செய்திகள் பிந்திய செய்திகள்

நாட்டை அச்சுறுத்தும் இனவாத அமைப்புக்கள் ஒழிக்கப்படும் – பிரதமர்

நாட்டிற்கு அச்சுறுத்தலாக காணப்படும் இனவாத அமைப்புக்கள் முற்றாக ஒழிக்கப்படுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒப்பந்தமொன்று கொழும்பில் நேற்று (01) கைச்சாத்திடப்பட்டது.

குறித்த நிகழ்வில் பங்குகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

5 வருடங்கள் கடந்துள்ள நிலையில் சுதந்திர சமூகம் ஒன்றை நாம் ஏற்படுத்தியுள்ளோம். சட்டத்திற்கு புறம்பாக பொலிஸ் நிலையத்திற்கு எவரையும் கொண்டுச் செல்ல முடியாத நிலையை உருவாக்கியுள்ளோம். எமது ஆட்சியில் எந்த ஊடகவியலாளர்களும் காணாமல் போகவில்லை. அத்துடன் அவர்கள், எந்நேரமும் என்னை திட்டிவிட்டு பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிளின் ஊடாக வீடுகளுக்கு சென்று மீண்டும் அடுத்தநாள் வந்து திருப்பவும் திட்டுகின்றனர்.

அத்தகையதொரு சுதந்திரத்தை நாம் வழங்கியுள்ளோம். இந்த சுதந்திரமான சமூகத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். தற்போது அதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர சமூகம் ஒன்று தேவையில்லை என சிலர் தெரிவிக்கின்றனர்.

எனவே இதனை பாதுகாக்கவே இந்த புதிய ஜனநாயக தேசிய முன்னணியை ஆரம்பித்துள்ளோம். அத்துடன் எமது ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயம் ஜனநாயகத்தை பாதுகாப்பார். ஆகவே அவருக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும்.

இதேவேளை நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நிகழ்ந்து 3 மாதங்கள் நிறைவடைவதற்கு முன்னரே பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தோம். அத்துடன் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்வந்த அனைவருக்கும் அதற்கான அதிகாரத்தை வழங்கினோம்.

சிங்கள, தமிழ் என பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் ஏற்றவகையிலே வேலைத்திட்டங்களும் எம்மால் முன்னெடுக்கப்படும். எனவே மீண்டும் அதற்கான வாய்ப்பை மக்கள் வழங்க வேண்டும் – என்றார்.

Related posts

கொரோனா வைரஸால் இதுவரை 216 பேர் பலி!

G. Pragas

சாவகச்சேரியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

G. Pragas

தேசிய மட்டப் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவன் முதலிடம்

G. Pragas