செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல்: முக்கிய தகவல்கள்!

இலங்கையில் இன்று (05) நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

இத் தேர்தலானது நாட்டிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறுகின்றது.

இதன்படி, இலங்கை முழுவதும் 160 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 12 ஆயிரத்து 984 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் நடைபெறவுள்ளன .

இத்தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

குறித்த வேட்பாளர்களில் 196 பேர் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படுவார்கள். 26 பேர் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவாவர்.

இத்தேர்தல் மூலம் கொழும்பு மாவட்டத்தில் 19 பேர் தெரிவுசெய்யப்படுவர். இங்கு 17 இலட்சத்து 9 ஆயிரத்து 209 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதேபோல கம்பஹா மாவட்டத்தில் 18 பேர் தெரிவுசெய்யப்படுவர். இங்கு வாக்களிப்பதற்கு 17 இலட்சத்து 85 ஆயிரத்து 964 பேர் தகுதிபெற்றுள்ளனர்.

வடக்கைப் பொறுத்தவரையில், யாழ். தேர்தல் மாவட்டத்தில் 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இங்கு 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தை பொறுத்தவரையில் ஆறு பேர் தெரிவு செய்யப்படுவர். இங்கு வாக்களிக்க 2 லட்சத்து 87 ஆயிரத்து 24 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பேர் தெரிவுசெய்யப்படுவர். இங்கு 4 லட்சத்து ஒன்பதாயிரத்து 808 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 7 பேர் தெரிவு செய்ய ப்படவுள்ளனர். இங்கு 5 லட்சத்து 13 ஆயிரத்து 979 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அதேபோல திருவண்ணாமலை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நான்கு பேர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவர். இங்கு 2 லட்சத்து 88 ஆயிரத்து 868 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

இன்று நடைபெறும் தேர்தலானது கடும் சுகாதார மற்றும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைக்குள் கஞ்சா வீசியவர் கைது!

G. Pragas

கொழும்பில் இன்றும் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!

G. Pragas

தமிழர்களின் அமைதியை குலைக்கும் கேள்விக்கு நேர்மையான பதிலையே சுமந்திரன் கூறினார்

G. Pragas