சிறப்புக் கட்டுரை செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா?

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மணுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கட்சி தாவல்களும், ஆதரவு தெரிவிக்கும் படலங்களும் நாடளாவிய ரீதியில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு மேலதிகமாக சில வேட்பாளர்களை ஆரம்பத்திலேயே முடக்க பல வழிகளில் சட்ட வல்லுனர்களின் உதவியுடன் நீதிமன்றத்தை நாடிக் கொண்டிருக்கும் விசித்திரங்களும் இந்த முறை தேர்தலில் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிலைமைகளையும் காணக் கிடைக்கின்றது. கோட்டாபாய ராஜபக்ச, அனுரகுமார திசாநாயக்க, சஜித் பிரேமதாச உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகள் களம் காணும் இந்தத் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதி மஹேஸ் சேனாநாயக்க மற்றும் சில பிரபல முஸ்லிம் அரசியல்வாதிகளும் வேட்பாளர்களாக களம் காணுகின்றனர். இவற்றின் அடிப்படையில் நோக்கும் போது இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்று முதல் சுற்றிலேயே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு அல்லது இல்லையென்றும் கூறலாம். எனவே இந்த முறை தேர்தலில் இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்வதில் செல்வாக்கு செலுத்தும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கணிப்பு. எது எவ்வாறாயினும் தேசத்தில் எத்தனை சதவீதமான மக்கள் இந்த முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்புத் தெரிவுகளை சரியாக பயன்படுத்த போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

தேசிய ரீதியில் அரசியல் நிலைமைகள் இங்ஙனம் சூடுப்பிடித்திருக்க மலையகத்திலும் இதன் தாக்கத்தை காணமுடிகின்றது. தேசத்தின் ஏனைய பிராந்தியங்களைப் போன்றே மலையகத்திலும் வாக்குறுதி வலை வீசி வாக்கு வேட்டை நடத்தும் போக்கு மிக நீண்ட காலமாக தொடர்ந்து வருகின்றது. பல ஏமாற்றங்கள், பல போராட்டங்கள், பல்வேறுப்பட்ட எழுச்சி பேரணிகள் என மலையகம் கடந்த காலங்களில் கண்டு வந்தாலும் தேர்தல் என்று வந்தவுடன் அத்தனையும் மறந்து வீட்டு பழைய புராணம் பாடித்திரியும் தங்கள் தலைமைகளுக்கு வாக்கு விடயத்தில் விசுவாசத்தைக் காட்ட மறப்பது இல்லை.

கொங்ரீட் பாதை, கோவிலுக்கு ஒலி பெருக்கி, வீட்டுத்திட்டங்கள் என அரசியல் மேடைகளில் தங்கள் சாதனைகளை வெளிக்காட்டிக் கொண்டிருந்த மலையக தலைமைகளுக்கு சமீபத்தில் பிடித்திருக்கும் ஒரு விசித்திர நோய்தான் தங்களின் எதிர் கட்சியின் செயற்பாடுகளோடு தங்களின் செயற்பாடுகளை ஒப்பிட்டுக் காட்டிக் கொண்டு அவர்களைவிட நாங்கள் சிறந்தவர்கள் என ஒப்பீட்டு அரசியலை மேடைக்கு மேடையும் சமூக வலைதளங்களிலும் மேற்கொண்டு வருகின்றமையாகும். இதிலும் சில அரசியல்வாதிகள் முகநூலில் அறிக்கை விடுவதையும், யாரும் அறிக்கை விடின் அதற்கு உடனடியாக மறுப்பறிக்கை தெரிவிப்பதையுமே முழு நேர தொழிலாக கொண்டு செயற்படுகின்றனர். தள்ளி நின்று பார்க்கும் போது தான் தெரியும் எத்ததை கோமாளித்தனமான அரசியலை இவர்கள் செய்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது.

மக்கள் ஒரு அரசியல் பிரதிநிதியை பாராளுமன்றத்திற்கும், மாகாண சபைக்கும் அனுப்புவது அப்பிரதிநிதிகள் தமது பொருளாதார வளத்தை அதிகரித்து கொள்வதற்காக அல்ல மாறாக மக்கள் சேவையில் ஈடுபடுவதற்காகவே. ஆனால் மேடைக்கு மேடை தங்களது சாதனைகள் என மார்தட்டிக் கொள்ளும் கொங்ரீட் பாதை, கோவிலுக்கு ஒலி பெருக்கி, வீட்டுத்திட்டங்கள் என்பனவெல்லாம் உண்மையில் ஒரு மக்கள் பிரதிநிதி செய்ய வேண்டிய அடிப்படை விடயங்கள். இதைக் கூட செய்ய முடியாதெனின் பிறகு எதற்கு இவர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். ஆக, இந்த விடயங்களை தமது சாதனைகள் என பட்டியலிட்டுக் காட்டும் அரசியல் வியாபாரிகளுக்கு சமூகத்தை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தி சென்றிட, சமூக நகர்விற்கு மாற்றத்தை ஏற்பட, மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றம் ஏற்பட ஒரு அரசியல்வாதியாக, ஒரு மக்கள் பிரதிநிதியாக என்ன செய்ய வேண்டும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த காலங்களில் மலையகத்தில் தேர்தல்கள் நெருங்கி வரும் காலக்கட்டத்தில் வாயில் வந்தது எல்லாம் வாக்குறுதி என தெளித்து கொண்டிருந்த சமயத்தில் தேசிய தேயிலை உற்பத்தி, உலக சந்தை விலை நிலவரங்கள், என எதை பற்றியும் யோசிக்காது மக்களுக்கு அள்ளி வீசப்பட்ட ஒரு வாக்குறுதி தான் இந்த 1000 ரூபா சம்பள உயர்வு என்ற வாக்குறுதி. 1000 ரூபாய் சம்பளம் என்பது சாத்தியப்படும், சாத்தியப்படாது என்பதைத் தாண்டி மக்கள் மத்தியில் 1000 ரூபாய் சம்பளம் என்பது ஆழமாய் பதிந்து விட்டது. இந்த 1000 ரூபாய் எனும் ஒரு அஸ்திரத்தை கொண்டு பத்தாயிரம் அரசியல் நாடகங்களை மலையகத்தின் இரண்டு பெரிய கட்சிகளும் மாற்றி மாற்றி அரங்கேற்றி விட்டன. மலையக கட்சிகள் மாத்திரமல்ல நான் பிரதமரானால் 1000 ரூபாய் சம்பளம் நிச்சயம் பெற்று தருவேன் என தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் கூட தலவாக்கலை நகரில் உரக்கச் சொல்லி மக்கள் மத்தியில் இந்த 1000 ரூபாய் கோரிக்கையை மேலும் ஆழமாக விதைத்திருந்தமையை யாரும் மறுக்க முடியாது.

எது எவ்வாறாயினும் தேர்தலின் பின்னர் இந்த கோரிக்கைகளை சற்றும் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை. என்ன செய்தாலும் இவர்களுக்கு நிபந்தனை இன்றி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் கூட எதுவும் திடமான முடிவுகளை எடுக்கவில்லை. மாறாக தங்கள் பங்கிற்கு 50 ரூபாய் என்ற புதிய வாக்குறுதி ஒன்றை வழங்கியிருந்தார்கள், இந்த 50 ரூபாய் அதிகரிப்பை பெற்றுத்தர முடியாவிடின் அமைச்சு பதவியை துறப்பேன், அரசாங்கத்தில் இருந்து விலகுவேன் என மேடையில் முழங்கியவர்கள் இந்த தேர்தலில் எந்த முகத்தை வைத்துக் கொண்டு புதிய வாக்குறுதிகளை அள்ளி வீச இருக்கின்றார்கள் என தெரியவில்லை.

“அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் எஞ்ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை” என்கின்றார் வள்ளுவர். அறநெறியினை நன்கு உணர்ந்து, சொற்திறன் மற்றும் செயற்திறன் கொண்டோரே அரசுக்கு துணையாக அமைய முடியும் என்கிறது மேற்சொன்ன குறள். ஆனால் எமக்கு வாய்க்கப் பெற்றோரோ வெறும் சொற்திறன் கொண்டோராகவும் அதன் வழி மக்களை நிதமும் ஏமாற்றி அரசியல் வியாபாரம் புரிவோராகவுமே இருக்கின்றார்கள். உண்மையில் அவர்களை சொல்லி குற்றமில்லை, அத்தனை பொறுப்பும் அவர்களை மீண்டும் மீண்டும் தெரிவு செய்துக் கொண்டிருக்கும் எம்மையே சாறும். ஒரு தேர்தலில் கொடுக்கப்படும் வாக்குறுதி அடுத்த தேர்தல் வரையில் நிறைவேற்றப்படுவதில்லை ஆனாலும் நாம் தொடர்ந்தும் அவர்களுக்கே வாக்களித்துக் கொண்டிருப்போம். ஒரு அரசியல் கட்சியை தெரிவு செய்துக் கொண்டு அந்தக் கட்சி தத்தமது பரம்பரை சொத்துப் போல எண்ணிக்கொண்டு காலம் காலமாய் அந்தக் கட்சிக்கே வாக்களிக்கும் மனப்பாங்கை நாம் வளர்த்துக் கொண்டு விட்டோம் அல்லது எமக்குள் வளர்க்கப்பட்டு விட்டது எனலாம். மதம் மாறுவதற்கு கூட அத்தனை யோசிக்காத சனம் கட்சி மாறி வாக்களிப்பதை பெறும் பாவமாக இன்னும் எண்ணிக் கொண்டிருப்பது வியப்பானதே. எங்களுடைய அரசியல் கலாசாரம் அப்படியாக இருக்கின்றது.

மலையக மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினையாக இருக்கட்டும், சமூக நகர்வு தொடர்பான ஏற்பாடுகளாக இருக்கட்டும், சமூக கட்டமைப்பில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாக இருக்கட்டும் எதுவானாலும், சஜித் ஜனாதிபதியானாலோ, கோட்டாபாய ஜனாதிபதியானாலோ மாறப்போவதில்லை என்பது உங்களுக்கும் சரி எனக்கும் சரி தெளிவாக தெரிந்த ஒன்று. இதற்கு பிரதான காரணம் எத்தனை ஏமாற்றங்கள் என்றாலும் மக்கள் அடுத்த தேர்தலுக்குள் மறந்து விடுவார்கள் என்றும் எப்படி இடையில் கண்கட்டி வித்தைகளை காட்ட வேண்டும் என்பதையும் தேசிய அரசியல்வாதிகள் தொடக்கம் மலையக அரசியல்வாதிகள் வரையில் அனைவரும் நன்கு அறிந்தவர்களே. இன்னும் சொல்லப் போனால் அந்த கண்கட்டி வித்தையில் வித்துவான்கள் இவர்கள்.

இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசு என்ற நாமத்தில் ஒரு பெயரை இந்த தேசம் கொண்டிருந்தாலும் ஜனநாயகம் என்பது பெயரளவிலேயே இங்கு இருக்கின்றது. உண்மை ஜனநாயகம் என்பது மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இங்கே மக்களுக்கு பொறுப்புக் கூறும் ஒரு அரசியல் கலாச்சார முறையை எங்கு தேடிக் காண்பதென யாமறியோம். பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று தெளிவாக இல்லாத நிலையில் இந்த தேசத்தின் அரசியலமைப்பு ஜனநாயகம் என்பது வெறும் எழுத்துறு மட்டுமே. இங்கு பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்று இல்லை என்பதையும், ஜனநாயகம் என்பது தேர்தல் காலங்களில் மாத்திரமே செயற்படும் ஒரு காட்சிப் பொருள் என்பதையும் நன்கு அறிந்தவர்கள் தாம் எம்முடைய அரசியல்வாதிகள். இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசியல் பொறிமுறைக்குள் அரசியல்வாதியெனும் போர்வைக்குள் தமக்கு கிடைக்க வேண்டிய அத்தனை சொகுசு வரப்பிரசாதங்களையும் பெற்றுக் கொண்டு அவ்வப்போது கண்கட்டி வித்தைகளை காட்டிக் கொண்டு மக்களுக்கு நாமம் போட்டுக் கொண்டு தங்களுடைய அரசியல் வியாபாரத்தை சீறும் சிறப்புமாக நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள். உண்மையில் எமது தேசத்தில் ஜனநாயகம் என்பது தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே என்ற நிலைக்குள்ளேயே இன்னும் சிக்கிக் கொண்டிருக்கின்றது.

உண்மையில் இங்கு பிரச்சினைக்குரிய தரப்பினர் யார்?

‘தேர்தல் அறிவித்தவுடன் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் முன்னர், வேட்பாளர்கள் தங்கள் கொள்கைகளை விளக்குவதற்கு முன்னர் இவருக்குத் தான் வாக்களிக்க போகின்றேன், இவர்தான் எனது தெரிவு என ஊர் முழுக்கு ஓலமிட்டுக் கொண்டு கொண்டாடி திரியும் மூளை சலவை செய்யப்பட்ட சில விநோதப் பிராணிகளும், அவர்களின் வழி வந்த எந்த ஒரு கேள்வியும் இன்றி ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் அரசியல் வியாபாரிகளுமே இந்த மோசமான அரசியல் கலாச்சார போக்கிற்கு காரணம்.’

இந்த அடிவருடிகள் தங்களின் சுய இலாபத்திற்காக எமது சமூகத்தை விற்கும் கைக்கூலிகளாகவே எனது பார்வையில் தென்படுகின்றனர்.

இந்த அரசியல் முறைமைக்குள் உள்வாங்கப்பட்டு விட்டோம், இந்த கோமாளிகளை நம்பி எங்களுடைய ஜனநாயக உரிமைகளையும், எங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பினையும் காலம் காலமாக அவர்களுக்கு தாரைவார்;த்து விட்டோம், சமூகத்தையும் அதன் வளர்ச்சியையும் தடுத்து விட்டோம், சரி இத்தோடு முடியட்டும் என்று பார்த்தால் இதனை அடுத்த தலைமைமுறைக்கும் கடத்திக் கொண்டு இருக்கின்றோம்.

இலங்கையில் ஏனைய சமூகங்களை விட பல வழிகளில் அரசியல் ரீதியாக சமூக கட்டமைப்பு ரீதியாக பல்வேறுப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மலையக சமூக இருந்துக் கொண்டிருக்கும் நிலையில் மேற் சொன்னவகையாக அரசியல் அடிவருடிகளின் காரணமாக இந்த சமூகம் இன்னும் அதே இடத்தில் நிற்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றது.

தேர்தல் அறிவிக்கும் முன்னர், கொள்கைகள் விளக்கப்படும் முன்னர் யாருக்கு வாக்களிக்க போகின்றேன் என முடிவு செய்துக் கொண்டு, கடந்த காலங்களில் எது செய்திருந்தாலும் செய்யாவிடினும் இவருக்குத் தான் வாக்களிக்க போகின்றேன் என்பதும், எனது தாத்தா இந்த கட்சிக்கு தான் வாக்களித்தார் ஆகவே வெட்டிப் போட்டாலும் இந்தக் கட்சிக்குத்தான் வாக்களிப்பேன் என்பதும் முட்டாள் தனமான முடிவுகளேயன்றி இதற்கு ஜனநாயகம் என்ற பெயரை மறந்தும் சூட்டி விட முடியாது.

சிந்தித்து அளிக்கப்படாத ஒவ்வொரு வாக்கும் தலையில் தாமே மண்ணை வாரி போட்டுக் கொள்வதற்கு சமன். சரியானவர்களை தெரிவு செய்யாது அதே கோமாளிகளை மீண்டும் மீண்டும் தெரிவு செய்துக் கொண்டு மீண்டும் அந்தக் கோமாளிகளை விமர்சித்துக் கொண்டிருப்பதில் எந்த பயணும் விளையப் போவதில்லை. உண்மையான ஜனநாயகம் மாற்றத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பலம் வாக்கு என்ற வடிவத்தில் உங்கள் கரங்களில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. உங்களை சுற்றி அரசியல் நாள் கூலிக்காக அரசியல் விபச்சாரம் செய்துக் கொண்டிருக்கும் பிராணிகளை புறக்கணித்து விட்டு யாருக்கு வாக்களிக்க வேண்டும், எதற்கு வாக்களிக்க வேண்டும் என்ற சிந்தனையோடு வாக்களித்தால் மாத்திரமே இந்த பிரச்சினைகளுக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும். தேர்தலுக்கு தேர்தல் உங்கள் தெரிவினை மாற்றுங்கள், புதியவர்களை புகுத்துங்கள், புத்திஜீவிகளுக்கு வாய்ப்பளியுங்கள் மாற்றத்திற்கான விதை வாக்கு வடிவத்தில் உங்கள் கரங்களில் இருக்கின்றது, அந்த விதையிட்டு உரம் இடுவதும் இல்லை அந்த விதையை விஷமாக்குவதும் உங்கள் கரங்களிலேயே தங்கியுள்ளது. சிந்தியுங்கள், உங்கள் பெற்றோருக்கு, பிள்ளைகளுக்கு உங்கள் சுற்றத்தாருக்கு இதனை தெளிவுப்படுத்துங்கள். இங்கே சிந்தனை மாற்றம் ஏற்படும் வரையில் எதுவும் மாறிவிடப்போவதில்லை, ‘மாறிவிடப் போவதில்லை’ என சொல்வது உங்கள் வாழ்க்கை தரத்தையும் சேர்த்துதான்.

இந்த முறையாவது வாக்களிக்கும் முன்னர் ஒன்றுக்கு பத்து தடவை யோசித்துக் கொள்ளுங்கள் உங்கள் தெரிவு சரியானதா என்பதை!! உங்களை சுற்றியுள்ள அரசியல் பிழைப்பு நடத்தும் பிராணிகளின் நடவடிக்கைகளையும் பேச்சுக்களையும் கணக்கில் கொள்ளாதீர்கள்!! சரியோ பிழையோ உங்கள் தலையெழுத்தை நிர்ணயிக்க போகும் அந்த தலைவனை நீங்களே சிந்தித்து தெரிவு செய்யுங்கள். கடந்த காலத்தில் பெற்ற பாடங்களை மறந்த விடாதீர்கள்.

சட்டத்தரணி ஆறுமுகம் தனுஷன்

Related posts

சிவகார்த்திகேயனின் “டாக்டர்” பட பூஜை இன்று

Bavan

இலங்கை – ரஷ்ய கூட்டு மாநாடு

Tharani

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அறிக்கை தாக்கல் – செய்தி தாெகுப்பு

Tharani