இந்திய செய்திகள் சினிமா செய்திகள்

சுஷாந்தின் மரணமும்; பேசு பொருளான மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்களும்!

எம்.எஸ்.டோனி படத்தில் நடித்த பிரபல நடிகர் சுஷாந்த் சிங் சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டமையானது சினிமா உலகில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளதுடன், இவரின் தற்கொலைக்கு மும்பை சினிமாவின் இருண்ட பக்கங்கள் சிலவும் காரணமாக இருக்கலாம் என பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

சுஷாந்த் சிங்கும் ஒரு எளிய பின்னணியிலிருந்து நடிக்க வந்தவர் தான்.கல்லூரியில் படிக்கும் போதே நடனம் கற்றுக்கொண்டு அதன் மூலம் பல விழாக்களில் நடனம் ஆட ஆரம்பித்து, பின்னர் நாடகம், தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கத் தொடங்கி சினிமாவுக்கு வந்தவர்.மிகுந்த திறமைசாலி.டோனியாக அவர் நடித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.அவரது `கை போ சே’, `டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பக்ஷி’, `சிச்சோரோ’ படங்கள் பெரும் வெற்றி பெற்றவை.அமிர் கான் நடித்த `பீகே’ படத்திலும் நடித்திருக்கிறார். இப்படிப் பட்டவர், கஷ்டப்பட்டு நடித்து ஒரு நட்சத்திரமாக மாறியவர், தன்னை பாலிவுட்டில் யாரும் எந்த கொண்டாட்டங்களுக்கும் அழைப்பதில்லை என்று கூட சொல்லியிருக்கிறார்.டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஒரு ரசிகையிடம், “உங்களையெல்லாம் தான் எனது குடும்பமாக நினைக்கிறேன்; நீங்களே என் படங்களைப் பார்க்காவிட்டால் நான் பாலிவுட்டில் எப்படிக் காலம் தள்ளுவது” என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

karan Johar, Akshay kumar, Rohit Shetty, Ranveer singh, Ajay Devghan
karan Johar, Akshay kumar, Rohit Shetty, Ranveer singh, Ajay Devghan

மும்பையின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், ஒருமுறை பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான அலியா பட் கரணிடம் பேசியபோது, சுஷாந்த் சிங் யாரென்றே தெரியாதவர்போல, `சுஷாந்த்தா? யாரது?’ என்று கேட்டதும் நடந்திருக்கிறது.அதே அலியா இப்போது சுஷாந்த்தின் இறப்புக்கு அஞ்சலி செலுத்துவதாகப் போட்ட டுடிட்டில் இதைச் சொல்லியே, அவரை ரசிகர்கள் ஏசிக் கொண்டிருக்கிறார்கள்.இதைச் சொல்வதற்குக் காரணம், பாலிவுட்டில் வாரிசு நடிகர்கள் வாய்ப்புகளுக்காகப் பெரிதாக எந்த சிரமமும் பட்டதில்லை.அவர்களுக்கு எப்போதுமே பிறர் என்றால் இளக்காரம் தான்.

எம்.எஸ்.டோனி படத்தின் போது ஒரு பேட்டியில், பிறரைக் கண்டு கொள்வது போல பாலிவுட் இன்னும் தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்று சொல்லி இருக்கிறார் சுஷாந்த்.2015 இலேயே, “இதற்கெல்லாம் நெப்போட்டிஸம், அதாவது வாரிசு அரசியல்தான் காரணம் என்று நினைக்கிறேன்; அப்படி இல்லை என்று சொல்பவர்கள் ஒன்று மிகப் பெரிய ஆசாமிகளாக இருக்க வேண்டும், அல்லது ஒன்றுமே தெரியாதவர்களாக இருக்கவேண்டும்” என்றும் பேசியிருக்கிறார் சுஷாந்த்.

Sushanth, Jaquline Fernandez
Sushanth, Jaquline Fernandez

வாரிசுகள் ஒன்று சேர்ந்து, தங்களுக்குப் பிடித்த வாரிசுகளையோ நட்சத்திரங்களையோ மட்டுமே வைத்துப் படமெடுக்கும் நெப்போடிஸம் எனப்படும் வாரிசு அரசியல் பற்றி, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் 2017 இல் சுஷாந்த் பேசும் பேட்டி ஒன்று உண்டு.அதில், “நெப்போடிஸம் இருந்து விட்டுப் போகிறது.ஆனால் இந்த அரசியலால், பிற்காலத்தில் திறமைசாலிகள் உள்ளேயே வரமுடியாமல் போய்விடும் ஆபத்து உண்டு.அதுதான் இதன் மிகப்பெரிய பிரச்சினை’’ என்று சொல்லியிருப்பார். இதுதான் சுஷாந்த்தின் இறப்புக்குக் காரணம் என்று சொல்லவில்லை.இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.தன்னுடைய திறமைக்கான, கடின உழைப்புக்கான, அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் கிடைக்காதபோது ஏற்படும் வலி என்ன என்பது நம் ஒவ்வொருவருக்குமே புரியும். அந்த வலிக்கு ஒரே ஆறுதல் அங்கீகாரம் மட்டுமே.

சுஷாந்த் மட்டும் இல்லாமல், ராஜ்குமார் ராவ், தாப்ஸி, கங்கனா ரனாவத் ஆகியோரும் இந்த வாரிசு அரசியல் பற்றிப் பலமுறைகள் பேசியிருக்கின்றனர்.”நெப்போட்டிஸத்தின் மொத்த அடையாளம் நீங்கள்தான்” என்று கரன் ஜோஹரின் முகத்துக்கு நேராகவே கங்கனா, `காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.இப்போதும் கங்கனா நெப்போட்டிஸம் பற்றிப் பேசியிருக்கிறார்.

சுஷாந்தின் மரணம் மூலமாக ஒரு மிகப்பெரிய விவாதம் மறுபடியும் கிளம்பியிருக்கிறது.அதற்கான பதில் கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது.ஆனால், பாலிவுட் மறுபடியும் தனது வாரிசுகளை வைத்துப் படங்கள் எடுக்க ஆரம்பிக்கும்.திறமையை விட, நட்சத்திரங்களுக்குள்ளான நட்பும் உறவுகளுமே மதிக்கப்படும்.இன்னும் பல பல வாரிசுகள் கிளம்பி வருவார்கள்.அவர்களுக்கு மத்தியில், சொந்த முயற்சியால் முன்னுக்கு வந்த சுஷாந்த் போன்ற திறமையாளர்கள், யாரிடம் பேசுவது என்றே தெரியாமல் தனித்து விடப்படுவார்கள் என்றே தோன்றுகிறது. இது மிகவும் கடினமானது என்று சில மும்பை பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

பசறை விபத்து தொடர்பில் விசேட விசாரணை

reka sivalingam

அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரருக்கு புற்றுநோய்

G. Pragas

ஊரடங்கு சட்டத்தை மீறிய 130 பேர் கைது…!

Tharani