செய்திகள்தலைப்புச் செய்திகள்பிந்திய செய்திகள்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் குழப்பத்தை ஏற்படுத்திய தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர்.அவர்கள் அவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருந்த போது, அவர்களை கட்டுப்படுத்தாது, அருகில் இருந்த கொட்டகைக்குள் இருந்து தமிழ் தேசி மக்கள் முன்னணியின்நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தமை அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.

தியாக தீபத்தின் நினைவேந்தல் நாளின் தொடக்க நாளுக்கு முந்தைய நாளான 14ஆம் திகதி இரவு தமிழ் தேசி மக்கள் முன்னணியினர் நினைவிடத்தினை மறைத்தவாறு பந்தல் அமைத்த போது அங்கிருந்தவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற போது அவர்களுடன் முரண்பட்டார்கள்.
தொடக்க நாளான மறுநாள் , தியாக தீபத்தின் நினைவிடத்தில் வைக்கப்பட்டு இருந்த படத்தினை மறைத்தவாறு தமிழ் தேசி மக்கள் முன்னணியினர் கொடி கம்பங்களை நாட்டினார்கள். அவ்வாறு படங்களை மறைக்குமாறு கொடி கம்பங்களை நட வேண்டாம் என்ற போதும் முரண்பட்டுக்கொண்டார்கள்.
தொடர்ந்து நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளிலும் சிறு சிறு சச்சரவில் ஈடுபட்டு வந்தனர்.
இறுதி நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நேற்றைய தினம் செய்ய முற்பட்ட யாழ். மாநகர சபை உறுப்பினர்களுடன் முரண்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அவர்ளை தாக்கவும் முற்பட்டனர்.
தியாக தீபத்தின் நினைவிடத்தை. காலை முதல் காங்கிரசினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
நினைவிடத்தை சுற்றி மஞ்சள் உடுப்புக்களுடன் நின்று , அஞ்சலி செலுத்த வருபவர்களை மாத்திரம் அனுமதித்து மற்றைய கட்சிகள், அமைப்புக்களை சார்ந்தவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தியாக தீபம் உயிரிழந்த 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுவதாக இருந்த போது , தாமே அவற்றை முன்னிருந்து ஏற்ற வேண்டும் எனும் போட்டியில், தள்ளு முள்ளுக்களுக்கு மத்தியில் 3 நிமிடங்கள் முந்தி 10.45 மணியளவில் தீபத்தினை ஏற்றினார்கள்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266