செய்திகள்

சீன விஷேட பிரதிநிதி பிரதமர் மஹிந்தவுடன் சந்திப்பு

தூதுவர் வு ஜியாங்காவோ பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார். சீன- இலங்கை நட்புறவு பாதிக்கப்படாத வகையில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாகச் செய்யப்பட்ட ஒப்பந்தம் குறித்து மீளாய்வு செய்ய பிரதமர் மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக சீனத் தூதரகம் கூறுகின்றது

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான நிதியுதவிகள், தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் விசேட பிரதிநிதி வு ஜியாங்காவோ மகிந்த ராஜபக்சவுடன் பேசியுள்ளார். சந்திப்பில் கொழும்பில் உள்ள சீனத் தூதுவர் செங் எக்சியுஒன் (Cheng Xueyuan) உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கொழும்புக்கு வருகை தந்த சீனப் பிரதிநிதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவைச் சந்திக்க முன்னர் பிரதமர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தம் குறித்துப் பேசியமை தொடர்பாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச சென்றவாரம் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இந்த நிலையிலேதான் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவின் தனியார் நிறுவனத்துக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கியிருந்த ஒப்பந்தத்தை, கோத்தபாய ராஜபக்ச ரத்துச் செய்யத் தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன

இந்த நிலையில் கொழும்புக்கு வந்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி அம்பாந்தோட்டைத் துறைமுக ஒப்பந்தத்தை மீள் ஆய்வு செய்வது குறித்துப் பேசியுள்ளார். மகிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்திருந்ததாகச் சீனத் தூதுரகம் கூறியபோதும் இதுவரை இலங்கை அரசாங்கம் அது தொடர்பாகக் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்குக் கொடுப்பதற்காக மைத்திரி- ரணில் அரசாங்கம் செய்த ஒப்பந்தத்தை பதவிக்கு வந்ததும் ரத்துச் செய்வேன் என்று கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்களின்போது கூறியிருந்தார்.

சென்ற வாரம் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்குச் சென்றிருந்த கோத்தபாய ராஜபக்ச பொருளாதார ரீதியான பல திட்டங்களுக்கு இணக்கம் தெரிவித்திருந்தார். சுமார் நானூற்றி ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக இந்தியாவும் உறுதியளித்துள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் சீனாவின் விசேட பிரதிநிதி கொழும்புக்கு வந்துள்ளார். எவ்வாறாயினும் இந்தோ- பசுபிக் பிராந்திய அரசியல் போட்டிக்குள் வேறொருவிதமாக இலங்கையின் புதிய அரசாங்கம் சிக்குப்படப் போவதாகவே அவதானிகள் கூறுகின்றனர். இந்தியாவையும் சீனாவையும் இலங்கை கையாளப்போகும் புதிய உத்தி, இலங்கையில் உள்ளக முரண்பாடுகளையே மேலும் தோற்றுவிக்கலாமென அவதானிகள் கருதுகின்றனர்.

Related posts

தமிழ் தொழிலாளர்களை காவு கொள்ளும் மது!

Tharani

செயன்முறைப் பயிற்சிப் பட்டறை ஆரம்பித்து வைப்பு

G. Pragas

“கந்தகட்டிய காமண்டி” காமன் கூத்து ஆவணப்படம் திரையிடல்

G. Pragas

Leave a Comment