in , ,

தென்னை சபையின் அராஜகம்; ஏ9 வீதியை மறித்து போராடிய கரந்தாய் மக்கள்!

கிளிநொச்சி – பளை, கரந்தாய் பகுதியில் தென்னை பயிர்ச் செய்கை சபையால் உரிமை கோரப்பட்ட நிலையில் மக்களிடம் கையளிக்க அறிவுறுத்தப்பட்ட காணியில் தற்காலிகமாக வசித்த மக்களின் கொட்டகைகளை குறித்த சபையினர் பொலிஸாரின் பாதுகாப்புடன் உழவியந்திரம் மூலம் இடித்து அகற்றி, அங்கிருந்தோரை வெளியேற்றியுள்ளனர்.

இன்று (15) இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பளை, கரந்தாய் கிராமத்தில் 1976ம் ஆண்டு மக்கள் குடியேறிய இருந்தனர். அதன்பின் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு சென்ற மக்கள் போர் நிறைவடைந்ததன் பின்னர் 2010ம் ஆண்டு மீண்டும் கரந்தாய் கிராமத்தில் குடியேறியிருந்தனர்.

அவ்வாறு குடியேறியிருந்த காணியை தமக்குரியது என தெரிவித்த தென்னை பயிர்ச்செய்கை சபையினர், 2015ம் ஆண்டு மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேற்றியிருந்தனர்.

இதனையடுத்து மக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பயன் கிடைக்காத நிலையில் யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்திருந்தனர்.

இதன் பயனாக மக்களுடைய காணிகளை இரு வாரங்களுக்குள் மக்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு கடந்த வருடம் ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் காணிகளை மக்களிடம் கையளிக்குமாறு பல தடவைகள் மனித உரிமைகள் ஆணைக்குழு உரியவர்களுக்கு தெரியப்படுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் தமது தீர்வினை தாமே பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தமது காணிகளிற்குள் உள்நுளைந்து கடந்த இரண்டு மாதமாக தற்காலிக கொட்டில்களை அமைத்து வசித்து வருகின்றனர்.

இன்றைய அங்கு சென்ற தென்னை பயிர்ச் செய்கை சபையினர் பொலிஸாரின் பாதுகாப்புடன் மக்களின் தற்காலிக கொட்டகைகளை உழவியந்திரம் மூலம் இடித்தழித்து, மக்களை வெளியேற்றினர்.

இவ்வாறு இடிக்கப்பட்ட கொட்டகைகளை மற்றும் தூக்கி வீசப்பட்ட வீட்டு பாத்திரங்களை ஏ9 வீதியில் போட்டு வீதியை மறித்து பாதிக்கப்பட்டோர் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

போராட்டத்தின் காரணமாக ஏ9 வீதி சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேல் முடக்கப்பட்டத. அதன்பின்னர் குறித்த இடத்திற்கு சென்ற பளை பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

கலந்துரையாடலின்போது தென்னை பயிர் செய்கை சபையினரால் அழிக்கப்பட்ட கொட்டகைகளை மீண்டும் அமைத்துத் தருவதற்கு ஏற்பாடு செய்வதாக மக்களுக்கு பொலிஸார் வாக்குறுதி வழங்கியதால் போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை இந்த காணி தொடர்பில் நீதிமன்ற வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா பலியெடுப்பு 403 ஆனது!

தொற்று உறுதியான பிசிஆர் முடிவில் சந்தேகம்; இறுதி கிரியைக்கு நீதிமன்ற தடை!