in

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் இப்போது எங்கே?

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீர்கொழும்பு, பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கொவிட் தடுப்பு விதிகளுக்கு அமைய கைதி ஒருவரைச் சிறையில் அடைப்பதற்கு முன்னர் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

அதையடுத்தே அவர் இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்தில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்தில் ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளில் பெரும்பாலானோர் மோசடியாளர்கள் என்று குறிப்பிட்டிருந்தார் என்று கூறப்படுகின்றது.

அதையடுத்து மாகல்கந்த சுகந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப் படை அதிகாரி சுனில் பெரேரோ ஆகியோரால் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த விசாரணைகளுக்கு அமைய சட்ட மா அதிபரால் பிரதிவாதியான ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்தக் கருத்தின் மூலம் ரஞ்சன் ராமநாயக்க, நாட்டின் நீதிமன்றக் கட்டமைப்பு மீது மக்கள் வைத்திருந்த நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மனுதாரர்கள் முன்வைத்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முள்ளியவளையில் மீட்கப்பட்ட சடலம்!! – மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!!

வெள்ளக்காடாகியுள்ள வடக்கு!! – தொடரவுள்ளது கன மழை!