யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டது. அதனையடுத்து வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.
மருத்துவ வல்லுநருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டமை தொடர்பில் எவரும் அச்சமடையத் தேவையில்லை. வைத்தியசாலையில் உரிய சுகாதார நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மேலும் தெரிவித்ததாவது;
பாதிக்கப்பட்ட மருத்துவ வல்லுநர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையின் செயற்பாடுகள் அனைத்தும் சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக எந்தவிதமான இடையூறுகளும் இன்றி நடைபெறுகின்றன.
அவற்றை தொடர்ந்து கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் நோயாளிகளைப் பார்வையிடுவது தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுகின்றன – என்றார்.