கட்டுரைகள்சஞ்சீவி - IPaperசிறப்புக் கட்டுரைசெய்திகள்தடயத்தை தேடி!முல்லைத்தீவு

தாயோடு குழந்தையை விழுங்கிய கிணறு!

28.12.2020

இரவு 1 மணி.

மழைபெய்து ஓய்ந்திருந்தது. நன்கு உறங்கிக்கொண்டிருந்த சிறுமிக்கு திடீரென முழிப்பு வந்தது. 15 வயதிருக்கும். பெயர் திசாளினி.

“வள்…வள்..வள்”
மீண்டும் உறங்க நினைத்த திசாளியின் கவனத்தைக் கலைக்கிறது அவர்கள் வீட்டு நாய்.

எழுந்து பார்க்கின்றாள்.படுக்கைவிரிப்புக்கள் அப்படியே இருக்க, தன்னுடன் கூடவே உறங்கிக்கொண்டிருந்த அம்மாவையும், தங்கையையும் காணவில்லை. நாய்மீண்டும் குரைத்தது.. மனதில் அச்சம் குடிகொள்கின்றது.

” அம்மா ..” என அழைக்கிறாள் பதில் கிடைக்கவில்லை. படுக்கையில் இருந்து எழுந்து தேடிப்பார்த்தாள் .எங்கும் காணவில்லை. அச்சம் அதிகரித்தது.கும்மிருட்டு ஒருபுறம் நாயின் குரைப்பு மறுபுறம். அருகில் உள்ள அப்பம்மாவின் வீட்டுக்கு பயத்தோடு ஓடிப்போனாள்.

“அப்பம்மா..அப்பம்மா.. ”
அவள் குரல் கேட்டு தூக்கக் கலக்கத்தோடு வந்த அப்பம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
வழமைக்கு மாறாக அந்தநேரத்தில் பேர்த்தி வந்திருப்பது அவருக்கு அச்சஉணர்வினை ஏற்படுத்தியிருந்தது. “என்ன பிள்ளை நடந்திச்சு? இந்தநேரத்தில வந்திருக்கிறாய்? ”

” அம்மாவையும் தங்கச்சியையும் காணேல்ல” என்று படபடப்புடன் திசாளினி சொன்னாள்.
” இந்தநேரத்தில இதுகள் எங்கபோனதுகள்..”என்று புறுபுறுத்துக்கொண்டு திசாளினியின் வீட்டுக்கு சென்றார் அப்பம்மா.

“லலிதா…லலிதா” என்று அந்த இரவின் அமைதியைக் குலைக்கும் பலத்த குரலில் அப்பம்மா பலமுறை அழைத்தும் எந்தப் பதிலும் இல்லை.

வீடுமுழுவதும் தேடுகின்றார். இருவரையும் எங்கும் காணவில்லை. திடீர் என்று ஒரு நம்பிக்கை . வீட்டின் படலை திறக்பட்டிருந்தது.
“ஒருவேளை ,குழந்தைப்பிள்ளைக்கு வருத்தம் கிருத்தமோ?.. பக்கத்துல யாருட்டயும் காட்டக் கொண்டு போனாளோ?” என்று சந்தேகமடைந்த அவர் தொலைபேசியை எடுத்து வழமையாக லலிதா( திசாளியின் தாய்) சென்றுவரும் வீட்டுக்கு அழைப்பை எடுக்கிறார்.
நள்ளிரவுநேரம் என்பதால் அழைப்புக்கு பதில் இல்லை.நேரமோ1.30 மணியினை நெருங்கிகொண்டிருக்கின்றது. அப்பம்மாவுக்கு என்னசெய்வது என்று புரியவில்லை.நித்திரையில் இருந்த தனது கணவனையும்,லலிதாவின் 8 வயதான மகனையும் எழுப்புகின்றார்.

“இஞ்சாருங்கோ லலிதாவையும்,றிதுவையும்( லலிதாவின் கடைசிப்பிள்ளை) காணேல்ல. நான் இங்கால போய் ஒருக்காப் பாத்துப் போட்டுவாறன். திசா.. நீ தாத்தாவோட நில்லு”
என்று கூறிவிட்டு பேரனை அழைத்துக்கொண்டு அயல்வீட்டாரை எழுப்பி,
” லலிதாவும் பிள்ளையும் வந்தவையோ? ரெண்டுபேரையும் கனநேரமா வீட்டில காணேல்ல. எல்லா இடமும் தேடிப்பாத்திட்டம்” என்று தகவலைச் சொன்னார்.அவர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில் லலிதாவின் வீடு நோக்கி ஓடிச் சென்றார்கள். ஊர்முழுதும் தகவல் காட்டுத்தீயாகப் பரவுகின்றது.அனைவரும் ஒன்று கூடித்தேடத் தொடங்கினர்.
…………………….

காட்டிக்கொடுத்த கால் அடையாளம்
…………..

லலிதாவுக்குப் பூர்வீகம் முல்லைத்தீவு, ஒதியமலை. போர்க்காலத்தில் அவளுக்கும் ரமேஸுக்கும் அவசர அவசரமாக பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது. ரமேஸ் லலிதாவை விடவும் 6 வயது இளையவர். திருமணம் முடித்த பின்னர் தனது ரமேஸின் ஊரான வவுனியா, பறண்நட்டகல்லில் தனது மூன்று பிள்ளைகளுடனும் வசித்துவந்தார் லலிதா. ஒரு காணியில் இரண்டுவீடுகளில் லலிதாவின் குடும்பமும்,மற்றையவீட்டில் அவளது கணவனின் பெற்றோரும் வசிக்கின்றனர்.

லலிதாவின் வீடு கிராமத்தின் கடைக்கோடியில், வயல்வௌிகளை அண்டியதாக இருந்தது. அநேகமாக மாலை 6 மணிக்குப் பின்னர் அந்தவீ தியால் பொதுமக்கள் பயணிப்பது குறைவு.
லலிதாவின் வீடு அமைந்துள்ள வீதியில் வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் யாரோபயணித்தமைக்கான கால்தட அடையாளம் ஒன்று,லலிதாவைத் தேடிக்கொண்டிருந்தவர்களின் கண்களில் தென்பட்டது.சந்தேகம் மேலும் வலுக்கின்றது.
‘ஒருவேளை அது லலிதாவின் காலடித் தடமாக இருக்குமோ?’.
‘ மழை பெய்ஞ்சு ஓய்ஞ்சிருந்ததால, அந்தக் காலடித்தடத்தைப் பார்க்ககூடியமாரி இருந்திச்சு. அந்தப் பக்கமா சனங்கள் எல்லாம் போய்த் தேடினம். அப்பதான் அந்தப்பக்கமா ஒரு தூர்ந்துபோன வயல்கிணறு தெரிஞ்சுது. மழை காலமெண்டுறதால அந்தக் கிணறு முழுசா நிறைஞ்சு கிடந்துது.அந்தக்கிணத்துக்கு பக்கத்தி்ல இருந்த வேலியில துவாய் ஒண்டு தொங்கிக் கொண்டிருந்திச்சு,பக்கத்தில குடையும் இருந்திச்சு.அது லலிதாவின்ர தான் என்று உறுதியாகிச்சு. அந்த இடம் முழுக்கத் தேடினம் கூப்பிட்டும் பாத்தம்.ஒரு அசமாத்தமும் இல்லை. அதுக்குப்பிறகுதான் ஓமந்தைப் பொலிசுக்கு தகவலைச்சொன்னம்” என்கிறார் லலிதாவைத் தேடிய கிராமவாசிகளில் ஒருவர்.

இறைக்கப்பட்ட கிணற்று நீர்
……………

விடிகாலை 5.30 மணி.அப்போதும் கிராமமக்கள் அந்த இடத்தினைவிட்டு நகரவில்லை.ஓமந்தைப் பொலிஸாரும் வந்துவிட்டனர்.கிணற்றுப்பகுதியில் துவாயும்,குடையும் அவதானிக்கபட்டமையால் அனைவரது கவனமும் கிணற்றை மையப்படுத்தியே இருந்தது. கிராமமக்களின் உதவியுடன் கிணற்றுநீரை இறைப்பதற்கு ஆயத்தங்களைப் பொலிஸார் மேற்கொள்ளத் தொடங்கினர்.

தூர்ந்துபோயிருந்த கிணறு என்பதால் அதன் ஆழம் 10 அடிக்கு குறைவாகவே இருந்தது. எனினும் மழையினால் நிலமட்டத்தை மேவியபடி நீர் நிறைந்திருந்தது. மழையுடனான காலநிலை,மற்றும் வயல்பகுதியில் கிணறு அமைந்திருந்தமையால் நீர் ஊற்று அதிகமாகவே இருக்கும். எனவே அந்தக் கிணற்றுநீரை இறைப்பதென்பது அவ்வளவு இலகுவான காரியமில்லை . எனினும் அந்த முயற்றிக்கு செயல்வடிவம் கொடுத்தனர்.நான்கு நீர்ப்பம்பிகள் பொருத்தப்பட்டு கிணற்றுநீர் இறைக்கபட்டது.காலை 5.30மணிக்கு ஆரம்பிக்கபட்ட இறைப்புப்பணி 10 மணிவரை நீடித்தது.நீர் மட்டம்குறையக் குறைய மக்களின் மனங்களில் அச்சமும் கவலையும் பெரிதாகிக் கொண்டிருந்தன.

காலை 10.30 மணியாகியது.கிணற்றின் நீர்மட்டம் பாதியாக குறைந்திருந்தபோது, கிணற்றுக்குள் இறங்கித்தேடுதல் நடத்தத் தீர்மானித்து, கிராம இளைஞர்களும்,பொலிஸாரும் அந்த பணிகளில் இறங்கினர்.சற்றுநேரத்தில்…..

கடவுளே!! இது என்ன சோதனை.
குழந்தையை அரவணைத்தபடி நீருக்குள் மூழ்கியிருந்த லலிதாவின் சடலம் தென்பட்டது.

அவளைத்தூக்கியபோது மூன்றே வயதான குழந்தை தாயின் பற்றுதலில் இருந்து விலகி நீருக்குள் சென்றதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.சடலங்களைப் பார்வையிட்ட நீதவான் அவற்றை உடற்கூற்று ஆய்வுக்குட்படுத்துமாறு பொலிஸாருக்குப் ணித்திருந்தார். சடலங்கள்மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டன.
……………..

இரவு அம்மாதான் சமைச்சவா
………….

“அண்டைக்குப் பின்னேரம் அம்மாவும் நானும் தங்கச்சியும் தான் வீட்டில இருந்தனாங்கள்.அம்மா எங்களுக்கு ரொட்டியும் கிழங்குக்கறியும் சமைச்சுத் தந்தவா.அதைச் சாப்பிட்டுப்போட்டு இரவு 7 மணிக்கே படுத்திட்டம்.வழமையாவே ஒண்டாத்தான் படுப்பம்.அண்டைக்கு தம்பி அப்பம்மா வீட்ட போட்டான்.அப்ப நாங்க மூண்டு பேரும் தான் வீட்டில.எங்கட நாய் குரைக்கிற சத்தம் கேட்டுத்தான் எழும்பிப் பாத்தன் லைற்எல்லாம் போட்டிருந்திச்சு.. அம்மாவையும் தங்கச்சியையும் காணேல்ல “என்று லலிதாவின் மூத்தமகளான திசாளினி தாயோடு இருந்த கடைசி நிமிடங்களை நினைவு கூர்கிறார்.
……………

ஒருநாளும் போனதில்லை
………..

“அண்டைக்கு காலமை வீட்டிலதான் நிண்டனான். நான் எல்லா வேலைக்கும் போவன்.சிலநேரம் தங்கி நிண்டும் வேலைகள் செய்யவேண்டிவரும். அண்டைக்கு வயல் வேலைக்கு போட்டன். இரவும் தங்கி நிண்டு வேலை செய்ததால வீட்டில நிக்கேலை. எனக்கும் அவாக்கும் எந்தப் பிரச்சினையும் இருக்கேல்ல. ,அவா கொஞ்சம் யோசிச்சுக் கொண்டிருப்பா.கலியாணம் செஞ்சு 15 வருசமாப் போச்சு. ஒரு நாள் எண்டாலும் கோபிச்சுக்கொண்டு போனதில்ல. இப்பிடிநடக்கும் எண்டுஎதிர்பார்க்கேல்ல. சிலநேரம் அண்டைக்கு வீட்டில நான் நிண்டிருந்தாலும் அவாவைத் தடுத்திருக்க முடியுமோ தெரியேல்லை” என்று புலம்புகிறார் லலிதாவின் கணவரான ரமேஸ் .

மீட்கப்பட்ட கடிதம்

……….

லலிதா காணாமல் போனநிலையில் அவள் எழுதியதாகத் தெரிவிக்கப்படும் கடிதம் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது. லலிதாவின் படுக்கையின் கீழே அந்தக் கடிதம் வைக்கப்பட்டிருந்தது.
” கிராமத்தில் அமைந்துள்ள சுய உதவிக்குழுவில் சிறுதொகைபணம் உள்ளது. அந்த பணத்தினைப் பெற்று வாழ்ந்துகொள்ளுங்கள் .நான் போகிறேன்”
என்ற சாரப்பட அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
அது அம்மாவின் எழுத்துதான் என்று அடித்துச் சொல்கிறார் மகள் திசாளினி.
அத்துடன் லலிதாவுக்குச் சொந்தமான நகைகளும் பத்திரப்படுத்தி படுக்கைக்கு அருகில் வைக்கபட்டிருந்தன.
லலிதா சிலகாலங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார் என்பதை ஊர்மக்களும் ஒத்துக்கொள்கின்றனர்.
” அவள் லேசில ஒண்டையும் யாரிடமும் சொல்லமாட்டாள்.தனக்குள்ளேயே வச்சிருப்பாள்” என்கின்றனர் ஊரவர்கள்.
…………

 

லலிதாவின் வீட்டாருக்கும், ரமேஸ் வீட்டாருக்கும் இடையே சுமுகமான உறவுநிலை இருக்கவில்லை. இதனை சடலம் மீட்டபோது கூட ஊரவர்கள் கண்முன்னே கண்டனர்.
சடலம் கண்டுபிடிக்கப்பட்டு அதை மீட்க முயற்சிகள் நடந்தபோது, ஏராளமானோர் கிணற்றடியில் குழுமியிருந்தனர். அப்போது
“எல்லாத்துக்கும் நீங்கள்தான் காரணம்” என்று கூறி, லலிதா வீட்டார், ரமேஸுடனும், அவரது பெற்றோருடனும் முரண்பட்டிருந்தனர்.இருந்தபோதும் சுற்றிநின்றவர்கள் பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொண்டனர்.
“அவங்களை கிணத்துக்கு வௌிய எடுக்கும் வரைக்கும் அவளின்ர புருசனோ மாமியாரோ அவடத்துக்கு வரேல்ல.அழுது புலம்பவும் இல்லை.வௌிய எடுத்த பிறகு வேடிக்கை பாக்க வந்தவை மாதிரி ஓடிவந்திச்சினம். ஆத்திரம் வந்திச்சு. அதாலதான் அவையள அடிக்கப் போனன்” என்கிறார் லலிதாவின் சகோதரர் நவசீலன்.

…………………

அவளுக்கு ஒரே கரைச்சல்
…………

” எங்களுக்கு 11 சகோதரங்கள். லலிதா ஏழாவது.இருந்திட்டு ஒருக்கா அம்மாவோட போன் எடுத்துக் கதைப்பா. இப்ப கூட ரெண்டு நாளைக்கு முதல் எடுத்து கதைச்சிருந்தா. தனக்கு வருத்தமா இருக்கு, மருந்து எடுக்கவேணும் எண்டு சொன்னவா.அக்கா மட்டும் தான் அவாவோட அடிக்கடி கதைப்பா. நாங்கள் பெரிசா கொண்டாடுறதில்ல. நாங்கள் அங்க போறது லலிதாவின் மாமிக்கு( அப்பம்மா) அவ்வளவாப் பிடிக்காது.அவளைப் பேசிக் கொண்டிருப்பினம். அதால நாங்கள் போகாமலே விட்டிட்டம்.அவளின்ர மாமியும் மாமாவும் ஒரே கரைச்சல் குடுக்கிறதா அறிஞ்சிருக்கிறம்.இப்ப இப்பிடி நடந்து போட்டுது.கட்டின புதுசில ரெண்டு வருசம் எங்களோடதான் ரெண்டுபேரும் இருந்தவை.நல்லாத்தான் வாழ்ந்தவை.பிறகுதான் வவுனியாவுக்கு போனவை.நாங்கள் குடுக்கவேண்டியதெல்லாம் குடுத்துதான் இந்தக் கலியாணத்தை செய்து வைச்சம். இப்பிடி முடிவெடுக்க என்ன நடந்தது எண்டு உறுதியாச் சொல்லமுடியேல்ல” என்று கவலையோடு சொல்கிறார் லலிதாவின் சகோதரனான நவசீலன் .

……………………

நரம்பில்லா நாக்கு
………..

” நாங்கள் லலிதாவுக்கு கொடுமை செய்தது எண்டு சொல்லுகினம் . கலியாணம் கட்டி 15 வருசமாகுது. கொடுமை செய்திருந்தம் எண்டால் அவள் எப்பிடி இவ்வளவுகாலம் இங்க இருந்தவள்? பிள்ளை வேற வளர்ந்திட்டு. அதுட்ட கேட்டுப்பாருங்கோ, நாங்கள் கொப்டுமை செய்தஓ இல்லையோ எண்டு.எலும்பில்லாத நாக்கு என்னத்தையும் சொல்லட்டும்” என்கிறார் லலிதாவின் மாமியாரான( அப்பம்மா) சாந்தா.
……………

தொடரும் விசாரணை
………..

சம்பவங்களை ஆராய்ந்த ஓமந்தைப் பொலிஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

“குறித்த மரணங்கள் கொலையா? தற்கொலையா? என்பதனை உறுதியாகக் கூறமுடியாது.சந்தேகப்படும் படியான விடயங்கள் எவையும் இதுவரை தென்படவில்லை.அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் மற்றும் கடிதத்தினை நீதிமன்றில் ஒப்படைத்துள்ளோம்.சடலங்கள் உடற்கூற்றுப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனது.இரசாயனபகுப்பாய்வுக்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.அதன் அறிக்கைள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றோம்” என ஓமந்தை பொலிஸ்நிலையத்தின் உபபொலிஸ்பரிசோதகர் சுகந் தெரிவித்தார்.
…………………….

 

சந்தேகம் = 1

லலிதாவின் வீட்டின் முற்றத்திலேயே பெரிய தோட்டக்கிணறு ஒன்று அமைந்துள்ளது.அதில் குதிக்காமல், எதற்காக மழை பெய்யும் போது குடையோடு குழந்தையையும் சுமந்து சென்று தூரத்தில் உள்ள தோட்டக் கிணற்றில் குதிக்க வேண்டும்? சாவதென்று முடிவெடுத்தவள் அந்தச் சமயத்திலும் குடை பிடித்துத்தான் கிணற்றில் குதிக்கப் போவாளா? வீட்டில் முரண்பாடு என்றால், எதற்காக தன்னோடு 3 வயதேயான பெண் குழந்தையையும் சேர்த்தபடி கிணற்றில் குதிக்க வேண்டும்?
………………..

சந்தேகம் = 2

லலிதாவின் படுக்கையில் இருந்து கடிதம் ஒன்று பொலிஸாரால் முதலில் மீட்கபட்டிருந்தது. எனினும் பிறிதொரு கடிதமும் லலிதாவால் எழுதப்பட்டுள்ளதாகவும் அது பின்னரே கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவளது மாமியார் தெரிவிக்கின்றார். அந்த கடிதத்தை வீட்டுக்கு செல்பவர்களிடம் காட்டுகின்றார்.அதில் லலிதாவின் மாமியார்,கணவர் ஆகியோரைப் பற்றி நல்லவிதமாக எழுதப்பட்டுள்ளது. எனினும் அந்தக் கடிதம் பொலிஸாரிடம் வழங்கப்படவில்லை.
அந்தக் கடிதம் எப்படி பொலிஸாரின் சோதனையில் சிக்காமல் போனது? சரி, பின்னர்தான் அந்தக் கடிதம் கிடைத்திருந்தாலும் ஏன் அதனைப் பொலிஸிடம் ஒப்படைக்கவில்லை?

………….
சந்தேகம் = 3

கிணற்றுக்குள் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டபோது தாயைப் பற்றியபடி குழந்தையின் சடலமும் இருந்துள்ளது.லலிதாவின் சடலம் மீட்கபட்டபோது அவளது் கைகள் பிள்ளையை இறுக்க அணைத்தபடியே இருந்தன.எனினும் பிள்ளையின் சடலம் நழுகி நீருக்குள் சென்றதாக அதனை மீட்டவர்கள் தெரிவித்தனர். .அப்படியானால் தற்கொலைசெய்த லலிதா நீருக்குள் மூச்சுஅடங்கும் போதுகூட எதேச்சையாகவேனும் கைகளை ஏன் அசைக்கவில்லை?
………………

என்ன கதி?

கணநேர தவறான முடிவால் லலிதா தன் உயிரையும், குழந்தையின் உயிரையும் மாய்த்து விட்டாள். ஆனால் இப்போது அவளது 15 வயது மகளும், 8 வயது மகளும் தனித்து விடப்பட்டனர். தந்தை இருந்தாலும், அந்தப் பிள்ளைகளுக்கு தாய் இருந்து கவனிப்பது போல வருமா? தாய்ப்பாசமும், அரவணைப்பும் இல்லாத அந்தப் பிஞ்சுகளின் எதிர்காலம் என்ன? உயிர் மாய்க்க நினைப்போர், தங்களை நம்பியிருப்போரைக் கொஞ்சமேனும் சிந்தியுங்கள், சாவதற்கு வரும் துணிவில் சிறுதுளி துளியிருந்தாலே போதும், எதையும் தாங்கி வாழ்ந்துவிடலாம்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266