செய்திகள்

தமிழ் மக்களுடைய தெரிவு தமிழ் தேசியத்தை நோக்கியதாக அமைய வேண்டும்..!

தமிழ் மக்களுடைய தெரிவு தமிழ் தேசியத்தை நோக்கியதாக அமையட்டும் இலங்கைத் தேர்தலில் மக்களின் சனநாயக வாக்கு வலிமை என்பது இன்றியமையாதது. தமிழ் மக்கள் அனைவரும் தமது வாக்குகளைத் தவறாமல் எமக்கு நடப்பது இனவழிப்பு என்பதை சொல்லிலும் செயலிலும் வலியுறுத்தி, அதற்காக பரிகார நீதி வேண்டி உளசுத்தியுடன் தொடர்ச்சியாக அகத்திலும் சர்வதேச அரங்குகளிலும் குரல்கொடுத்து வருவோருக்கு செலுத்த வேண்டும் என கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) கேட்டுக் கொள்கின்றது.

இனம்சார் அடிப்படை கொள்கையில் உறுதியுடன் செயற்படுபவர்களுக்கு வாக்கை செலுத்துவதன் மூலம் நமது உரிமையை நிலை நாட்டுவதற்குரிய சந்தர்ப்பத்தை உருவாக்க முடியும். உங்கள் வாக்கை சரியானவர்களுக்கும் சரியான கட்சிக்கும் செலுத்துவதன் மூலமே சர்வதேசம் எமக்கான பரிகார நீதியை தர முயற்சிக்கும்.

தமிழ் மக்களின் 60 வருடகால தொடர்ச்சியான விடுதலைப் போராட்டம் சில அடிப்படைகளை வைத்து நகர்ந்திருக்கின்றது. தொடக்கத்தில் எமது உரிமைப் போராட்டம் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையிலும் அதைப் பெறுவதற்கான போராட்டத்தில் இனவழிப்புக்குள்ளாகிய தேசிய இனமாக அதற்குரிய பரிகார நீதியைக் கோரும் ஒரு இனமாகவும் போராடிக் கொண்டிருக்கின்றோம். இதற்காக தெற்கில் எழுந்த பலத்த சவால்களையும் நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு ஈழத்தமிழரின் தொன்மையின் அடிப்படையில் எமது பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி குரல்கொடுப்போரை மட்டுமே நாம் தெரிவு செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இந்த இரு அடிப்டைக் கோட்பாடுகளையும், சொல்லிலும் செயலிலும் வரித்துக் கொள்வது மட்டும் அல்ல அதை நடைமுறைப்படுத்தக் கூடிய அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளை இனம் கண்டு உங்கள் வாக்கை தவறாது செலுத்த வேண்டும்.

கனடாவில் உள்ள தேசிய அரசாங்கம் உட்பட எல்லா மட்ட கனடிய அரசாங்கங்களும் தமிழ்க் கனடிய மக்களின் குறைகளை செவிமடுத்து தமிழர்களுக்கு எதிராக இடம் பெற்ற இனவழிப்பை சட்டமாகவும் பேசு பொருளாகவும் வைத்திருக்கும் நிலையில், தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்துவோம் என்று உரிமை கோர முனைகின்ற தமிழ் ஒரு சில அமைப்புகளும் தமிழ் கட்சிகளும் தமிழின அழிப்பிற்குரிய பரிகார நீதியைக் கேட்கமறுப்பதென்பது அவர்களது விடுதலைப் போராட்டத்தின் புரிதலில் உள்ள வறுமையக் காட்டுகின்றது. இவர்களால் தான் கடந்த பத்து ஆண்டுகளில் எமது இனத்துக்குக் கிடைக்கவேண்டிய பரிகாரநீதி தடைப்பட்டதென்பதை நாங்கள் மறந்துவிட முடியாது. இவர்களை தமிழ் மக்கள் மட்டும் அல்ல கனடிய அரசாங்கம் கூட ஆதரிக்காது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 2009 இல் இடம்பெற்ற தமிழின அழிப்பின் பின்னான காலத்தில் தமிழ் மக்களுடைய உரிமைக்கான போராட்டத்திலிருந்து தொடர்ச்சியாக வழுவிக் கொண்டு வந்திருக்கின்றது. அது தன்னை அரசியல் ரீதியாக தக்கவைக்க மட்டும் முயற்சிகின்ற அமைப்பாக மாறி தமிழ் மக்களுக்குரிய உரிமைக்கான பிரதிநித்துவத்தை கொடுப்பதற்கு பின்நிற்கின்றது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுக்கான மாற்றத்தை தெரிவிக்க வேண்டிய சூழலுக்குள் இருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் தாம் ஒரு தேசிய இனம் அதனடிப்படையிலான ஒரு அரசியல் தீர்வும் இனஅழிப்பிற்கான ஒரு பரிகார நீதி என்பது சர்வதேச விசாரணை மூலமே நீதிகிடைக்கும் என்ற நிலைப்பாட்டை தொடர்ச்சியாக வெளியிட்டு அதற்கமைவாக தமிழர் தாயகத்திலும் சர்வதேச ரீதியிலும் செயற்பட்டுவருகின்ற தரப்புகளை இனம் கண்டு அவர்களுக்கான ஒரு ஆதரவைத் தமிழ் மக்கள் கொடுக்க வேண்டும் என அன்புரிமைமையுடன் வேண்டிக்கொள்கிறோம்.

இது புலம் பெயர்ந்த கனடியத் தமிழ் மக்களின் ஆதங்கமாகும் அதேவேளை பூகோள அரசியலை புரிந்து எமது தமிழ்த் தேச அங்கீகாரத்திற்காக சமரசமின்றி சமராடி வருகின்ற கட்சிக்கு வாக்களிப்பது சர்வதேச மயப்பட்டுள்ள எமது விடுதலைப் போராட்டத்தின் இலக்கினை எட்டுவதற்கு துணைபுரியும் என்பதையும் கவனத்திற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

உலக ஒழுங்கில் தொடர்ச்சியான மாற்றம் என்பது அத்தயாவசியமாகிறது. அதனை உணர்ந்து மாற்றத்தை கொடுக்கக் கூடிய, எமது உரிமைகளை நிலை நாட்டக்கூடிய சக்திகளுக்கான ஆதரவைக் கொடுத்து எமது இனத்தையும், அதன் பூர்வீக நிலத்தில் அதன் இருப்பையும் பாதுகாக்க வேண்டியது எமது அனைவரினதும் தலையாக கடமையாகும்.-கனடியத் தமிழர் தேசிய அவை குறிப்பிட்டுள்ளது.

Related posts

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி

Tharani

யாழ் பல்கலையில் பட்டமளிப்பு விழா!

கதிர்

கொக்குவில் விபத்தில் இருவர் படுகாயம்!

G. Pragas