ஏனையவைசெய்திகள்தடயத்தை தேடி!

தடயத்தை தேடி! கொலை எண்: 03 (அழகியும் மர்ம மனிதனும்)

கொலை எண்: 03

அழகியும் மர்ம மனிதனும்

1980 களின் முற்பகுதியில், டோரதி ஜேன் ஸ்காட் எனும் அழகிய பெண் ஒரு கம்பனியில் வேலை செய்து வந்தாள்.ஒரு விபத்தில் கணவனை இழந்திருந்த அவள் குறுநடை போடும் சிறு வயதுடைய குழந்தையின் தாய்.

சில நாட்களாகவே அவளுடைய பணி நேரத்தில் அவளை அச்சுறுத்தும் விதமான தொலைபேசி அழைப்புகளைப் பெறத் தொடங்கினாள். முதலில் அந்த அழைப்புகளை அவள் அவ்வளவாக பொருட்படுத்தவில்லை. ஆனால் ஒரு இரவு வேளை அந்தக் குரல் அவளைத் தொடர்பு கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்து பார்க்கச் சொன்னது. அங்கே வாடிய ஒரு ரோஜா அவளது கதவு வாசலில் கிடந்தது.

அவளிடம் தன் அன்பை வெளிப்படுத்துவதற்கும் உடல் ரீதியான தீங்கு விளைவிப்பதற்கும் ஒருவன் ஊசலாடிக் கொண்டிருக்கிறான் என்பது அன்றுதான் அவளுக்கு தெளிவாக விளங்கியது.அதனால் பெரிதும் பயமடைந்த டோரதி தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அந்தக் குரலைப் பற்றி சொல்லி வைத்திருந்தாள்.ஆனால் அவன் யார் என்று அவளால் அறிய முடியவில்லை.அந்த ஆசாமியைக் கண்டுபிடிக்க அவளுக்கு வாய்ப்பும் கிடைக்கவில்லை.

ஒருநாள் அவளது கம்பனியில் இரவு நேர பணிக்காக அவள் தனது குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு கிளம்பினாள் . கம்பனியில் அவள் தனது வழமையான வேலையை முடித்துக் கொண்டிருந்த போது அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவரது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கவனித்தாள்.அவளும் மற்றொரு சகாவும் சேர்ந்து தனது காரில் அந்த நபரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அவருக்கு மோசமான சிலந்திக்கடி இருப்பதாகவும் உடனடி சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதனால் டோரதியும் அவள் சகாவும் மருத்துவமனை மாடியில் காத்திருந்தனர்.அப்பொழுதுதான் அந்த விசித்திரமான காட்சியை டோரதி யன்னல் வழியாகப் பார்த்தாள்.

அது என்னவென்றால், தான் ஆசையாக வளர்த்து வரும் நாய் தனது காருக்கு அருகில் வாலை ஆட்டிக் கொண்டு நிற்பதை அவதானித்தாள். தனது சகாவிடம் அந்த ஊழியரைப் பார்த்துக்கொள்ளும் படி சொல்லிவிட்டு தான் மட்டும் கீழே இறங்கி வந்தாள்.

வெளியே சென்ற டோரதி நீண்ட நேரமாக உள்ளே வராததால் சந்தேகமடைந்த அவளது சகா வெளியில் வந்து பார்த்தார். அந்த நேரத்தில் டோரதியினுடைய கார் வேகமாக ஓடுவதை அவர் கண்டார், எனவே அவளுடைய மகனின் ஏதாவது அவசர தேவைக்காகத்தான் அவள் செல்கிறாள் என்று நினைத்து அவரும் அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.

டோரதி ஜேன் ஸ்கொட் (dorothy jane scott)

ஆனால் அன்றையநாள் தான் அவர் டோரதியை கடைசியாக பார்த்த நாள் .ஆம் அதற்குப்பிறகு டோரதி வீடு திரும்பவில்லை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவளது எரிந்த காருடன் அவளது எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த வழக்கில் மர்மத்தின் மற்றொரு உச்சமாக, அவளது எச்சங்களுக்கு அடுத்ததாக அவளது நாயின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இன்றுவரை யாரும் குற்றவாளிகளாகவோ அல்லது சந்தேகத்திற்கிடமாகவோ கைது செய்யப்படவில்லை, அந்த மர்மமான அழைப்பாளர் கண்டுபிடிக்கப்படவேயில்லை.

dorothy jane scott with her son

அப்படியாயின் இந்த மர்ம வழக்கில் இப்படித்தான் நடந்திருக்குமா?

  1. டோரதியை அடைய நினைத்த அந்த மர்ம ஆசாமி அன்றைய நாளை திட்டமிட்டிருக்கலாம்.அதனால் அன்றைய இரவுநேரம் அவளது வீட்டை அனுகியிருக்கலாம்.
  2. அன்று அவன் எதிர்பார்த்த மாதிரி அவள் உரிய நேரத்துக்கு வீடு வந்து சேராததால் அவன் என்ன செய்யலாம் என்று யோசித்திருக்கலாம்.
  3. உடனே திட்டமிட்டவனாய் அவள் வீட்டில் கட்டப்பட்டிருந்த நாயின் உதவியுடன் அவள் எங்கிருக்கிறாள் என்பதை அறிய முற்பட்டிருக்கலாம்.(அன்றைய காலத்தில் தொழில்நுட்பங்கள் அவ்வளவாக வளர்ச்சியடையவில்லை அதனால் நாயை துறுப்பாக பயன்படுத்தியிருக்கலாம்)
  4. நாயின் மோப்பசக்தியின் உதவியுடன் மருத்துவமனையைக் கண்டறிந்து, அதே நாயின் உதவியுடன் அவளை அவளின் காரருகே வரவழைத்திருக்கலாம்.
  5. நாயைக் கண்டவுடன் கீழிறங்கி வந்த டோரதி ,நாயை காருக்குள் பத்திரமாக இருத்த கார் கதவைத் திறந்திருக்கலாம். அதுவரை மறைந்திருந்த ஆசாமி இதனை சாதகமாக பயன்படுத்தி அவளை காருக்குள் தள்ளி (கட்டியோ அல்லது மயக்கமருந்தைப் பயன்படுத்தியோ) அவளை வலுக்கட்டாயமாக ஏற்றிக் கொண்டு காரை வேகமாக செலுத்தியிருக்கலாம்.இதற்குப் பிறகு என்ன நடந்திருக்கும் என்பது அனைவரும் ஊகிக்கக் கூடியதே.

இந்த கொலைச் சம்பவமானது dorothy jane scott என்ற பெண்ணுடைய உண்மைக் கொலைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களுக்கு வாசிக்கக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

– பவன் –

  • தடயத்தை தேடி! பகுதியின் முதல் இரண்டு மர்ம வழக்குகளையும் வாசிக்க விரும்பினால் கீழே உள்ள லிங்கை அழுத்தி வாசியுங்கள்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266