செய்திகள் பிந்திய செய்திகள்

நினைவேந்தல்களை தடுக்க அரசு இரகசிய சதி – புவனேஸ்

சர்வதேசத்திற்கு உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்கு சுதந்திரம் வழங்கியுள்ளதாக கூறும் அரசு மறைமுகமாக இவற்றை தடுக்க திரைமறைவில் சதி முயற்சிகளில் ஈடுபடுகிறது என்று முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டி ஐயா புவனேஸ்வரன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் புவனேஸ்வரன், நேற்று முன் தினம் (24) விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும்,

தமிழ் மக்களின் வாழ்வில் மறக்க முடியாத வலிகளை தந்த முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போதும் கடந்த கால யுத்த சூழ்நிலைகளின் போதும் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைவு கூறுவதற்காக வருடா வருடம் மக்கள் முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளையும் யுத்தத்தில் இறந்த தங்களுடைய பிள்ளைகளை நினைவு கூறுவதற்காக கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்தினையும் கொண்டாடுகின்றனர்

இவ்வாறான நினைவு நாட்களை கொண்டாடுவதற்கு மக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கியுள்ளதாக சர்வதேசத்திற்கு இந்த அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் திரைமறைவில் இவற்றை நிறுத்துவதற்கு சதி செய்கின்றதா என்ற சந்தேகம் தற்போது ஏற்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு தன்னை எந்ததொரு காரணமும் இல்லாமல் அழைத்திருப்பது அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர், சுமார் மூன்றரை மணி நேரம் என்னிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். இதன்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பாகவும் வினவினர்.

அதாவது, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனிடம் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைவாகவும் கடந்த மே மாதம் 12ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கப்பலடி பகுதியில் இடம்பெற்ற தமிழின படுகொலை நினைவு வாரத்தின் ஆரம்ப நாள் நிகழ்வுகள் தொடர்பாக குறித்த ஊடகவியலாளர் வெளியிட்ட செய்திகளை மேற்கோள்காட்டியுமே என்னிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த பகுதி தற்போது இராணுவத்தினரால் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்ப நிகழ்வுகளில் மேற்கொண்ட அந்த கப்பலடிப்பகுதிக்கு தற்போது மக்கள் செல்வதற்கு, வீதியோரத்தில் இருக்கின்ற இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்தி இருக்கின்றனர். இவ்வாறு தடைகளை ஏற்படுத்துவது நிகழ்வுகளை செய்பவர்களை மறைமுகமாக அழைத்து, பயங்கரவாத தடுப்பு பிரிவின் விசாரணைகள் என்ற போர்வையில் அவர்களை அச்சுறுத்தி இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் குறித்த நிகழ்வுகளில் பங்குபற்றியவர்களை இவ்வாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணைக்கு அழைப்பதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது – என்றார்.

Related posts

தமிழ் மொழித்தின போட்டியில் அருணோதயக் கல்லூரிக்கு இரண்டு தங்கம்

G. Pragas

எம்மை விமர்சிப்பதை கண்டிக்கிறோம் – த.ம.வ.புலிகள் கட்சி

G. Pragas

நான் அரசியல்வாதியாக வேண்டும் எனத் தேர்தலில் போட்டியிடவில்லை

G. Pragas

Leave a Comment