செய்திகள் பிராதான செய்தி

பிரதமர் – கூட்டமைப்பு இடையே இன்று விவாதிக்கப்பட்டவை என்ன?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது.

இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். பிரதமருடன், அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் இரண்டு முக்கிய விடயங்கள் (1. இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு, 2. நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குதல்) தொடர்பில் விவாதிக்கப்பட்டது என்று சுமந்திரன் எம்பி தெரிவித்திருந்தார்.

இதேவேளை, புதிய அரசியலமைப்பை உருவாக்கி, ஒரு வருடத்தில இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என கூட்டமைப்பினரிடம், பிரதமர் வாக்குறுதியளித்தார் என அறியமுடிந்தது.

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து பேசிய பின்னரே, ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென தீர்மானிப்போமென பிரதமரிடம் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

“தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இழுபடுகின்றன. கடந்த ஐந்து வருடத்திலும் அது தீர்க்கப்படவில்லை. அடுத்த ஜனாதிபதி தேர்தலும் வந்து விட்டது. இதில் உங்கள் கட்சியிலேயே இன்னும் ஒற்றுமையேற்படவில்லை. உங்கள் கட்சியிலிருந்தே மூன்று வேட்பாளர்கள் எங்களுடன் கதைத்து விட்டார்கள். முதலில், யார் வேட்பாளர் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். அதைத்தான் முதலில் செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களுடனும் நாம் பேச்சு நடத்துவோம். தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை தீர்க்க அதிகபட்ச தீர்வு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக யார் நம்பிக்கையளிக்கிறார்களோ அவர்களிற்கே எமது ஆதரவு. அதற்காக அனைவருடனும் பேசிய பின்னரே தீர்மானம் எடுப்போம்” இவ்வாறு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அங்கு தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பிரதமர், ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால், அடுத்த ஒரு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளை முடித்து, இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என்று வாக்குறுதி வழங்கினர்.

இதேவேளை, கல்முனை விவகாரத்தில் வாக்களித்தபடி பிரதமர் நடந்து கொள்ளவில்லை என்பதை கூட்டமைப்பு எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து, பூர்வீகமாக குடியிருக்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளிற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். இதற்கு பிரதமரும் துணையாக இருக்கிறார் என்று கூட்டமைப்பு எம்பிகள் குற்றம்சுமத்தினர்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த பிரதமர் கல்முனை உப பிரதேச செயலகம் விரைவில் தரமுயரும் என மீண்டும் ஒரு வாக்குறுதியளித்தார். எல்லை மீள்நிர்ணய பணிகள் நடந்து வருவதாகவும், கல்முனையை தரமுயர்த்தும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், அது விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related posts

பிரேமதாச ஆட்சியில் பல துன்பியல் நிகழ்வுகள் தமிழருக்கு ஏற்படுத்தப்பட்டது

G. Pragas

விசுவமடு வன்புணர்வு; இராணுவ வீரர்கள் விடுதலை

G. Pragas

மண்சரிவில் சிக்கிய குடும்பமே பலியானது!

G. Pragas

Leave a Comment