாக பிரித்து கவனம் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய – சிறுவர் விவகார அமைச்சின் கீழ் ரோஷி சேனநாயக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அமைப்புடன் (NATIONAL CHILD PROTECTION AUTHORITY) ஒன்றிணைந்து அனைத்து மாகாண மட்டங்களிலும் மாவட்ட மட்டங்களிலும் பலவிதமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பகின்றன. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1998ஆம் ஆண்டில் 50 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உருவாக்கப்பட்டது.

இது, சிறுவருடைய நலன்கள் தொடர்பில் செயற்படும் பிரதான நிறுவனங்களில் ஒன்று. இச்சபையின் பிரதான கடமைகளாக பிள்ளைகள் பாதுகாப்பு மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பாக அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்குதல், சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் வகையில் அதுபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல், பொருத்தமான அமைச்சுகளுடன் சேர்ந்து சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விடயங்களில் ஈடுபடுதல், தேசியக் கொள்கையை அமுல்படுத்துவதற்கான சட்ட, நிர்வாக நடவடிக்கைகளைச் சிபாரிசு செய்தல், ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல் என்பனவற்றை பிரதான கடமைகளாகக் குறிப்பிடலாம்.

சிறுவர் துஷ்பிரயோகங்களை எப்படி முறைப்பாடு செய்யலாம்

மேலும் சிறுவர் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ளவும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவும் 1929 என்ற இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொள்ள1929 முடியும். அத்துடன் ஒவ்வொரு பிரதேசங்களில் இடம்பெறும் குற்றங்கள் துஷ்பிரயோகங்களை அறிவிப்பதற்கு 1929 என்ற தொலைபேசி இலக்கம், இ-மெயில், பக்‌ஸ் (தொலைநகல்) , மற்றும் நேரடி முறைப்பாடு என்பன ஏற்றுக்கொள்ளப்படும்.

பிரதேசங்களில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களை எழுத்து வடிவில் எழுதி தேசிய பாதுகாப்பு அதிகாரசபைக்கு அனுப்ப வேண்டும். அதன் பின்னர் அதனை கருத்தில் கொள்ளும் சபை அதிகாரிகள் வந்திருக்கும் பிரச்சினை எவ்வகையானது என இனங்கண்டு தமது துஷ்பிரயோக வகையினுள் எது என கருதி கொண்டு உரிய மேலதிகரிகளுக்கு அனுப்பி வைப்பர். அதனைத் தொடர்ந்து மேலதிகரிகளின் வேண்டுதலுக்கு ஏற்ப அலுவலர்கள் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

இதற்கென ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் இருவர் வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பர். இதன்மூலம் மாவட்டங்களில் இடம்பெறும் சம்பவங்களை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட முடியும். தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும்.

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம்

ஆண்டுதோறும் எத்தனை சிறுவர்கள் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என அதிகார சபை தரவுகளை சேகரித்து வருகின்றது. ஆய்வுகளின் அடிப்படையில் நோக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் இடம்பெறும் துஷ்பிரயோகங்களின் அளவு அதிகரிக்கின்றன.

இலங்கையில் சிறுவர் திருமணங்கள் (Child Marriage) , குழந்தை தாய்மார்கள், என்பன சமூகங்ளுக்கிடையில் அதிகமாக காணப்படினும் வெளிப்படையாக வெளியுலகுக்கு தெரிவதில்லை. அந்த விடயம் சம்பந்தப்பட்டவர்களால் மறைக்கப்பட்டு விடுகிறது.

சிறுவர் திருமணங்கள் (Child Marriage)

சிறுவர் (Child) என்பதற்குரிய வரைவிலக்கணம் ‘18 வயதுக்குக் குறைந்த ஆண் / பெண்’ என்பதாகும். இது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வரைவிலக்கணமாகும். சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விளக்கமும் (1989) இவ் வரைவிலக்கணத்தையே வழங்குகின்றது. அத்துடன் இலங்கையில் திருமணத்துக்கான வயதெல்லை 18 என்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 18 வயதுக்குக் குறைந்த ஆண், பெண் சம்பிரதாயபூர்வமாக திருமணம் செய்யவோ அல்லது பதிவு திருமணம் செய்யவோ முடியாது. சட்டரீதியாக அது தவறு. ஆனாலும் இன்றும் எமது சமூகத்தில் பல்வேறு இடங்களில் சிறுவர் திருமணங்கள் நடைபெறு கொண்டுதான் இருக்கின்றன. ஆயினும் சம்பந்தப்படும் சிறுவர்களோ அல்லது பெற்றோர்களோ அதனை வெளியிடாமல் மறைப்பதனாலும், சட்டரீதியான ஆவனங்களில் வயதை அதிகமாக்கி பதிவதும் இத்தவறுகள் வெளியே தெரியாமல் போவதற்கான பிரதான காரணமாகும்.

பெற்றோருடைய பொருளாதாரப் பிரச்சினை, பரம்பரை ரீதியான மூட நம்பிக்கைகள், கல்வியறிவின்மை, சிறு வயதில் பாலியல் உறவுகளில் விரும்பியோ விரும்பாமலோ ஈடுபடல், பெற்றோர் பிள்ளைகளைக் கைவிடுதல், சட்டம் பற்றிய போதிய அறிவின்மை போன்றன சிறுவர் திருமணங்கள் நடைபெற ஏதுவாக அமைகின்றன.

பொருளாதாரப் பிரச்சினையை இதில் பிரதான இடம் பெறுகிறது. உதாரணமாக ஒரு குடும்பத்தில் அதிக எண்ணிக்கையான பிள்ளைகள் இருக்கும் அவர்களை சுமையாகக் கருதும் பெற்றோர் 18 வயது பூர்த்திடைய முன்னரே திருமணம் செய்து வைக்க முயல்கின்றனர். மேலும் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக 18 வயதுக்குக் குறைந்த பிள்ளைகள் வீட்டு வேலைகளுக்காக செல்கின்ற இடங்களில் பாலியல் சுரண்டல்களுக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்ற தாய்மாரின் பல குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் 18 வயதாவதற்கு முன்பே திருமண பந்தத்தில் இணைவதை காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறான குடும்பங்களில் பெண் பிள்ளைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதும் அதிகம். இதேவேளை – சில பெரியோர்கள் தமது மூட நம்பிக்கையின் பிரகாரம், பிள்ளை பருவ வயதை அடைந்தவுடனேயே திருமணம் செய்து வைப்பது எமது குடும்ப வழமை என்ற அடிப்படையில் நடைபெறுகிறது.

மேலும் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக பாடசாலை செல்ல வசதியற்ற பிள்ளைகள், வேலையும் இல்லாத சமயம் தமது பாதுகாப்பும் அரவணைப்பும் பெறும் பொருட்டு தாம் விரும்பிய ஒருவருடன் வீட்டை விட்டு செல்கின்றனர். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் விரும்பியோ- விரும்பாமலோ – தெரிந்தோ – தெரியாமலோ பாலியல் உறவில் ஈடுபடுவது கற்பழிப்பாகவே கருதப்படுகிறது. எனவே சிறுவர் திருமணங்களும் அந்த வகையைச் சார்ந்ததே என்பது மறுக்க முடியாது. பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்ட சிறுவர்களை- குறிப்பாக சிறுமிகளை பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்து பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை விடவும் சம்பந்தப்பட்ட நபருக்கே திருமணம் செய்து வைப்பது நல்லது என நினைக்கும் பெற்றோரும் உள்ளனர்.

மேலும் பெற்றோர் சில வேளைகளில் தமது பிள்ளைகளைக் கைவிட்டு செல்கின்ற போது பிள்ளையின் மனதில் தவறான எண்ணம் தோன்றுவதுடன், சில சமயங்களில் பிறரின் தூண்டுதலால் திருமணம் நடைபெறவும் கூடும். சிறுவர் திருமணங்களுக்குரிய காரணங்களாக மேலே குறிப்பிடப்படாதவைகளான யுத்தம், இயற்கை அழிவுகள் போன்ற விடயங்களும் காரணங்களாக அமைந்துள்ளன.

எமது நாட்டில் பல வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறுவர் திருமணங்கள் அதிகமாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குழந்தை தாய்மார்கள் (Child Mothers)

குழந்தை தாய்மார்கள் எனும் போது 16 வயதுக்கு குறைந்த பெண்பிள்ளைகள் தாம் விரும்பியோ விரும்பாமலோ பாலியல் ரீதியிலான உறவில் ஈடுபட்டு அதன் காரணமாக தமது கருவில் குழந்தையை சுமப்பவர்கள் குழந்தை தாய்மார்கள் என்ற வகைக்குள் அடங்குவர்.

இத்தகைய பிள்ளைகளின் ஆரோக்கியம் இரண்டு விடயங்களை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். 16 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளை பாலியல் உறவுக்கான தகுதியைக் கொண்டிருக்காது. எனவே, இங்கு பிள்ளைகளுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தோன்றலாம். அப்பிள்ளைக்கு கருவை சுமந்துகுழந்தை பெற்றெடுக்கும் சக்தி உடலில் உள்ளதா? என்பனவாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தாய்க்கு உயிராபத்தும் ஏற்படக்கூடும். இள வயதில் பிரசவிக்கும் ஒரு சிறுமி அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியேற்படும். சிலவேளைகளில் – அவ்வாறு பிறக்கும் குழந்தைகளை பராமரிக்க முடியாமல் ​தெருவோரங்களில் வீசிவிட்டு செல்லும் இளந்தாய்மாரும் உண்டு. கொலை செய்யும் சந்தர்ப்பங்களும் இல்லாமலில்லை. தாய் சேய் இறப்பு வீதங்களும் அதிகரிக்கும் அபாய நிலை காணப்படுகிறது.

கல்வி, சுகாதாரம், ஆரோக்கியம் என்பன பிள்ளையின் முக்கியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. சிறுவர் திருமணங்கள் பிள்ளையினது கல்வி, ஆரோக்கியம் என்பவற்றை வெகுவாகப் பாதிப்பதுடன், எதிர்காலத்தில் ஆரோக்கியமான பிரஜைகளாக மிளிர வேண்டிய பிள்ளை பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது.

கட்டாயக் கல்வி மறுக்கப்படல்

இலங்கையில் 14 வயது வரை சிறுவர்களுக்கான அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டும் என்று சட்டமுள்ளது. இதுபற்றி இலங்கை பிரஜைகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இளவயது திருமணங்கள் – குழந்தை தொழிலாளர்கள் என்பனவற்றினால் சிறுவர்களின் கல்வி உரிமை பாதிக்கப்படுகின்றன. சிறுவர்களின் கல்வி உரிமையை பாதிக்கச் செய்யும் இத்தகைய சமூக செயற்பாடுகளை நிறுத்தவேண்டும்.

அப்படி காணுமிடத்து அதற்கான நடவடிக்கையை எடுக்க பின்நிற்கக்கூடாது. 1929 என்ற இலக்கத்தினூடாக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபைக்கு முறைப்பாடு செய்யலாம். அப்படி முறைப்பாடு செய்யப்பட்டால் குறித்த பிரதேசசபை அலுவலர்கள் குடும்பங்களுடன் நேரடியாக தொடர்புகொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சிறுவர் தொழிலாளர்கள்

14 வயதுக்கு குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாகும். சிறுவர்களை வீடுகள் – கடைகள் – நிறுவனங்கள் – தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களுக்கும் பொருத்தமாகும். ஆனால் சில பிரதேசங்களில் பரம்பரை பரம்பரையாக ஒரே தொழிலை செய்யும் குடும்பங்களும் உண்டு. குடும்பத் தொழிலை செய்யும் குடும்பங்களும் உண்டு. குறிப்பாக – கால்நடை வளர்ப்பு, கைத்தொழில், விவசாயம், வியாபாரம் போன்ற தொழில்களை செய்யும் குடும்பங்களிலுள்ள சிறுவர்கள் தொழிலுக்கு உதவி செய்வர். பாடசாலை சென்று வந்த பின்னர் குடும்பத்தினருக்கு உதவுவது குற்றமாக கருதப்படாது. ஆனாலும் அப்பிள்ளை கல்வியை தொடருவதற்கான வசதிகளை செய்து கொடுப்பது அவசியம்.

இவை எவ்வாறு இருப்பினும் சிறுவர்களை அச்சுறுத்தி பணம் சம்பாதிக்கும் ஒரு கூட்டமும் எமது சமூகத்தில் உள்ளது. உதாரணமாக கூறுவதென்றால் சிறுவர்களை அச்சுறுத்தி ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்து இணையதளத்தில் பரவ விடுதல் போன்ற செயற்பாடுகள் அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கச் செய்கிறது. இன்று தொழில்நுட்ப அபிவிருத்தியின் காரணமாக கையடக்க தொலைபேசி, புகைப்படக் கருவிகள் என்பவற்றை சந்தையில் இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது.

பலவிதமான நவீன அபிவிருத்தி நுட்பங்களுடன் தயார் செய்யப்பட்ட இக்கருவிகளை பொது இடங்களில் அதாவது வீதிகள், ரயில்- பஸ் ஆகிய பொதுப் போக்குவரத்துக்களில் பயணிக்கும் போது சிறுவர்களை மறைமுகமாக படமெடுத்து- அப்படங்களை வைத்து மிரட்டி தமது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறுவது பற்றி அறிந்தால் உடனடியாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையில் முறைப்பாடு செய்வது ஒவ்வொருவரதும் கடமை. வீதிகளிலே பிச்சையெடுக்கும் சிறுவர்களை எமது அன்றாட வாழ்க்கையில் காண்கிறோம். சில வேளைகளில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களிலுள்ள சிறுவர்கள்- வீதியில் கைவிடப்பட்ட சிறுவர்கள்- வீதிகளில் வாழும் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் போன்றோரை பிச்சையெடுக்கும் தொழிலில் வாடகைக்கு ஈடுபடுத்துவதை வியாபாரமாக செய்யபவர்களும் உள்ளனர். இச்சிறுவர்கள் போதைவஸ்து விற்பனை- விபசாரம் போன்ற தொழில்களிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

சிறுவர்கள் என்பவர்கள் எமக்கு கிடைத்த விலை மதிப்பற்ற செல்வம். அவர்களை சிறந்த வகையில் வழிநடத்தி – கற்பித்து சமூகத்துக்கு சிறந்த சேவையாற்றுபவர்களாகவும் – அபிவிருத்திக்கு பங்களிப்பவர்களாக மாற்ற வேண்டுமே தவிர – அவர்களை சமூக விரோத செயல்களில் ஈடுபட தூண்டக்கூடாது.

எனவே பெற்றோர்களே நீங்கள் பெற்றெடுக்கும் பிள்ளைகளை சரியாக வழிநடத்துவது உங்களின் கடமை!

பெற்றோரை இழந்து நிற்கும் சிறுவர்களை காத்து வளர்ப்பது சமூகத்தில் வாழும் எனதும் உங்களதும் கடமை என்பதை கருத்திற்கொண்டு – சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.

நன்றி- ஆர்த்தி பாக்கியநாதன் & பூங்குழலி பாலகோபாலன்

Exit mobile version