தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் உடல்!

கிளிநொச்சி, ஜெயந்தி நகரில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

நிலகரட்ண ஜெயசீலி (வயது-32) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். கிளிநொச்சி சிவில் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகத்தரான இவர், முன்பள்ளி ஆசிரியையாகவும் கடமையாற்றியுள்ளார். இயக்கச்சி, விநாயகபுரத்தைச் சேர்ந்த இவர் தொழில் நிமித்தம் ஜெயந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார் என்று கூறப்படுகின்றது.

கணவரைப் பிரிந்து வாழும் இவர் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்கின்றார். நேற்றுமுன்தினம் இரவு மூத்த பிள்ளைகள் இருவரும், இவருடன் பணியாற்றியவரின் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்த நிலையில், இளைய பிள்ளையுடன் இரவு தனித்திருந்தார் என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று இவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version