in

நிலம் விழுங்கும் புத்தர் |19.01.2021| செவ்வாய்க்கிழமை |

ஆசிரியர் தலையங்கம்

புத்தரின் பெயரால் மீண்டும் ஒருமுறை தமிழர்களின் பூர்வீக நிலத்தை விழுங்கும் படலம் தொடங்கியுள்ளது. மிக நீண்டகாலமாகவே கண்வைத்திருந்த குமுளமுனை தண்ணிமுறிப்பு – குருந்தூர் மலையில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டபடி நேற்று புத்தரின் சிலையை பிரதிஷ்டை செய்துவிட்டது.

‘புத்தர் வருவார் முன்னே, நிலம் விழுங்கிகள் வருவர் பின்னே’ என்பது இலங்கையில் காலம்காலமாக இடம்பெற்றுவரும் ஒன்றுதான். இப்போதும் அதே பழைய உத்தியோடு குருந்தூர் மலையைக் கொள்ளை கொள்வதற்கு அகலத்திறந்த வாயோடும் படைப்பிரசன்னத்தோடும் பேரினவாதம் கால் வைத்திருக்கின்றது.

வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப்போல காணிபிடிக்கும் சிங்களப் பேரினவாதத்துக்கு வாய்த்திருக்கிறது தொல்லியல் திணைக்களம். இந்தத் திணைக்களம்தான் தொன்மையான தமிழர் பகுதிகளிலெல்லாம் விகாரையின் எச்சங்களும் பௌத்தத்தின் மிச்சங்களும் புதைந்து கிடப்பதாக ஒரு புனைவை முதலில் ஏற்படுத்தும். பின்னர் அதனை ஊதிப்பெருப்பிக்கும்.

காலப்போக்கில் யாருமறியா வண்ணம் வர்த்தமானியில் புகுத்திவிடும். அதன் பின்னர் குறித்த இடத்தில் அந்த மண்ணின் மைந்தர்களே உட்புக முடியாத அளவுக்கு ‘இது தொல்லியல் திணைக்களத்துக்குச் சொந்தமான இடம்’ என்ற அறிவிப்புப் பலகையின் மூலம் சுற்றிவர அடைத்துவிடும்.

இந்த அடைப்புக்குள் என்னென்ன திருகுதாளங்கள் எல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் கச்சிதமாகச் செய்து அந்த இடம் பௌத்த பேரினவாதத்துக்கு மட்டுமே சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை உருவாக்கிவிடும். பின்னர் ஒப்புக்காக ஒரு பகிரங்க ஆய்வு நடப்பதாக காட்டப்படும்.

ஏற்கனவே சோடிக்கப்பட்ட தடயங்களை கண்டுபிடிப்பதாகக் காட்டி தங்களின் செயலுக்கு நியாயம்வேறு கற்பிப்பார்கள். அந்த நிலத்துக்கு பல நூற்றாண்டுகளாக இருந்த பெயர் நீக்கப்பட்டு வாய்க்குள் நுழையாத சிங்களப் பெயரொன்று வைக்கப்பட்டு அது முற்றுமுழுதாக தமிழர்களிடம் இருந்து பிடுங்கப்படும்.

இத்தகைய சூத்திரத்தின் படிமுறை ஒன்றுகூடத் தவறாமல் குருந்தூர்மலையில் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றது. அங்கிருந்த ஆதிசிவன் ஐயனார் புத்தர் வருவதற்காக அகற்றப்பட்டிருக்கின்றார்.

தமிழர்களின் எந்தவொரு அடையாளமும் அங்கு இருக்கவேகூடாது என்பதில் இலங்கை அரசு கொண்டுள்ள அக்கறை ஆதிசிவன் ஐயனார் ஆலயம் உடைத்து அழிக்கப்பட்டதில் இருந்து அறியமுடிகின்றது. இனி மெல்லமெல்ல குருந்தூர்மலை சிங்களத்தின் ஏகபோக நிலமாகிவிடும்.

ஏற்கனவே நெடுங்கேணி வெடுக்குநாறி மலையையும் இதேபோன்ற படிமுறையோடு தங்கள் வசமாக்க சிங்களப் பேரினவாதம் முனைந்து கொண்டிருக்கின்றது. இப்படியே தமிழர்களின் தொன்மையையும் இருப்பையும் அடையாளப்படுத்துகின்ற நிலங்கள் எல்லாவற்றையும் புத்தரின் பெயராலும் தொல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையோடும் ஆட்சியாளர்கள் ஆக்கிரமிப்பதை இனியும் பார்த்துக்கொண்டு இருக்கத்தான் போகின்றோமா?.

எப்படி முள்ளிவாய்க்கால் தூபி உடைப்புக்கு மாணவர்கள் துணிச்சலோடு போராடி மீண்டும் தூபியை அமைக்க வைத்தார்களோ அதேபோன்ற ஓர்மத்தோடு ஜனநாயக ரீதியான நிலமீட்புப் போர்கள் தொடங்கப்பட வேண்டும்.

தனித்தனியே கட்சிச் சாயத்தோடு முன்னெடுக்காமல் தமிழ்ச் சமூகத்தின் ஒட்டுமொத்த ஆதரவோடும் அனைத்துக் கட்சிகளினதும் அமைப்புக்களினதும் ஒன்றுபடுதலோடும் இந்த ஜனநாயகப் போர் பரவலடைந்து அதன் உக்கிரம் தாங்காமல் புத்தரின் பெயர்சொல்லி மண்விழுங்கும் பதர்கள் பதறியோட வேண்டும்.

அத்தகைய மண்மீட்புப் போராட்டங்களை முன்னெடுக்க இனியும் தவறுவோமானால் நாளை எங்கள் காணிகளுக்குள்ளும் புத்தர் சிலைகள் புதிதாக முளைக்கலாம்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காய் சர்வமத தலைவர்கள் மனு!

வடக்கில் இன்று 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!