கட்டுரைகள்சிறப்புக் கட்டுரை

பறிபோகின்றதா கச்சதீவு?

அண்மையில் இலங்கை வந்திருந்த பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத்தலைவர் அண்ணாமலை இந்தியா திரும்பியதும் ’கச்சதீவை இந்தியா திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும் ’என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார். அண்ணாமலையின் கூற்றுக்கு வடபகுதி மீனவர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். இந்த நிலையில் கடந்தவாரம் இந்தியப் பிரதமர் மோடி தமிழகத்துக்குச் சென்ற சமயம், அவருக்கு முன்னால் உரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டானினும் ‘கச்சதிவை திரும்பப் பெற இதுவே தக்க தருணம்’ என்று மொழிந்துள்ளார்.

கச்சதீவு இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் ஒரு தீவு . அதாவது தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையேயான எல்லையாக கச்சதீவு அமைந்துள்ளது . நெடுந்தீவிலிருந்தும் இராமேஸ்வரத்தில் இருந்தும் சம தூரத்தில் கச்சதீவு அமைந்துள்ளது.

மனித சஞ்சாரமற்ற இந்தத்தீவில் இலங்கை-இந்திய மீனவர்கள் காலாதிகாலமாக தங்கி நின்று மீன் பிடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இங்கு அமைந்துள்ள அந்தோனியார் தேவாலயத்தில் வருடத்தில் ஒரு முறை நடைபெறும் உற்சவத்துக்கு தமிழ் நாட்டிலிருந்தும் வடபகுதியிலிருந்தும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்று கூடி பண்டமாற்றில் ஈடுபட்டும் வந்துள்ளனர். வருடா வருடம் நடைபெறும் அந்தோனியார் உற்சவத்தையம் மீன் பிடிக்கச்செல்லும் இரு நாட்டு மீனவர்களையும் தவிர கச்சத்தீவில் வருடம் முழுவதும் எவரையும் காண முடியாது.

1974 ஆம் ஆண்டு கச்சதீவு யாருக்குச்சொந்தம் என்ற சர்ச்சை எழுந்ததது. அப்போதைய பாரதப்பிரதமர் இந்திரா காந்தி குடும்பத்துக்கும் , இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா குடும்பத்துக்குமிடையே மிக நெருக்கமான உறவு இருந்தது. இந்த உறவுநிலை காரணமாக, கச்சதீவை அப்போது இலங்கையில் பிரதமராக பதவி வகித்த சிறிமாவோவிடம் கையளித்தார் இந்திரா காந்தி. கச்சதீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதைத்தொடர்ந்து கச்சதீவில் இலங்கைக் கடற்படையின் பிரசன்னம் அதிகரித்தது.

தமிழர்களின் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்த பின்னர் இலங்கைக் கடற்படையின் பிரசன்னம் கச்சதீவில் மேலும் அதிகரித்தது. ஆயுதப்போராட்டம் நடைபெற்ற காலத்தில் தமிழ் நாட்டுக்கு அகதிகளாகச் செல்லும் தமிழர்களின் ஓய்விடமாகவும் (கச்சத்தீவில் தங்கி நின்று மறுநாள் பயணத்தை தொடரும் பிரதேசமாகவும்) கச்சதீவு விளங்கியது.

  • கச்சதீவு இலங்கையையும் இந்தியாவையும் பிரிக்கும் ஒரு தீவு . அதாவது தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையேயான எல்லையாக கச்சதீவு அமைந்துள்ளது . நெடுந்தீவிலிருந்தும் இராமேஸ்வரத்தில் இருந்தும் சம தூரத்தில் கச்சதீவு அமைந்துள்ளது.

இந்தக்கலப்பகுதியில் கச்சதீவுக்கு மீன் பிடிக்கச்சென்ற தமிழக மீனவர்கள் பலர் இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு ஆளாகியதுடன் பல தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்திய அரசு கச்சதீவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தமிழக மீனவர்களாலும் தமிழக அரசியல்வாதிகளாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதல்கள் காரணமாக யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது (இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன் பிடிப்பது மட்டுப்படுத்தப்பட்டிருந்தது) யுத்தம் முடிந்த கையுடன் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் வந்து மீன் பிடியில் ஈடுபடுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. நெடுந்தீவு தொடக்கம் மன்னார் வரையான வடபகுதி கடல் முழுவதும் இந்திய இழுவைப்படகுகளின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி விட்டது. இரு பகுதி மீனவர்களும் மோதிக்கொள்ளும் சம்பவங்களும் வட பகுதிக் கடலில் அடிக்கடி இடம் பெற்று வருகின்றன.

இவ்வாறு இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பில் வந்து மீன் பிடியில் ஈடுபடுவதற்கு இந்தியக்கடல் எல்லைக்குள் மீன்கள் இல்லாமையே அடிப்படைக்காரணம்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் இந்திய இழுவை மடிப்படகுகள் (bottom trawlers) இந்தியக் கடற்பரப்பில் உள்ள மீன்கள் முழுவதையும் அடியொட்ட வழித்து துடைத்து இழுத்துச்சென்றமையாலேயே அங்கு மீன்கள் இல்லாமல் போயுள்ளன.

இந்த நிலையிலேயே பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாடு கிளைத்தலைவர் அண்ணாமலையும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் கச்சதீவை இந்தியா நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்கள்; இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த விடயம் வடபகுதி மீனவர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. ஏற்கனவே வடபகுதிக் கடலை ஆக்கிரமித்துள்ள இந்திய மீனவர்களின் உரிமை சட்டபூர்வமாக்கப்பட்டால் வடபகுதி மீனவர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

அண்ணாமலையைப் பொறுத்த மட்டில் சீன ஊடுருவலைத் தடுக்கும் நோக்குடனேயே கச்சதீவை இந்தியா நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருப்பார்.

வடபகுதித் தீவுகளில் இந்தியா கண்வைத்துள்ளது என்பது மட்டும் மறுக்க முடியாத விடயம். தீவுப்பகுதி மீனவர்களுக்கு மட்டும் இந்தியா மண்ணெண்ணெய் வழங்க முற்படுவதின் பின்னால் நிச்சயம் ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கும் . கச்சதீவு தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்தான போது இரு நாட்டு மக்களினதும் அபிப்பிராயம் இன்றியே கைச்சாத்திடப்பட்டது என்ற குற்றச்சாட்டு இன்று வரை முன் வைக்கப்பட்டு வருகிறது.

ஈழத்தமிழர்களைப்பொறுத்த மட்டில் , கச்சத்தீவு இந்திய அரசின் கீழ் வருவது அரசியல் ரீதியாக வரவேற்கத்தக்கதுதான் . ஆனால் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விடயம். எனவே இந்த விடயம் தமிழக அரசியல்வாதிகளுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இந்த விடயம் உரிய முறையில் தமிழக அரசியல்வாதிகளுக்கு விளங்கப்படுத்தப்பட வேண்டும். அதை செய்ய வேண்டியவர்கள் தமிழ் அரசியல்வாதிகளே. செய்வார்களா?

ந.பரமேஸ்வரன்

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 3,994