சினிமாசெய்திகள்பிரதான செய்தி

சூழ்ச்சி, வஞ்சம், பகை….. பீறிடும் ‘பொன்னியின் செல்வன்’ ட்ரெய்லர்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியாகவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது.

சாகாவரம் பெற்ற கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் நாவலே ‘பொன்னியின் செல்வன்’ படமாக உருவாகியுள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் எதிர்வரும் 30 ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயசித்ரா, பிரகாஷ்ராஜ், சோபிதா துலிபாலா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி பெரு வரவேற்பை பெற்றது.

தற்போது படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

3.23 நிமிடத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லருக்கு நடிகர் கமல்ஹாசன் முன்னுரை வழங்கி குரல் கொடுத்துள்ளார்.

‛‛‘‘ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ நாடு தன் பொற்காலத்தை அடைவதற்கு முன் வானில் ஒரு பெரும் வால் விண்மீன் தோன்றியது…’’ என்று தொடங்கும் கமலின் குரல் கணீர் என்று ஒலிக்கிறது. ‛‛

ஆட்சி அதிகாரத்தை பிடிக்க நடக்கும் போட்டி, பகை, வஞ்சம், சூழ்ச்சி என கதையோட்டம் இருக்கும்படியாக ட்ரெய்லர் அமைந்துள்ளது.

பிரமாண்ட அரண்மனைகள், போர்க்கள காட்சிகள், கடற்படை சண்டைக் காட்சிகள், கச்சிதமான கதாபாத்திரம், பிரமாண்ட உணர்வை எமக்குள் கடத்தும் பின்னணி இசை என பிரமிக்க வைக்கிறது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,214