கட்டுரைகள்சஞ்சீவி - IPaperசிறப்புக் கட்டுரைசெய்திகள்வவுனியா

பசி தீர்த்த குளம் பலி எடுத்தது!!! – (உண்மைக் கதை)

19.12.2020

அன்று சனிக்கிழமை. மாலை நான்கு மணிஇருக்கும். மாடுகளின் தொல்லையில் இருந்து தனது நெற்காணியை பாதுகாப்பதற்காக தனது நண்பருடன் இணைந்து வேலியை அடைத்துவிட்டு, மதிய உணவுக்காக நெல்லுப்புலவு எனும் கிராமத்தில் அமைந்துள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டார் ரசீந்திரன்.

ரசீந்திரனுக்கு பூர்வீகம் மட்டுவில். ஆனாலும் அவர் பிறந்தது வளர்ந்தது எல்லாம் வவுனிக்குளத்தை அண்டியுள்ள நெல்லுப்புலவில் தான்.விவசாயத்துடன்,சொந்தமாக ஒரு வாகனத்தினையும் கொள்வனவு செய்து பல்வேறு தொழில்களிலும் ரசீந்திரன் ஈடுபட்டிருந்தார்.இரண்டு பிள்ளைகள். மனைவி பிரதேசசபை ஊழியர். இதனால் வேலையோடு, பிள்ளைகளையும் பகலில் பராமரிக்கும் பொறுப்பும் ரசீந்திரனுடையதே.

வீட்டுக்கு வந்து உணவருந்திவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்த ரசீந்திரனை,13 வயதான மகன் பிரவீனின் குரல் ஈர்த்தது.

” அப்பா, வவுனிக்குளம் வான் பாயுதாம். எல்லாரும் போய்ப் பார்க்கினம். நாங்களும் போய்ப் பாப்பமோ?” என்று ஆசையாகக் கேட்டான். நெல்லுபுலவில் இருந்து வவுனிக்குளம் வெறும் 500 மீற்றர் தூரம் தான். வீட்டிலிருந்து பார்க்கவே குளக்கட்டு தெரியும். தங்களுக்கு தண்ணீர் சுரக்கும் தாயான, வவுனிக்குளம் நிரம்பி பூரிப்போடு இருப்பதை ஒவ்வொரு வருடமும் பார்த்து மகிழ்வதென்பது ஊரவர்களுக்கு ஒரு திருவிழாவைப் போல. இந்த வருடமும் ஊரவர் எல்லோரும் போய், வவுனிக்குள அழகை ரசிக்கத் தொடங்கியிருந்த நிலையிலேயே ரசீந்திரனின் மகன் பிரவீனும் அதைப் பார்க்கும் ஆசையை தந்தையிடம் வெளிப்படுத்தியிருந்தான்.
மனைவியையும் வரும்படி அழைத்தார் ரசீந்திரன்.
” வீட்டில கொஞ்சம் வேலை இருக்கப்பா. நீங்கள் பிள்ளையளைக் கூட்டிக் கொண்டுபோய்க் காட்டிக் கொண்டு வாங்கோ”
மனைவி சொன்னதும்,
“சரி அப்ப இவைக்கு குளத்தைக் காட்டிபோட்டு, அப்பிடியே போய் வயலுக்கும் பசளை எறிஞ்சிட்டு வாறன்” என்று பிள்ளைகளான பிரவீன், சானுயா இருவரையும் தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட முற்பட்டவரை இன்னொரு குரல் தடுத்தது.
” எங்க குளத்துக்கோ போறீங்கள், நானும் வரட்டோ?”
அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன், சஞ்சீவன். பிரவீனின் வயதுக்கார பெடியன், பக்கத்துவீடு மட்டுமல்ல, இவர்களுக்குச் சொந்தமும் கூட.
” சரி வந்து ஏறு”
அவனையும் ஏற்றிக்கொண்டு ரசீந்திரன் , சானூஜாவை மடியில் இருந்தி வைத்தபடி வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார். வாகனத்தின் பின்பக்கத்தில் பிரவீனும், சஞ்சீவனும்.
மாலை 4.30 .
முழுதுமாக நிரம்பி, தண்ணீர் முட்டிமோதிக் கொண்டிருந்த வவுனிக்குள அணைக்கட்டு வழியாக விரைந்து கொண்டிருந்தது ரசீந்திரனின் வாகனம். இன்னும் கொஞ்சத் தூரம் தான். சுருங்கை வந்துவிடும். சுருங்கை வழியே சீறிக்கொண்டு நுரை தள்ளியபடி பாய்ந்தோடும் நீரை தானும் பார்த்து, பிள்ளைகளுக்கும் காட்டிவிட்டால் ரசீந்திரன் வந்தவேலை முடிந்துவிடும். ஆனால், அதற்குள் சீராகச் சென்ற வாகனம்,
திடீரென ஓரிடத்தில் வெட்டித் திரும்ப=

‘சடார்!!’
வவுனிக்குளக் கட்டில் அந்த வாகனம் கவிழ்ந்து, அப்படியே குளத்துக்குள் வீழ்ந்தது. வாகனம் விழுந்த வேகத்தில் வெளியே தூக்கி எறியப்பட்ட , பிரவீன் குளத்து நீரில் ‘தொப்’பென வீழ்ந்து, மூழ்கி பின் நீருக்கு மேலே வந்தான்.
வந்தவனுக்கு என்ன நிகழ்கின்றதெனப் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆபத்து என்பது மட்டுமே மூளையில் உறைக்க, அப்படியே வேகமாக நீந்திக் கரை சேர்ந்தான்.
கரையிலே எவருமில்லை. தந்தையையும், தங்கையையும், சஞ்சீவனையும் காணவில்லை. பயம் வந்தது.
” அப்பா!”
பெருங்குரலெடுத்து அழுதபடி கத்தத் தொடங்கினான். சற்றுத் தூரத்தேதங்கள் வாகனம் மூழ்கிய இடத்தை வெறித்துப் பார்த்தபடி குளிரிலும், பயத்திலும் நடுங்கியபடி அழுதுகொண்டிருந்தான். வாகனத்துக்குள்தானே அப்பாவும், தங்கச்சியும், சஞ்சீவனும்?
” அப்பா …அப்பா…”
தந்தையைக் காணமல் அழுத சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்ட வந்த எந்தக் கடவுளரும், அன்றைக்கு பிரவீனின் தந்தையையோ, தங்கையையோ,சஞ்சீவனையோ காப்பாற்ற வரவேயில்லை.
அழுது கொண்டிருந்த பிரவீனின் முகத்தில் திடீரென ஒரு நம்பிக்கை ஒளி.
குளத்து நீரில் ஏதோ அசுமாத்தம். தண்ணீருக்கு மேலே சானுஜாவையும் ஒரு கையில் தூக்கிக் கொண்டு ரசீந்திரன் தெரிந்தார். கூடவே சஞ்சீவனும்.
” அப்பாடா, அவர்களுக்கு ஏதுமில்லை” என பிரவீன் ஆறுதலடைவதற்குள், அடுத்த நொடியே மூவரும் மீண்டும் நீருக்குள் மாயமானார்கள். இவன் இன்னும் அழத்தொடங்கினான்.
அதற்குள், வாகனம் வீழ்ந்ததைக் கண்ட இருவர் ஓடி வந்தனர். வந்தவர்களுக்கு நீந்தத் தெரியாது. கரையில் நின்று கூப்பாடு போடுவதால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை என்பதால், சுருங்கைப் பகுதிக்கு ஓடிப்போய் விடயத்தைச் சொன்னார்கள். அங்கிருந்த நீச்சல் தெரிந்த இளைஞர்கள் ஓடி வந்து, குளத்துக்குள் பாய்ந்து தேடத் தொடங்கினார்கள்.
எவ்வளவு தேடிய போதும், எவரும் அகப்படவில்லை. நீரோட்டம் வேறு அதிவேகமாக இருந்தது. இருட்டவும் தொடங்கிவிட்டது. செய்தியறிந்து குளக்கட்டில் சனங்கள் கூடி விட்டார்கள். மல்லாவிப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அவர்களும் இராணுவத்தினரை உதவிக்கு அழைத்துக் கொண்டு வந்தார்கள்.

குளத்துக்குள் நீந்தித் தேடிக் கொண்டிருந்த இளைஞர்கள் சிறிது நேரத்தின் பின்னர் நீருக்குள் மூழ்கியிருந்த வாகனத்தைக் கண்டுபிடித்தனர். அதனை மீட்பதற்கான முயற்சிகள் தொடங்கின.
குளத்தின் அருகே ஒரு சிவன் கோயிலுண்டு. அங்குள்ள தேர் வடத்தைக் கொண்டுவந்து, வாகனத்தில் கட்டி, இழுக்கத் தொடங்கினர். சிலநிமிடப் போராட்டத்தின் பின்னர் வாகனம் நீருக்கு மேல் வந்தது.அப்படியே கரைக்கு கொண்டு வரப்பட்ட அந்த வாகனத்தினுள் எவரும் இருக்கவில்லை. முன்பக்கக் கண்ணாடி உடைந்திருந்தது.

மீண்டும் நீருக்குள் இளைஞர்கள் தேடத் தொடங்கினர். அப்போது சஞ்சீவன் அவர்கள் கைகளில் கிடைத்தான். பேச்சு மூச்சில்லை. அவன் மீட்கப்பட்டதுமே , தயாராக நின்ற அம்புலன்ஸில் ஏற்றப்பட்டு, மாங்குளம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டான். ஆனால் நீருக்குள் மூழ்கிய சஞ்சீவன் உயிரிழந்து சில மணித்தியாலங்கள் ஆகிவிட்டன என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தார்கள்.
மறுபுறம், குளத்தில் மாலை 4.45 மணியளவில் தொடங்கிய தேடல், இரவு 10 மணியாகியும் இன்னும் முற்றுப்பெறவில்லை. எஞ்சிய இருவரின் கதியும் தெரியவில்லை. இதனால் கடற்படையின் விசேட சுழியோடும் அணியினர் அங்கு வந்திறங்கினர். குளத்தில் இறங்கிய கடற்படைச் சுழியோடிகள், அதிகாலை 1 மணியளவில் முதலில் சானுஜாவின் உடலையும், பின்னர் ரசீந்தீரனின் உடலையும் மீட்டனர். சடலங்கள் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

……………………..

எல்லாளன் கட்டிய குளம்
………..

முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகப்பெரியகுளங்களில் வவுனிக்குளமும் ஒன்று.அனுராதபுரத்தை இராசதானியாகக் கொண்டு ஆட்சிசெய்த எல்லாள மன்னனால் இது கட்டமைக்கப்பட்டதாக வரலாற்றுகுறிப்புக்கள் உள்ளன.பிந்தியகாலப்பகுதியில் பல்வேறுதிட்டங்களின் மூலம் அது திருத்தியமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தைகிழக்கு பிரதேசசெயலாளர் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளத்தின்தற்போதைய நீர்தேங்கும் உயரம் 26 அடி. இதன் கீழ் அமையப்பெற்ற 15 க்கும் மேற்பட்ட விவசாயக்கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக இருக்கின்றது . பலநூறு ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்தக்குளம் நூற்றுக்கணக்கான குடும்பங்களின் பசி போக்கும் அமுதசுரபி. அப்படி வாழ்வளிக்கும் இந்தக் குளம் தான் இப்போது ஒரேசமயத்தில் மூன்று உயிர்களைப் பலியெடுத்திருக்கிறது.

………………………

விதியின் சதி
……..

“என்ர அவர் ( ரசீந்திரன்) நல்லா நீந்துவார். வாகனம் ஓடுறதிலும் நல்ல அனுபவம் இருக்கு. அதோட வவுனிக்குளக்கட்டில் போறது அவருக்கு இது புதிசில்லை. ஆனால் ஏன் இப்பிடி நடந்ததெண்டு எங்களுக்கு தெரியாமல் இருக்கு. பிரவீன் வாய்க்கால்ல நீந்திப் பழகினபடியால் பிள்ளை தப்பிட்டான்.
வாகனக் கண்ணாடி உடைஞ்சு கிடந்தது, இவருக்கும்( ரசீந்திரனுக்கும்) முகத்திலையும், காலிலையும் காயம். இவர் வாகனக் கண்ணாடியை உடைச்சுக் கொண்டு , பிள்ளையையும் தூக்கிக் கொண்டு வெளியில் வந்திருக்க வேணும். அதுக்கு பிறகு ஏன் அவர் கரைக்கு வர ஏலாமப் போச்செண்டு தெரியேலை. எல்லாம் எங்கட விதி”
என்று கணவரையும், மகளையும் பறிகொடுத்த பெருந்துயரை வார்த்தைகள் வழியே அழுகையோடு கொட்டித் தீர்க்கிறார் ரசீந்திரனின் மனைவி.
……………………..

அவன் போனது தெரியாது
………

” எனக்கு 5 பிள்ளையள். என்ர அவர்( கணவர்)8 வருசத்துக்கு முந்தி பிரிஞ்சிச்சிட்டார். நான் தான் இவைக்கு எல்லாம்.
சஞ்சீவன் மூண்டாவது பிள்ளை.அவன் 13 வயசுப் பிள்ளை எண்டாலும் குடும்பக் கஷ்டம் அறிஞ்சவன். வளர்ந்து வந்து எங்கட குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டுவருவான் எண்டு நம்பியிருந்தன்.
அண்டைக்கு ‘மாமாவோட குளத்துக்கு போகட்டோ?’ எண்டு வந்து கேட்டான். நான் அப்பதான் மல்லாவிக்கு போக வெளிக்கிட்டுக் கொண்டிருந்தன். அதால் ‘ நன் மல்லாவிக்கு போகேக்க உன்னையும் கூட்டிக் கொண்டு போறன்’ எண்டன். அதோட அந்தக் கதையை விட்டிட்டன். அவன் நான் வெளிக்கிட்டுக் கொண்டிருக்க, அவையோட வாகனத்தில ஏறிப்போட்டான். எனக்கு அவன் போனது தெரியாது.
கொஞ்சத்தில ஒராள் வந்து, ‘குளத்தடியில ஏதோ வாகனம் பழுதாம் ‘எண்டு சொன்னா. ‘அதுக்கு நாங்கள் தள்ளி ஸ்ராட் பண்ணி விடவேணுமோ?’ எண்டு நக்கலாக் கேட்டுக்கொண்டு, வாகனத்தைப் பாக்க மற்றவையோட சேர்ந்து நானும் போனன். அங்க போன பிறகுதான் என்ர பிள்ளை போன வாகனம் தான் குளத்துக்க தாண்டிட்டு எண்டு தெரிஞ்சுது.
என்ர பிள்ளையைக் கண்டுபிடிச்சவுடன் அவன்ர உடம்பில அசைவு இருக்கெண்டு ஆக்கள் சொல்லிச்சினம்.
உடனே மாங்குளம் கொஸ்பிட்டலுக்கு ஓடினன். அங்க…என்ர பிள்ளை செத்திட்டான் எண்டு சொல்லி, உடம்பை மூடி வைச்சிருந்தினம்.எனக்கு உலகமே இடிஞ்ச மாதிரி போட்டுது”

இது சஞ்சீவனின் தாயின் குமுறல்.

……………..

எப்படி நிகழ்ந்தது ?
…….

வீதியில் சிறிய குழி இருந்ததாகவும் அதற்குள் வாகனத்தை இறக்காமல் திரும்பமுற்பட்டபோதே விபத்து இடம்பெற்றதாகவும் கரைசேர்ந்த அவரது மகன் பிரவீன் சாட்சியமளித்திருந்தான். விபத்து இடம்பெற்ற பகுதியில் பெரியளவிலான குழிகளோ, பள்ளங்களோ இருக்கவில்லை.எனினும் அந்த நேரம் மழைபெய்துகொண்டிருந்தமையால் மழைநீர் அணைக்கட்டின் ஒருபகுதியில் தேங்கியிருந்திருக்கலாம் அதனை குழி என்று ரசீந்திரன் நினைத்து வாகனத்தை திருப்பமுற்பட்டபோது விபத்து இடம்பெற்றிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதேவேளை மூன்று வயதான மகள் சானூஜா மடியில் அமர்ந்திருந்தமையால் வாகனத்தைச் செலுத்தும் போது அவரால் அதனை கட்டுப்படுத்தமுடியாமல் போயிருக்கலாம்,அல்லது கிராமவாசிகள் தெரிவிப்பது போல வாகனத்தின் முன்பக்கச் சக்கரத்தின் காற்று குறைந்திருந்தமையால் கட்டுப்பாட்டைஇழந்து நீருக்குள் மூழ்கியிருக்கலாம். இதேவேளை வாகனம் வேகமாக சென்றமையாலேயே குளத்தில் மூழ்கியதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார். ஆனால் எதையும் உறுதி செய்ய முடியவில்லை. சிலவேளை இந்த நான்கு காரணிகளும் ஒன்று சேர்ந்தும் அந்த விபத்தை உண்டாக்கியிருக்கலாம்.

………………

வாடிக்கையான பலி எடுப்பு
………..

வவுனிக்குளத்தில் சிலவருடங்களுக்கொருமுறை இப்படியான பலியெடுப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக கிராமமக்கள் தெரிவிக்கின்றனர். அநேகமாக குளம் தனது முழுகொள்ளளவை எட்டியிருக்கும் போது ஏதாவது ஒரு துர்ச்சம்பவம் தொடர்ந்து இடம்பெற்றுவந்துள்ளது.
சில வருடங்களுக்கு முன்னரும் கூட ஆலயத்திருவிழாவுக்காக வருகைதந்த ஒரேகுடும்பத்தை சேர்ந்தஇருவர் உட்பட மூன்று பேர் கலிங்குப் பகுதியில் இழுத்துச்செல்லப்பட்டு சாவடைந்திருந்தனர். அந்தசம்பவம் இடம்பெற்று பலவருடங்களின் பின்னர் மீண்டும் மூன்று உயிர்களை வவுனிக்குளம் காவு வாங்கியிருக்கிறது.
…………….

அலட்சியமும் அவசரமும்
…………….

வவுனிக்குளம் நீர்பாசனப்பொறியியலாளர் பிரிவினால் பராமரிக்கபட்டுவருகின்றது.பொதுவாக குளங்களின் அணைக்கட்டு வழியாக எந்தவிதமான வாகனங்களும் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. எனினும் வன்னிப் பகுதியைப் பொறுத்தவரை, அநேமான குளங்களின் அணைக்கட்டுவழியாகவே பொதுமக்கள் வாகனங்களில் பயணித்துவருகின்றனர்.

“கிராமங்களுக்கு செல்வதற்கான மாற்றுப்பாதைகள் முற்றாக இல்லாவிடில் அணைக்கட்டின் தன்மைக்கேற்ப வாகனப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுவருகின்றது” என வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தின் உயர்அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார். வவுனிக்குளத்தின் அணைக்கட்டுவழியாக கனரக வாகனங்களான டிப்பர்,பேருந்துகள் கூட பயணம்செய்துவந்துள்ளன.அந்த குளத்தின் அணைக்கட்டு நிலமட்டத்தில் இருந்து 36 அடி உயரத்தில் செங்குத்தாக இருக்கின்றது. குறித்தஅணைக்கட்டுவழியாகவே செல்வபுரம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், கரும்புள்ளியான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயணித்து வருகின்றனர்.ஆனால் இந்தக் கிராமங்களுக்கு செல்வதற்கு வேறு மாற்றுபாதைகள் இருக்கின்றன. எனினும் அணைக்கட்டின் ஊடாகச் செல்வது அவர்களின் தூரத்தையும், நேரத்தையும் குறைப்பதால்,இதனையே பிரதான பாதையாக மாற்றிவிட்டனர்.
இந்த விபத்துக்கு பின்னர் நீர்ப்பாசன திணைக்களத்தால் அணைக்கட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்துப் பாதைகளுக்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அனுமதியின்றிச்செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தல் பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இருசக்கரவாகனங்கள் மட்டுமேஅனுமதிக்கப்படுகின்றன.இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையை முன்னரே எடுத்திருக்க வேண்டும். அல்லது அணைக்கட்டில் உரியபாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியிருக்கலாம்.

மூவரின் இறப்புக்குப் பின்னர்தான்அந்த வீதியை தடைசெய்யமுடியுமானால் அதனை முன்னரே செய்திருக்கலாமே. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள நடைமுறையும் எத்தனை நாளைக்கு கடைப்பிடிக்கப்படும் என்பதும் கேள்விக்குறியே.திணைக்களத்தின் அசண்டையீனமும் இந்த விபத்துக்கு ஒரு காரணமே .மறுபுறம் பொதுமக்களும் சிலவிடயங்களில் கவனத்துடன் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ளவேண்டிய தேவை இருக்கின்றது.அதன்மூலமே இவ்வாறான அவலங்களைத் தவிர்க்கமுடியும்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,266