செய்திகள் பிரதான செய்தி

பயங்கரவாதத்துக்கு பொறுப்புகூற வேண்டியவர் அரசுடன் – நளின்

ஷஹ்ரானின் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்புக்கூறவேண்டிய பிரதான நபரும், மத்திய வங்கி பிணைமுறி ஊழலுக்கு பொறுப்புக்கூறவேண்டிய முக்கிய நபர்களும் இன்று அரசாங்கத்துடன் உள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

‘குற்றவாளிகளை தண்டிக்க ஜனாதிபதி பல வேலைத்திட்டங்களை உருவாக்கி வருகின்றார். செயலணிகள் உருவாக்கப்படுகின்றது. பாதுகாப்பு அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படுகின்றது. ஆனால் கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதலை நடத்திய குற்றவாளிகளை இயக்கிய நபர்கள் மற்றும் அதற்கு பொறுப்பு கூறவேண்டிய நபர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை.

ஈஸ்டர் தினத்தில் ஷஹ்ரானின் மூலமாக நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டிய பிரதான நபர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவேயாகும். பாதுகாப்பு அமைச்சு அவரின் கீழ் செயற்பட்டது. இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக பல எச்சரிக்கைகள் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்பட்டும் அவை கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனவே முதல் பொறுப்பாளி முப்படைகளின் பிரதானியும், பாதுகாப்பு அமைச்சருமான அவரேயாகும்.

அதுமட்டும் அல்ல மத்திய வங்கி பிணைமுறி ஊழலில் பொறுப்பு கூறவேண்டிய நபர்களும் இன்று ராஜபக்ஷக்களுடன் “டீல்” அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களையும் தண்டிக்க வேண்டும். வெறுமனே அர்ஜுன மகேந்திரனை தேடிக்கொண்டு ஏனையவர்களை விட்டுவிட அரசாங்கம் முயற்சிக்கின்றது.

ஆனால் அப்போதும் அதிகாரத்தில் இருந்தவர்கள் பொறுப்புக்கூறியாக வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் இன்று அரசாங்கத்துடன் ஏதோ ஒருவிதத்தில் ஒட்டிக்கொண்டு உள்ளவர்கள். அவர்களை காப்பாற்றவே அரசாங்கமும் முயற்சிக்கின்றது.

குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும், மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும், நாட்டினை நாசமாக்கிய நபர்கள் தப்பிக்கக்கூடாது என அரசாங்கம் கூறுவது உண்மையென்றால் முதலில் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் இன்றுவரை அவ்வாறு எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

பெற்றோல் விலை உலக சந்தையில் மிகக் குறைவாக கிடைக்கின்ற போதிலும் இங்கு அதிக விலையில் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே இதுதான் ராஜபக் ஷக்களின் ஆட்சி முறைமை என்பதை மீண்டும் நிருபித்துவிட்டனர்.’ என்றார்.

Related posts

பொங்கல் பானை தமிழ் மக்கள் கூட்டணியின் சின்னம் – விக்கி

G. Pragas

அரிசியை பதுக்கி வைக்கினால் நடவடிக்கை!

Tharani

வடக்கின் பெரும் போரில் சென் ஜோன்ஸ் வலுவான நிலையில்

கதிர்