கட்டுரைகள் சிறப்புக் கட்டுரை செய்திகள்

தெய்வப் புலவர் திருவள்ளுவரின் குருபூசை இன்று

பொதுமறையாம் திருக்குறள் எனும் அரும்பெரும் பொக்கிசத்தை உலகிற்கு அளித்த தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெருமானின் குருபூசை தினம் இன்று (10.03.2020) ஆகும்.

வாழ்வின் ஒளி விளக்காகத் திகழும் திருக்குறள், தமிழ்மொழிக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த அரிய கருவூலமாகும். வாழ்க்கைக்குத் தேவையான இன்றியமையாத கருத்துக்கள் அனைத்தையும் திருவள்ளுவரைப் போல் உணர்த்தியவர்கள் உலகில் யாரும் இல்லை எனலாம்.

தனிமனித ஒழுக்கத்தையும் பொது ஒழுக்கத்தையும் அறத்துடன் கூறியது திருக்குறள் ஒன்றே என பேரறிஞர் அல்பேர்ட் சுவிட்சர் கூறியுள்ளார்.

அத்துணை சிறப்பு வாய்ந்த வேதமாம் திருக்குறளை இவ்வையகத்திற்கு அளித்த தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருவுருவ கற்சிலைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டு அண்மையில் காரைதீவிலும் யாழ் உரும்பிராயிலும் நிறுவப்பட்டிருந்தன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் உலகில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்த தமிழ்ப் பெரியார் ஆவார். திருக்குறள் நூலானது மொழி, இனம், நாடு கடந்து முக்காலத்திற்கும் ஏற்ற தத்துவ நூலாகும். இதனால் இதனை உலகப் பொதுமறை என்று அழைப்பர்.

இதில் 42194 எழுத்துக்கள், 14000 சொற்கள், 1330 குறட்பாக்கள், 133அதிகாரங்கள், 3 பிரிவுகள் என்பன அடங்குகின்றன.

‘தேவர் குறளும் திருநான்மறை முடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒரு வாசகம் என்றுணர்’

தெய்வப் புலவரின் உலகப் பொதுமறையாம் திருக்குறளுக்கு ஒளவைப் பிராட்டியார் சூட்டிய புகழாரம் இது.

மனிதன் மனிதனாக வாழக் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை உயரிய தத்துவங்களையும் வழிகளையும் திருக்குறள் இரண்டு வரிக் குறள் மூலம் அழகாக எமக்குத் தந்திருக்கின்றது. கடவுள் வாழ்த்தில் தொடங்கி ஊடல் உவகை வரை 133 அதிகாரத் தலைப்புகளில் பத்துப் பத்துக் குறள்களாக இல்வாழ்க்கைக்கு, நாட்டுக்கு, நாட்டுத் தலைவனுக்கு, அமைச்சருக்கு, தொழில் செய்பவனுக்கு, பொருள் ஈட்டுபவனுக்கு, மாதருக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றியெல்லாம் மிகத் தெளிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

உலகில் யாரிடம் கேட்டாலும் விலை மதிக்க முடியாதது எது? என்று கேட்டால் அது உயிர் என்றுதான் பெரும்பாலும் பதில்வரும். அத்தகைய உயிரை விட மேலானது ஒன்றிருக்கிறது .அது எது? என்று விளக்குகிறார் திருவள்ளுவர்.

அதுதான் ஒழுக்கம் என்பது. அதைச்சுட்ட கீழ்வரும் குறளைத் தருகிறார்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.

திருக்குறளில் அறம், பொருள், இன்பம் மூன்றும் முறையாக இருந்தால்த்தான் கடைசி நிலையான வீடுபேற்றை அடையமுடியும் என்பதை வலியுறுத்துகிறது.

அதுபோல அறத்தைப் பின்பற்றி அறத்தோடு பொருள் ஈட்டி வாழ்க்கையின் இன்பங்களை அறத்தோடு அனுபவிக்கும் போதுதான் தீமை, வறுமை, ஆசை போன்றவற்றிலிருந்து விடுதலை பெற முடியுமெனவும் குறிப்பிடுகிறது.

‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற குறள் இந்த உலகத்திலே வாழும் முறைப்படி வாழ்ந்துவிட்டால் வானில் உறைகின்ற தெய்வத்திற்கு இணையான நிலையைப் பெற்று விடலாம் என்பதனை உணர்த்துகிறது.

‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு’ என்ற குறள் பொருள் செல்வத்தை தேடுவதை வாழ்வின் இலட்சியங்களில் ஒன்றாகக் கருதிக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதனையும் பொருள்சார் விழப்புணர்வு அவசியம் என்பதனையும் பொருள் இல்லார்க்கு இவ்வுலக வாழ்க்கையும் அறத்தின்பால் செல்லாத அருள் இல்லார்க்கு அவ்வுலக வாழ்க்கையும் இல்லை என்பதனையும் உணர்த்துகிறது. அதேபோல ‘இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு’ என்ற குறளடி ஏழைகள் அவமதிப்பிற்குரியவராக இல்லாத மனிதன் மனிதனாக வாழக் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை உயரிய தத்துவங்களையும் வழிகளையும் திருக்குறள் இரண்டு வரிக் குறள் மூலம் அழகாக எமக்குத் தந்திருக்கின்றது.

நல்லொழுக்கத்தின் பயனை’ நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்’ எனவும் மற்றொரு உயிருக்கு வரும் துன்பத்தை தனக்கு வந்த துன்பம் போல கருதாவிட்டால் ஒருவன் பெற்றுள்ள அறிவால் வரும் பயன் யாது? என்பதனை’ அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக் கடை’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

‘கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள் ‘

பொய்யாமொழிப்புலவரின் முப்பால் நூலான திருக்குறளுக்கு தமிழறிஞர் இடைக்காடர் சூட்டிய புகழாரம் இது. அவ்வாறான திருக்குறளைத் தந்த பேரறிஞரின் குருபூசை தினம் இன்றாகும்.

Related posts

எந்த ஒப்பந்தத்திலும் கையெழுத்திட மாட்டேன்! – சஜித்

G. Pragas

சுற்றுலா தொழிற்துறை அபிவிருத்திக்கு பிரச்சாரம்

Tharani

“கூட்டமைப்பின் ஊடாக கருணாவை போட்டியிட கோரியுள்ளோம்!

கதிர்