இந்திய செய்திகள் செய்திகள்

பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனாத் தொற்று!

பிரபல இந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று (5) காலை முதலே பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இது தொடர்பாகப் பலரும் தொலைபேசியில் விசாரிக்க அழைக்கவே, உடனடியாக தனது முகப்புத்தகப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ்.பி.பி.

அதில் அவர் தெரிவித்ததாவது:

“கடந்த 2, 3 நாட்களாக உடல்நிலை சீராக இல்லை. சளி, காய்ச்சல் விட்டு விட்டு வருகிறது. இதுதவிர வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நான் இதை எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. எனவே நான் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தேன். எனக்கு மிக மிக இலேசான கொரோனா தொற்று இருப்பதாக அவர்கள் கூறினார்கள்.

என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சில மருந்துகளை உட்கொள்ளச் சொல்லியிருக்கிறார்கள். நான் இதை விரும்பவில்லை. குடும்பத்தோடு இருக்கும்போது இது மிகவும் கடினமான விஷயம். அவர்கள் நம்மை எப்போதும் தனிமையில் விடமாட்டார்கள். எனவே நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னுடைய நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் என்னை நல்லபடியாகப் பார்த்துக் கொள்கின்றனர்.

நான் நன்றாக இருக்கிறேன். இதுகுறித்து யாரும் கவலை கொள்ள வேண்டாம். சளி மற்றும் காய்ச்சல் மட்டுமே உள்ளது. காய்ச்சல் கூட தற்போது குணமாகிவிட்டது. இன்னும் இரண்டு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிடுவேன். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மாபெரும் கவனயீர்ப்பு!

கதிர்

ஐக்கிய தேசிய முன்னணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

G. Pragas

படங்கள் வரைந்த இளைஞர்- யுவதிகளை பாராட்டிய ஜனாதிபதி

reka sivalingam