கிழக்கு மாகாணம் செய்திகள் பிரதான செய்தி

தொண்டமான் அமரரான வலி வட, கிழக்கிலும் துயரை தருகிறது

ஆறுமுகம் தொண்டமான் அமரரான அந்த வலிதரும் செய்தி வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கெல்லாம் மலையத்துக்கு எந்த விதத்திலும் குறையாத ஒரு துயராக, ஒரு துன்பமாகவே இருக்கிறது. இளவயதுத் தலைவரை இழந்து தவிக்கின்ற மலையக உறவுகளின் துன்பத்தில் நாங்களும் ஒன்று கலக்கின்றோம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவு குறித்து இன்றைய தினம் (29) அவர் வெளியிட்டுள்ள அஞ்சலி அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதில் மேலும் தெரிவிக்கையில்,

‘இன்னொரு மூன்று நாட்கள் தாமதமாகியிருந்தால் அவர் 56ம் அகவையிலே தன் காலடியைப் பதித்திருப்பார். ஆனால் அவசரப்பட்டுவிட்டான் காலன். இதனால், மலையக மக்கள் கட்சி பேதின்றிக் கலங்கிப் போய் நிற்கின்றார்கள். அவர்களைப் பொறுத்தவரையிலே அவர்கள் ஒவ்வொருவரதும் வீட்டில் ஏற்பட்ட இழப்பாகவே இதனைக் கருதுகின்றார்கள். அவர்களின் தொப்புல்கொடி உறவுகளான நாமும் இச்செய்தியால் அதிர்ச்சியடைந்திருக்கின்றோம். 55 வயதில் ஏற்படுகின்ற இறப்பு என்பது உண்மையிலேயே அதிர்ச்சியடையக் கூடியதொரு செய்திதான்.

பெருந்தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு பின் அவருடைய இளைய வாரிசாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸை வழிநடத்தி வந்தவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான். 1994ல் அவரும் நானும் முதற்தடவையாகப் நாடாளுமன்றத்தில் கால் பதித்திருந்தோம். அந்த வகையிலே 2000ம் ஆண்டு வரையான அந்தப் நாடாளுமன்றக் காலப்பகுதியில் அவரும் நானும் பல்வேறு விடயங்களில் கருத்துகள் பரிமாறியிருக்கின்றோம். ஒன்றுபட்ட உழைத்தும் இருக்கின்றோம்.

அந்தக் காலப்பகுதி குறிப்பாக வடகிழக்குத் தமிழர்களும், கொழும்பில் வாழ்ந்த மலையகத் தமிழர் உட்பட எல்லாத் தமிழர்களும் ஒரே வகையான முத்திரை குத்தப்பட்டவர்களாகவே இருந்தார்கள். பெரும்பான்மைப் பிரதிநிதிகள் இப்போது என்ன கூறினாலும் அந்தக் காலப்பகுதியில் எல்லாத் தமிழர்களும் ஒரே கண்கொண்டுதான் பார்க்கப்பட்டார்கள். அன்றைய நாடாளுமன்றத்திலே வடகிழக்குத் தமிழர் பிரச்சினை தொடர்பில் அமரர் சந்திரசேகரன் மலையகக் குரலாக ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தார். அமரர் ஆறுமுகம் ஓங்கி ஒலிக்காவிட்டாலும் உரிய நேரங்களிலெல்லாம் எம்மோடு ஒன்றுபட்ட உணர்வையே அவர் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.

இவரது பாட்டனார் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களுக்கு இலங்கை சுதந்திரம் அடைந்த கையோடு மிகப்பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது. இந்திய வம்சாவளி மக்கள் ஏழரை இலட்சம் பேர் குடியுரிமையை இழந்தார்கள். இலங்கை நாடாளுமன்றம் பெரும்பான்மை என்ற பல்தோடு எழுந்த சிங்கள உறுப்பினர்களால் இக் கைங்கரியத்தைச் செய்தது. அவ்வேளை தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம் ஆகியோரை முக்கிய உறுப்பினர்களாகக் கொண்ட இலங்கைத் தமிழ் காங்கிரஸ் இச்செயற்பாட்டைக் கடுமையாக எதிர்த்தது. ஒன்றிரண்டு மாதங்களிலேயே ஜி.ஜி.பொன்னம்பலம் அநீதிக்குத் துணை போய் விட்டார். ஆனால் தந்தை செல்வா தான் எடுத்த கோட்பாட்டில் தொடர்ச்சியாக உழைத்தார். இதன் காரணமாக காங்கிரஸை விட்டு வெளியேறி தமிழரசுக் கட்சியை நிறுவும் நிலை ஏற்பட்டது.

இத்தகு அறம்சார் செயற்பாட்டை சொல்லாலும், மனதாலும் நன்றியோடு வெளிப்படுத்தியவர் அமரர் ஆறுமுகத்தின் பாட்டனார் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். எனவேதான் 1952 பொதுத் தேர்தலின் போது வடக்கு கிழக்கிற்கு வந்து தமிழரசு தேர்தல் பரப்புரை மேடைகளிலே தமிழரசின் வெற்றிக்காக அவர் பரப்புரை செய்தார். இந்த நிலைப்பாடு தொடர்ச்சியாக இருந்தது. 70களில் முதலாவது குடியரசு அரசியலமைப்பு வந்த போது உருவாக்கப்பட்ட (1972) தமிழர் கூட்டணியிலும் பின்னர் பரிநாமமடைந்த தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் தெண்டமான் கூட்டுத் தலைவர்களில் ஒருவராகச் செயற்பட்டவர்.

இந்த பின்னணியிலே உணர்வோடு ஒன்றித்த மலையக, வடகிழக்கு இணைப்பு இன்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. மலையகம் தாக்கப்படும் போதெல்லாம் வடகிழக்குக்கு வலிக்கும். இதையொத்த செயற்பாடே வடகிழக்கு தாக்கப்படும் பொழுது மலையத்துக்கும் ஏற்படும்’. – என்றார். (150)

Related posts

வீட்டின் மீது தாக்குதல்

G. Pragas

தினம் ஒரு திருக்குறள் (29/12)

Bavan

திடீர் வேலை நிறுத்தம் – கோட்டையில் பதற்றம்

G. Pragas