செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

பாடசாலைகளின் சுகாதார செயற்பாடுகளை கண்காணிக்க விசேட குழு

பாடசாலைகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படுவதை கண்காணிப்பதற்கு பாடசாலை மட்டத்தில் விசேட குழு நியமிக்கப்படவுள்ளது என்று யாழ்ப்பாண பாடசாலை சுகாதார வைத்திய அதிகாரி நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

‘பாடசாலைகளை மீள சுத்திகரித்து கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முன்னெடுப்பதற்கான செயற்பாடுகள் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்படும்.

முக்கியமாக கை சுகாதாரம், சமூக இடைவெளி போன்றவற்றுக்குரிய செயற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் ஆசிரியர்களுக்கான செயற்திட்டங்கள் மற்றும் பெற்றோர்களுடனும் கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தக்காலகட்டத்தில் மாணவர்கள் அனைவரும் பாடசாலைக்கு வரும் பொழுது முகக்கவசங்களை கட்டாயமாக அணிந்து வருவதுடன் பாடசாலை சுற்றாடலுக்கு பிரவேசிக்கும் முன்னர் பாடசாலையின் முன் வைக்கப்பட்டுள்ள கைகழுவும் இடத்திற்கு சென்று தமது கைகளினை சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். வகுப்பறை வாசலில் தமது முகக் கவசங்களை கழற்றி பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்

ஒரு மீட்டர் இடைவெளிக்கு அமைவாக பாடசாலைகளின் வகுப்பறைகளை அமைக்குமாறு நாங்கள் பரிந்துரை செய்துள்ளோம். பாடசாலைகளில் மாணவர்கள் சுகவீனமுற்றால் அவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ஏற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல் இந்த காலகட்டத்தில் பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகள் திறக்கப்படாது. எனவே மாணவர்களுக்கு பெற்றோர்கள் வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவினையும் குடிநீரையும் வழங்கி பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுகின்றேன். அத்துடன் மாணவர்கள் ஏனைய மாணவர்களுடன் உணவைப் பகிர்ந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதார நடைமுறைகளை கண்காணிப்பதற்காக பாடசாலை மட்டத்தில் விஷேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார குழுவினர் ஒரு கிழமைக்கு ஒருமுறை பாடசாலைகளுக்கு விஜயம் செய்து பாடசாலையின் சுகாதாரம் தொடர்பில் அறிக்கைகளை எங்களுக்கு சமர்ப்பிப்பார்கள்.’ – என்றார்.

Related posts

சிறி சபாரத்தினத்தின் 34ம் ஆண்டு நினைவேந்தல்

G. Pragas

செம்பிய இராணுவத் தளபதி இலங்கைக்கு விஜயம்

reka sivalingam

வாழ்க்கைச் செலவு தொடர்பாக ஜனாதிபதி ஆராய்வு

கதிர்