செய்திகள் தலையங்கம்

பாண்டவர்களுக்கு ஒரு நீதி, புலிகளுக்கு ஒரு நீதியா?

பாண்டவர்கள் செய்தது
சகோதரப்படுகொலையா?

மகாபாரதப் போரின் முதல் நாள். குருஷேத்திரக் களத்தினுள் அர்ச்சுனனின் தேர் நுழைகின்றது. தேரோட்டிய கிருஷ்ணன். வீரத்துக்கும், ஒழுக்கத்துக்கும் பெயர் பெற்ற அர்ச்சுனன் போர்க்களத்துக்குள் நுழைந்ததுமே அவன் வீரம் இருந்த இடம் தெரியாமல் ஒளிந்து கொள்கின்றது. கையிலிருந்த வில் அவனையறியாமலே கீழே விழுகின்றது. கால்கள் துவள்கின்றன. கிருஷ்ணனுக்கு ஒரே ஆச்சரியம். அர்ச்சுனனை ஒருநாளும் அவன் அப்படிப் பார்த்ததில்லை.

“அர்ர்சுனா, என்னாயிற்று உனக்கு. எடு வில்லை, தொடு போரை” என்று சொன்னான். “கண்ணா, எப்படிப் போர் புரிய முடியும்? எனக்கு எதிராக நிற்பவர்கள் எல்லாமே நேற்றுவரை என் பிரியத்துக்குரியவர்கள். என் உறவுகள், சகோதரர்கள். அவர்களை எப்படி நான் போர் புரிந்து கொல்வேன்?” என்று அவன் கதறினான். ஆனால் மாயக்கண்ணன் புன்முறுவலோடு, அர்ச்சுனனுக்குப் போரியல் விதிகளையும், உலக நியதியையும் தெளிவாக எடுத்துச் சொன்னான்.

“போரில் சகோதரர்கள் என்றால் கூட எதிரிகளாகிவிட்டால், கொல்வதே தர்மம். தர்மத்தை நிலைநாட்ட யார், எவர் என்று பார்ப்பதை விடவும், தர்மத்தின் பக்கம் நிற்பவர்களைக் காப்பதும், அதர்மத்தை அழிப்பதுவுமே சுத்தவீரனுக்கு அழகு” என்ற ரீதியில் கண்ணனின் உபதேசங்களால் அருச்சுனன் தெளிந்தான்.

பாரதப்போரில், அதர்மத்தின் பக்கம் நின்ற பாண்டவர்களின் சகோதரர்களான கௌரவசேனை அழிக்கப்பட்டு, உலகில் தர்மம் நிலைநாட்டப்பட்டது. உலகமே பாண்டவர்களைக் கொண்டாடியது; கொண்டாடி வருகின்றது. எவருமே இதுவரை பாண்டவர்கள் பாசிசவாதிகள் என்றோ, சகோதரப்படுகொலை செய்து ஜனநாயகத்தைப் புதைத்தவர்கள் என்றோ ஒருபோதும் சொன்னதில்லை.

ஆனால், இதே செயலைச் செய்த விடுதலைப் புலிகளை மட்டும் ஒருசிலர் தம் அரசியல் நோக்கங்களுக்காக அல்லது சர்ச்சையை உண்டுபண்ணி தம் மீதான கவனக்கோரலுக்காக ‘புலிகள் சகோதரப் படுகொலை செய்தார்கள்’ என்ற ரீதியில் வசைபாடத் தொடங்கி விட்டனர். தேர்தல் காலத்தில் சிலருக்கு இப்படியான புலிவசை பாடுவதென்பது ஒரு வருத்தமாகவே சிலருக்கு மாறிவிட்டது.

புலிகள் ஒருபோதுமே வலிந்து சகோதர இயக்கங்களைப் போட்டுத் தள்ளியவர்கள் இல்லை. அத்தோடு மாற்று இயக்கங்களும் அந்தளவுக்கு புனிதங்களைப் பூசியவையும் அல்ல. இந்திய, இலங்கை அரசுகளின் இரகசிய ஏவலாளிகளாக அந்த இயக்கங்கள் மாறி, போராடப் புறப்பட்ட இலட்சியத்துக்கு எதிரான திசையில் பயணிக்கத் தொடங்கின. பொதுமக்களைக் கடத்துதல், கப்பம் பெறல், விடுதலைப் புலி உறுப்பினர்களைக் கொல்லல் என்று சினமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. அதனால் தான் அத்தகைய இயக்கங்களில் சித்திரவதைக்கென்றே சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் உயர்பதவியில்  இருந்தார்கள். மண்டையன் குழு என்றெல்லாம் தனிப்பிரிவுகள் கூட இருந்தன. வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களையும், புலிகளையும் அடைத்துவைத்து கொலை செய்யவென மிகப்பெரிய வதைக்கூடங்களை அமைத்த சில இயக்கங்கள் வைத்திருக்கவும் செய்தன.

இப்படி குள்ளநரிகளாக மக்களையும், தம்மையும் பலியெடுக்கும் பதர்களைப் பார்த்துக் கொண்டு ஓர்மமும்,ஒழுக்கமும் கொண்ட புலிகள் எத்தனை நாளுக்குத் தான் பதுங்கி இருக்க முடியும். ஒருகட்டத்தில் பொறுமையை உடைத்துக் கொண்டு, அவர்கள் குள்ளநரிக் கூட்டத்தின் மீது பாய்ந்தார்கள். புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது ஆடிய நரிகள் கூட்டம் சின்னாபின்னமாகி, களைகள் களையப்பட்டு, தமிழின விடுதலைப் போர் புனிதமானது. இதைச் சகோதரப் படுகொலை என்றால், மகாபாரதத்தில் வருகின்ற பாண்டவர்கள் செய்ததும் சகோதரப்படுகொலைதான். அப்படியல்லாமல் பாண்டவர்கள் , கொடிய கௌரவர்களைக் கொன்றமைதான் தர்மம் என்றால் புலிகள் செய்ததும் போரியல் தர்மமே. தர்மத்துக்கான போரில் , அநீதியின் பக்கம் எவர் நின்றாலும்-அது சகோதரனாக இருந்தாலும் கூட- அவர்கள் மீது பாரபட்சம் காட்டமுடியாது என்பதே மகாபாரதத்தில் கண்ணன் சொன்ன கீதா உபதேசம். ஆகவே புலிகள் செய்தது ஒருபோதும் பாசிசமோ, சகோதரப் படுகொலையோ கிடையாது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் என்ன இழப்பு வந்தபோதும், புலிகள் பக்கம் நின்றார்கள்.

மக்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பவர்களால் மக்களின் மனதுக்குள் இன்னமும்ம் இதய தெய்வங்களாக இருப்பவர்கள் யார் என்பது பற்றியோ,  தமிழ்த் தேசியம் பற்றியோ, புலிகளின் தியாகம் பற்றியோ புரிந்து கொள்ளமுடியாமல் போவதில் அதிசயமொன்றுமில்லைத்தான். ஆனாலும் தமது காவல் தெய்வங்களாக இருந்தவர்கள் மீது களங்கம் பூசுபவர்களை இனங்கண்டு, அவர்களின் அதிகார இருப்பியலை இல்லாதாக்கும் வல்லமை மக்களுக்கு மட்டுமே உண்டு. அதைக் காலம் வரும்போது கட்டாயம் செய்வார்கள்.

உதயன் ஆசிரியர் கட்டுரை – (01.03.2020)

Related posts

அவதூறு வழக்கில் பிரபல ஊடகவியலாளர் குற்றவாளியென தீர்ப்பு!

G. Pragas

நகரத்திலும் கிராமத்திலும் கல்வியில் சமநிலையை ஏற்படுத்த வேண்டும்!

Tharani

பல்கலைக்கு தெரிவான மாணவர்களுக்கான உதவி வழங்கி வைப்பு

reka sivalingam