கட்டுரைகள் செய்திகள்

தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் விபத்துகள், மரணங்கள்

பணியில் ஈடுபட்டுள்ள போது ஏற்படும் விபத்துகள் காரணமாக காயமடையும் மற்றும் மரணமடையும் பணியாளருக்கான நட்டஈடு செலுத்துவதற்கான 1934ஆம் ஆண்டின் 19ஆம் இலக்கச் அச்சட்டத்திற்கு 1990ஆம் இலக்கச் சட்டத்தின் கீழாகப் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அச்சட்டத்தின் கீழ் விபத்துகளினால் காயமடையும் மற்றும் மரணமடையும் பணியாளருக்கான நட்டஈடு கணிக்கும் முறைமை பற்றியும் தெரிந்து கொள்வது பயனுள்ளதாகும். குறித்த தொழிலாளர் நட்டஈட்டுச் சட்டத்தின்படி நட்டஈடு கணிக்கும் விதம் பின்வருமாறு அமைகின்றது.  

 மரணத்தை ஏற்படுத்தாத விபத்து தொடர்பாக பாதிப்படைந்த பணியாளரின் மாதச் சம்பளம் வைத்தியரால் கணிக்கப்பட்ட உழைப்பின், இழப்பின் தன்மையின் வீதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த நட்டஈட்டுத் தொகை கணிக்கப்படும்.  

மரணத்தை ஏற்படுத்திய விபத்து தொடர்பாக மரணமடைந்த பணியாளரின் நட்டஈடு அவர் மரணித்தபோது பெற்றுக்கொண்ட மாதச் சம்பளத்தின் அடிப்படையில் கணிக்கப்படும்.  

தற்காலிக பாதிப்பை எதிர்கொண்ட பணியாளர் தொடர்பாக வைத்திய அதிகாரியொருவரால் சிபார்சு செய்யப்படும் நாட்களின் எண்ணிக்கைக்கமைய அந்நாட்களைக் கருத்திற் கொண்டு நட்டஈடு கணிக்கப்படும்.  

நட்டஈட்டுத் தொகையின் மேலெல்லை இரண்டரை இலட்சம் ரூபாவாகும்.  

சம்பளம் கணக்கிடப்படும் போது பிரயாணப்படி, இளைப்பாற்றும் மற்றும் ஊழியர் சேமலாப நிதி, உதவித் தொகை போன்றவை தவிர்ந்த பணத்தால் அளவிடக் கூடிய சகல நன்மைகளினதும் அடிப்படைப் பெறுமதி உள்ளடக்கப்படும். இதன்படி மேலதிக நேரக் கொடுப்பனவு, போனஸ் மற்றும் ஊக்குவிப்புப்படி ஆகியவையும் சம்பளத்துடன் சேர்க்கப்படும்.  

பொதுவாக மாதாந்த சம்பளம் கணக்கிடுதல்: 

தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபட்டவராக இருப்பின் விபத்து நிகழ்ந்த தினத்திற்கு முன்னரான பன்னிரண்டு மாதங்களில் உழைத்த தொகையைப் பன்னிரண்டால் பிரிப்பதன் மூலம்  பணியாளரின் சேவைக் காலம் ஒரு மாதத்திற்கும் குறைவாகவிருக்குமிடத்து பணியில் ஈடுபட்டுள்ள ஒத்த பணியாளர் பெறும் மாதச் சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு கணிப்பிடுவதன் மூலம்,  இவை தவிர்ந்த ஏனைய சகல சந்தர்ப்பங்களிலும் விபத்து நிகழ்வதற்கு முன்னுள்ள சேவைக்காலத்தில் உழைத்த மொத்த தொகையை முப்பதால் பெருக்கி அத்தொகையை குறித்த காலப் பகுதியில் வேலை செய்த நாட்களால் பிரிப்பதன் மூலமும் கணக்கிடப்படும்.  

மரணச் செலவை மீளளிக்கும் முறைமை: 

நட்டஈட்டுத் தொகை ரூபா 75,000இற்கு மேற்படாதுள்ள போது ரூபா 5000,00 

நட்டஈட்டுத் தொகை ரூபா 75,000இற்கும் 1,25,000இற்கும் இடைப்பட்டதாயிருக்கும் போது ரூபா 7,500, நட்டஈட்டுத் தொகை ரூபா 1,25,000இ ற்கும் அதிகமாக இருப்பின் ரூபா 10,000.  குறித்த மரணச் செலவுக்கான கொடுப்பனவானது தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளரினால் பணியாளருக்குரிய நட்டஈட்டுத் தொகையிலிருந்து கழிக்கப்பட்டு மரணச் செலவு செய்யும் ஆளுக்கு வழங்கப்படும்.  

நட்டஈடு தொடர்பில் மேன்முறையீடு

செய்யும் உரிமை: 

ஆணையாளரின் முடிவுக்கு எதிராகவோ அல்லது வழக்குத் தீர்ப்புக்கு எதிராகவோ பாதிக்கப்பட்ட தரப்புக்கு மேற்முறையீடு செய்யும் உரிமையுண்டு. அவ்வாறு தேவையேற்பட்டால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யலாம்.  

தொழில் வழங்குனர் மேன்முறையீடு செய்வதனால் முதலில் நட்டஈடு ஆணையாளரிடம் குறிப்பிடப்பட்ட நட்டஈட்டுத் தொகையை வைப்புச் செய்ய வேண்டும். அத்துடன் அது தொடர்பான சான்றிதழையும் பெற்றுக் கொள்ள வேண்டும்.  

சட்டரீதியான தேவைப்பாடாக இல்லாதபோதும் தொழில் வழங்குனர்கள் தமது பணியாளர்களைக் காப்புறுதி செய்து கொள்ளல் பயனுள்ளதாகும்.  

பணியாளர் மற்றும் தொழில்வழங்குனர் நினைவில் வைத்திருக்க வேண்டிய பிரதான விடயங்கள்: 

விபத்து நிகழ்ந்து பதினான்கு நாட்களுக்குள் தொழில் வழங்குனர் தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளருக்கு அதுபற்றி அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிக்கை வழங்காதிருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதற்கான படிவம் கியூ  (Q2) ஆகும்.  

தொழிற்சாலைகள்:  

தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்களால் விபத்துக்கள் பற்றிய அறிவித்தல் ஏடு பேணப்பட வேண்டும். அதற்கான படிவம்  என்  (N) ஆகும்.   குறிப்பிட்டகால எல்லைக்கும் நிர்ணயிக்கப்படும நட்ட ஈட்டுத் தொகை செலுத்தப்படாவிட்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். அவ்வாறான வேளையில் நட்டஈட்டுத் தொகையின் பத்துவீதம் தண்டப்பணமாக அறவிடப்படும்.  

நட்டஈடு சம்பந்தமான சகல படிவங்களையும் தொழிலாளர் நட்டஈட்டு ஆணையாளர் அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். 

த. மனோகரன்
ஓய்வுபெற்ற கைத்தொழில்
நீதிமன்றப் பதிவாளர்    

Related posts

விசா இல்லாமல் இந்திய நாட்டவர் கைது

Bavan

377 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது

G. Pragas

சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.