செய்திகள்வவுனியா

தனியார் மருத்துவமனையின் அலட்சியம் பறித்ததா உயிரை?

தனியார் மருத்துவமனையின் அலட்சியம் காரணமாக முதியவர் ஒருவர் வவுனியாவில் உயிரிழக்க நேரிட்டுள்ளது என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வவுனியாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. ஆயினும்அவர் குணமடைந்துவிடுவார் என தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது.

அதற்குமாறாக முதியவரின் உடல்நிலை மோசமாகிக் கொண்டே செல்வதை உணர்ந்த உறவினர்கள்,கொழும்பில் உள்ள இன்னொரு தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்ப்பதற்கு முயற்சி எடுத்தனர்.இதன்போது கொழும்பு தனியார் மருத்துவமனையில் இருந்து வவுனியாவுக்கு வந்த மருத்துவர்கள் குறித்த முதியவரைப் பரிசீலித்தனர். அதன் போது அவரது உடல்நிலை மோசமான கட்டத்தை எட்டியுள்ளதால், கொழும்புக்கு கொண்டு செல்லமுடியாதெனக் கூறினர்.

இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு நோயாளர் கட்டிலுடன் ஒட்சிசன் ஏற்றியநிலையில் அந்த முதியவர் வவவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டர். அங்கும் அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், அவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.

“குறித்த தனியார் மருத்துவமனையினர் பல இலட்சங்களை எம்மிடம் பெற்றபோதிலும் எமது உறவினரின் நோயைக் குணமாக்கும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பணத்திலேயே கருத்தாக இருந்துள்ளனர்.முன்னரே அவரை சரியான மருத்துவமனையில் சேர்த்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம். அவர்களின் அலட்சியத்தாலேயே இந்த மரணம் சம்பவித்தது” என்று முதியவரின் உறவுகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பில் குறித்த தனியார் மருத்துவமனைத் தரப்பினரின் கருத்தைப் பெறமுடியவில்லை.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,051