in , ,

தேயிலை கொழுந்து உற்பத்தியில் வீழ்ச்சி!

இரத்தினபுரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் பசளை தட்டுப்பாடு காரணமாக பிரதேச தேயிலை தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயகரமான நிலைமையை எதிர்கொண்டுள்தாக பிரதேச சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் அதிகமாக உள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

பசளை தட்டுப்பாடு காரணமாக தேயிலை தோட்டங்களில் பச்சை கொழுந்தின் உற்பத்தி அரைவாசியாகக் குறைந்துள்ளதுடன் பச்சை கொழுந்தின் விலை 10-15 ரூபா வரையில் குறைந்துள்ளதாகவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலைமையால் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வரும் பச்சைக் கொழுந்தின் அளவும் அரைவாசியாக குறைந்துள்ளதால் தொழிலை நம்பிக்கையுடன் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தி தமது தொழிலை முன்னெடுக்கும் அளவுக்கு வருமானம் இல்லை எனவும் இவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் இதுவரை காலமும் இரசாயன பசளைகளினால் தேயிலைப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் அரசாங்கம் திடீரென சேதனப் பசளையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

ஆனால் தற்போது இரசாயன மற்றும் சேதனைப் பசளைகள் இரண்டு வகைகளும் கிடைக்காததால் இந்த இக்கட்டான நிலைக்கு முகம்கொடுக்க நேரிட்டுள்ளதாக இவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையால் தேயிலை உற்பத்தி குறைந்து இத்துறை மூடப்படும் அபாயகரமான நிலைமைக்குத் தள்ளப்படலாம் எனவும் இவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல்; பூஜித், ஹேமசிறிக்கு எதிரான 800 குற்றச்சாட்டுக்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்!

சிறுமி விற்பனை மற்றும் பாலியல் வன்முறை விவகாரம்; சத்திர சிகிச்சை நிபுணர் பணி இடைநிறுத்தம்!